பாடல் 5:
வசை அபராதமாய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான்
மிசையவர் ஆதியாய திரு மார்பிலங்கு விரிநூலர் விண்ணு நிலனும்
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர்
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே
விளக்கம்:
நாரையூர் செல்வனைத் தொழுவதால், கடல் அளவு குற்றம் செய்திருப்பினும் அந்தக் குற்றங்களால் ஏற்படும் பழிகள் நீக்கப்பட்டுத் தவமான தன்மை ஏற்படும் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். உவரோதம் என்ற சொல்லை உவர் ஓதம் என்று பிரித்து (உவர்=உப்புத்தன்மை ஓதம்=கடல்) கடலளவு செய்த பாவம் என்றும் கூறுவர். உவரோதம் என்றால் இடையூறு என்றும் பொருள் உண்டு. நாம் செய்த பாவங்கள் நாம் தவநிலை அடைவதற்கு இடையூறாக இருப்பதால் அவற்றைக் களையும் இறைவன் என்றும் பொருள் கொள்ளலாம். இசைதல் என்றால் நிறைந்து என்று பொருள். விண்ணும் மண்ணும் நிறைந்து இருக்கும் நிலைமை இதனால் புலப்படுத்தப்படுகின்றது. வசை=பழி; அபராதம்=குற்றம்; ஆசி= வாழ்த்து; திசையவர்=அனைத்து திசைகளிலும் பரவியுள்ள உலகத்தவர்; அமையாத காதல்= எத்தனை புகழ்ச் சொற்களை சொல்லிப் புகழ்ந்தாலும் நிறைவு அடையாத மனம் உள்ள அடியார்கள். நமது எண்ணங்களையும் சொற்களையும் கடந்து நிற்கும் இறைவனை, நாம் எத்தனை புகழ்ந்தாலும் அவனது புகழுக்கு எல்லை காண இயலாது அல்லவா.
ஆசி சொல்ல என்று தொடர் மூலம், உலகத்தவர் இறைவனுக்கு பல்லாண்டு பாடிய வழக்கம் சம்பந்தர் காலத்தில் இருந்ததை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அப்பர் பிரானும் தான் அருளிய திருவாரூர் பதிகத்தின் பாடலில் (4.20.10) அடியார்கள் பல்லாண்டு இசை பாடினார்கள் என்றும், அத்தகைய அடியார்களின் சித்தத்தில் இறைவன் உறைகின்றான் என்று கூறுகின்றார்.
நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன்
நாடிக் காண மாட்டாத் தழலாய நம்பானைப்
பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்குத்
தேடிக் கண்டு கொண்டேன் திருவாரூர் அம்மானே
இறைவனுக்கு பல்லாண்டு பாடுவது என்பது பண்டைய நாட்களில் இருந்த வந்த பழக்கம் என்று இந்த பாடல் மூலம் நமக்குத் தெரிய வருகின்றது. இறைவனை தங்களுக்குள் ஒருவனாக, தங்களுக்கு நெருங்கியவராக கருதி பல்லாண்டு இசைப்பது அருளார்களின் மரபு, சேந்தனார் சிவபெருமானுக்கு பல்லாண்டுப் பதிகம் பாடியது போன்று பெரியாழ்வார் திருமாலுக்கு பல்லாண்டுப் பாசுரம் பாடியுள்ளார். மணிவாசகரும் இறைவனுக்கு பல்லாண்டு பாடும் பழக்கம் உள்ளதை தனது பொற்சுண்ணம் பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடுகின்றார். திருமகளும், மலைமகளும், பூமகளும், கலைமகளும், இறைவனுக்கு பல்லாண்டிசை பாடுவதற்காக வரவேண்டும் என்று மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார்.
முத்துநல் தாமம் பூமாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல்தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும் நாமகளோடு பல்லாண்டு இசைமின்
சித்தியும் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன் ஐயாறன் அம்மானைப் பாடி ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே
சிவபெருமானுக்கு யாரெல்லாம் பல்லாண்டு பாடுகின்றார்கள் என்பதை ஒரு பட்டியல் இட்டு அப்பர் பிரான் ஒரு பாடல் பாடியுள்ளார் (பாடல் எண் 6.93.7). தண்டி, குண்டோதரன், பிருங்கி முனிவர், சங்குகன்னன், நந்தி, உலகத்தை படைத்த பிரமன், உலகத்தை அளந்த திருமால் என்று இந்த பட்டியல் நீளுவதை நாம் இந்த பாடலில் காணலாம். இருடி என்பது ரிஷி என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். பிருங்கி முனிவர் என்ற பொருளில் பிங்கிருடி என்றார் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எப்போதும் சிவபெருமானைச் சார்ந்து இருக்கும் பூத கணங்களும் பல்லாண்டு பாடுவதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். கடுக=விரைவாக.
தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்குகன்னன்
பண்டை உலகம் படைத்தான் தானும் பாரை அளந்தான் தானும்.
திண்டி வயிற்றுச் சிறு கண் பூதம் சில பாட செங்கண் விடையூர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீர் ஆகில் கடுக நும் வல்வினையைக் கழற்றலாமே
பொழிப்புரை:
உலகத்தவரே, உங்களைச் சாரும் பழிச் சொற்களும் இடையூறுகளும் நீங்கி, தவம் செய்யும் தன்மை உங்களை வந்தடைய வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களாயின், மேலான முக்தி உலகத்தில் இருப்பவனும், அனைவர்க்கும் முன்னே தோன்றியவனும், தனது திருமார்பினில் பொலிவுடன் திகழ்கின்ற முப்புரி நூலை அணிந்தவனும், விண்ணிலும் மண்ணிலும் உள்ளோர்களால் பல்லாண்டு பாடப்பட்டு வாழ்த்தப்படுபவனும், வானோர்களால் புகழப் படுபவனும், எத்தனை புகழ்ச்சொற்கள் கூறி புகழ்ந்தாலும் நிறைவு அடையாத மனத்தினை உடைய அடியார்கள் போற்ற நிற்பவனும் ஆகிய சிவபெருமான் பொருந்தி உறைவதும் செல்வச் செழிப்பு உடையதும் ஆகிய திருநாரையூர் தலத்தினை கை தொழுது வணங்குவீர்களாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


