திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

112. பொடியுடை மார்பினர் - பாடல் 3

பிச்சை ஐயம்

News image
Updated On :26 அக்டோபர் 2018, 6:30 pm


பாடல் 3:

    பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடிப் புன் தலை அங்கையில் ஏந்தி
    ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி
    வாள் நெடுங்கண் உமை மங்கை ஓர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்த்
    தாள் நெடு மாமலர் இட்டுத் தலைவன தாள் நிழல் சார்வோம்

விளக்கம்:

இந்த பாடலில் பிச்சை ஐயம் என்ற இரண்டு சொற்களையும் சம்பந்தர் பயன்படுத்தி இருப்பதை நாம் காணலாம். இரண்டும் ஒரு பொருளை உணர்த்துவது போல் தோன்றினும் சிறிய மாறுபாடு உள்ளது. ஐயம் என்பது இடுவோர் இரவலரைத் தேடிச்சென்று இடுவது.  பலி என்பதும் இதே பொருளில் வருகின்றது. பிச்சை என்பது இரப்போர் இடுவோரைத் தேடிச் சென்று பெற்றுக் கொள்வது. ஔவையார் இந்த மாறுபாட்டினை மிகவும் அழகாக உணர்த்துகின்றார். ஐயம் இட்டுண் என்று, தாங்கள் இடும் பிச்சை பெறுகின்ற ஆட்களைத் தாங்களே தேடிக் கொண்டு இடுவோர் செல்ல வேண்டும் என்று உணர்த்துகின்றார். பிச்சை புகினும் கற்கை நன்றே என்று, ஏழையாக இருப்போர் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு, தாங்களே தங்களுக்கு உதவி செய்வோர்களைத் தேடிக்கொண்டு செல்ல வேண்டும் என்று உணர்த்துகின்றார். அதனால் தான் பிச்சை இழிவாகவும் ஐயம் உயர்ந்ததாகவும் கருதப் படுகின்றது. பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. 

சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி=இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான். இந்த நிலை வாழ்க்கைக்கு அப்பர் பிரான் ஒரு சிறந்த உதாரணம். சமணர்கள் கொடுமைகளால், பல துன்பங்கள் அனுபவித்த போதும், எல்லாம் ஈசன் செயல் என்று ஏற்றுக் கொண்ட அவர், இன்பங்களை அனுபவித்த போதும் ஈசனது செயல் என்றே செயல்பட்டார். புகலூரில் உழவாரப் பணி செய்து வருகையில், தரையில் கிடந்த விலை மதிப்பில்லாத மணிகளையும் குப்பைகளாக கருதி, கல்லுடன் மண்ணுடன் கலந்து அவற்றையும் அப்புறப் படுத்தினார். மேலும் அரம்பையர்கள் அவரின் முன்னே வந்து நடனமாடி, அவரது கவனத்தைத் தங்கள் பால் ஈர்க்க முயற்சி செய்த போதும், மனம் பேதலிக்காமல், அவர்களை எனது வழியிலிருந்து விலகிச் செல்லுங்கள், அல்லையேல் திருவாரூர் பெருமான் உங்களை தண்டிப்பார் என்று எச்சரிக்கை விடுத்து, அகன்றார்.  

    பரந்து உலகேழும் படைத்த பிரானை
    இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்        
    நிரந்தரமாக நினையும் அடியார்
    இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே

இறைவன் பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை, இறைவன் ஏற்றிருக்கும் கபாலத்தில் இட்டு, மாயைகளை ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத் தான், என்ற உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் முதல் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபிரானை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். பெருமான் பலி ஏற்பது நமக்கு அருள் புரிவதற்காக என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுவது, திருமூலரின் கருத்தினை பின்பற்றியே.

    ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே
    பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
    சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்
    ஆர் தரு காதல் கூற அடியவர்க்கு உதவும் நாளில்

பெருமான் பலி ஏற்க வருவதையோ அவனது கையில் இருக்கும் பாத்திரத்தையோ நாம் இகழலாகாது என்பதை உணர்த்தும் வண்ணம் அருவருக்கத் தகாத வெண்தலை என்று செம்பொன்பள்ளி குறுந்தொகை பாடலில் (5.36.4) அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபிரானுடன் தொடர்பு கொண்ட காரணத்தினால், விலை மதிப்பில்லாத தன்மையை மண்டையோடு பெறுகின்றது. மேலும் உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை அந்த மண்டையோட்டில் இட்டு உய்வினை அடைவதற்கு உதவுதலால், நாம் அந்த மண்டையோட்டினை மற்ற மண்டையோடு போன்றது என்று கருதி வெறுக்கக் கூடாது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடல் உணர்த்தும் உட்கருத்து, பெருமான் மண்டையோட்டினை ஏந்தி திரியும் நோக்கத்தை உணர்ந்துகொண்டு, நமது மூன்று வகையான மலங்களையும் அவரது உண்கலத்தில் இட்டு நாம் உய்வினை அடையவேண்டும் என்பதே ஆகும். இவ்வாறு பலி ஏற்கும் போதும், அன்னையை விட்டு பிரியாமல் இருக்கின்றார் என்பதை உணர்த்தும் வண்ணம் இருவராய் இடுவார் கடை தேடுவார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மேலும் பெருமான் புரியும் இந்த செயல் உயிர்கள் பால் கருணை கொண்டு செய்யப்படும் ஒப்பற்ற செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், ஒப்பற்றவராகிய பெருமான் பல திருநாமங்கள் கொண்டவர் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார.    

    அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து
    இருவராய் இடுவார் கடை தேடுவார்
    தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார்
    ஒருவர் தாம் பல பேருளர் காண்மினே 

இறைவனுக்கு நாம் எதனை படைக்க வேண்டும் என்பதை திருவிளையாடல் புராணத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலில் பரஞ்சோதி முனிவர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. விநாயகர் வாழ்த்தாக அமைந்த இந்த பாடலில், ஆணவமலம், கன்மம் மற்றும் உலகப்பொருட்களின் மீதுள்ள பாசம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து (பசுபோதம் எனப்படும்) சோற்றுருண்டையாக அளிக்க வேண்டும் என்று கூறுகின்றார். உலகில் உள்ள பொருட்களை மூன்று வகையாக பிரித்து, பதி பசு பாசம் என்று வேதாந்தமும் சித்தாந்தமும் கூறுகின்றன. பதி என்பது இறைவனைக் குறிக்கும். பசு என்பது அனைத்து உயிர்களையும் பாசம் என்பது உயிர்களைப் பற்றியிருக்கும் பந்தங்களையும் குறிக்கும். உயிர் தன்னைப் பிணித்திருக்கும் பற்றுகளை அறவே ஒழித்து, தம்மை பீடித்துள்ள மூன்று மலங்களையும் நீக்கினால் தான்,  வினைகளை மேலும் பெருக்கிக் கொள்வதை நிறுத்த முடியும். அதனால் தான் மூன்று மலங்களை நாம் வைத்துக் கொள்ளாமல் இறைவனிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுரை கூறுகின்றார். தறுகண்=வலிமை மிக்க: தள்ளரிய=தளர்வு அடையாத அன்பு, தொடர்ந்து நிற்கும் அன்பு; பாசக் கள்ள வினை=வஞ்சகம் நிறைந்த ஆணவம், கன்மம் மாயை எனப்படும் மலங்கள்; 

    உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் என்றும் தறி நிறுவி உறுதியாகத்
    தள்ளரிய அன்பென்னும் தொடர் பூட்டி இடைப்படுத்தித் தறுகண் பாசக்
    கள்ள வினைப் பசுபோதக் கவளம் இடக் களித்துண்டு கருணை என்னும்
    கொள் அமுதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்

உயிர்களுக்கு இருக்கும் தான் என்ற அகந்தையை கழிக்கும் பொருட்டு இறைவன் பலி ஏற்கின்றார்  என்று அப்பர் பெருமான் சொல்லும் பாடலை (4.53.6) நாம் இங்கே காண்போம். பெருமான் பிச்சை ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல என்று தெளிவு படுத்தும் அப்பர் பிரான், நகைச்சுவையாக பெருமானது உணவு எது என்பதை குறிப்பிடுவதையும் நாம் இந்த பாடலில் காணலாம். நஞ்சு தான் அவர் விரும்பி உண்ணும் உணவு என்று இங்கே கூறுகின்றார்.  

    வானகம் விளங்க மல்கும் வளம்கெழு மதியம் சூடித்
    தானகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்
    ஊனகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
    ஆனகத்து அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே

பொழிப்புரை:

நீண்ட பாம்பினை அணிகலனாக உடலில் அணிந்தவனும், அனலைத் தனது கையில் ஏந்தி நடனம் ஆடுபவனும், பொய் சொன்னதால் இழிந்த தன்மை அடைந்த பிரமனது தலையினைத் தனது கையில் ஏந்தி ஊரூராகச் சென்று திரிந்து மக்கள் இடும் உணவினை பிச்சையாக ஏற்றுக்கொள்பவனும், அவ்வாறு ஏற்றுகொண்ட பிச்சையை தனது உணவு என்றும் மக்கள் தனக்களித்த பிட்சை என்று பலவாறு கூறுபவனும் ஆகிய பெருமானை, வாள் போன்று நீண்டு கூர்மையாக உள்ள கண்கள் கொண்டுள்ள உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டு பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று அவன் திருப்பாதங்களில் நீண்ட சிறந்த மலர்களை தூவி, அவனது திருவடிகளை பணிந்து அந்த தலைவனது திருவடிகளே பற்றுக்கோடு என நினைத்து அதனைக் சார்ந்து நிற்போமாக.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.