பாடல் 7:
அடல் செவி வேழத்தின் ஈருரி போர்த்து அழி தலை அங்கையில் ஏந்தி
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி
மடல் நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்த்
தடமலர் ஆயின தூவித் தலைவன தாள் நிழல் சார்வோம்
விளக்கம்:
மடநெடு=மடல் போன்று நீண்ட இதழ்களை உடைய; அடர் செவி=பரந்த செவி; அழி தலை=கிள்ளியெடுக்கப் பட்டு அழிந்த பிரமனின் தலை, தடமலர்=அகலமான இதழ்களை உடைய மலர்கள் என்றும் தடம் என்ற சொல்லுக்கு நீர்நிலை என்று பொருள் கொண்டு அல்லி தாமரை போன்ற நீரில் மலரும் மலர்கள் என்றும் இரண்டு விதமாக விளக்கம் கூறுகின்றனர். இரண்டும் பொருத்தமே. உண்டி=உண்பவன்; உடலிடு என்பதற்கு பதிலாக உடனிடு என்ற சொல்லை பாடபேதமாகக் கொண்டு, காலம் தாழ்த்தாமல் உடனே இட்ட பிச்சை என்று சிலர் பொருள் கொள்கின்றனர். உடலிடு பிச்சை என்பதற்கு உடலில் உள்ள அங்கமாகிய கைகளால் இட்ட பிச்சை என்றும் பெருமானின் அழகில் மயங்கிய தாருகவனத்து மகளிர் பரவசமைடைந்த தமது உடலுடன் இடப்பட்ட பிச்சை என்று இரண்டு விதமாக பொருள் கூறுகின்றனர். மூன்றாவது பாடலில் உள்ளது போன்று இந்த பாடலிலும் ஐயம் பிச்சை என்ற இரண்டு சொற்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்த தன்மை நமக்கு ஆண்டாள் பிராட்டியார் அருளிய திருப்பாவை பாசுரத்தின் இரண்டாவது பாடலை நினைவூட்டுகின்றது. தீக்குறள்=பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் வண்ணம் சொல்லப்படும் சொற்கள்;
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
பாவை நோன்பு இருக்கவிருக்கும் சிறுமியர்களை வரவேற்ற பின்னர், நோன்பு நோற்கும் சமயத்தில் எவை எவை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பன விவரித்து சொல்லப்படும் பாடல். கிரியை என்ற வடமொழிச் சொல் கிரிசை என்று திரிந்தது. பையத் துயின்ற= மெதுவாக உறங்குகின்ற: பாற்கடலில் உறங்குவது போல் தோன்றினாலும், உலகில் நடப்பவை அனைத்தும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவன் திருமால் என்பதை உணர்த்தும் பொருட்டு அறிதுயில் என்று கூறுவது வழக்கம். இங்கே அதனை சற்றே மாற்றி, பையத் துயின்ற பரமன் என்று குறிப்பிட்டு, பெருமாள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழவில்லை என்று இங்கே ஆண்டாள் உணர்த்துகின்றார். ஆந்தனையும்=பிச்சை பெறுபவர்கள், ஆம் (போதும்) என்று சொல்லும் அளவுக்கு; இந்த பாடலில் ஐயமும் பிச்சையும் என்று இரண்டு சொற்கள் இடம் பெறுவதை நாம் உணரலாம். இதற்கு விளக்கம் அளித்த பெரியோரால் ஐயம் என்பது ஆச்சாரியர்கள் துறவிகள் போன்ற பெரியோர்களுக்கு இடும் பிக்ஷை என்றும் பிச்சை என்பது குருகுலத்தில் பயிலும் மாணவர்களுக்கு இடப்படும் பிச்சை என்றும் விளக்கம் கூறியுள்ளனர். எனவே ஐயம் என்பது இடுபவர்கள் பணிந்து வணக்கத்துடன் மரியாதையுடன் இடப்படுவது என்பதை நாம் உணரலாம்.
பொழிப்புரை:
பரந்த காதுகளை உடைய யானையை, தன்னை எதிர்த்து வந்த மத யானையை, அடக்கி அதன் தோலை உரித்து, அதன் உதிரப்பசை கெடாத தோலை தனது உடல் மீது போர்த்தவனும்; கிள்ளி எடுக்கப்பட்டதால் அழிந்த பிரமனது தலையினை மண்டையோடாக தனது கையில் ஏந்தி தாருகவனத்து மகளிர்கள் தங்களது கைகளால் இட்ட பிச்சையை, ஐயம் உண்டி என்று பலவாறு கூறி ஏற்றுக் கொண்டவனும், மடல் போன்று நீண்ட இதழ்களை உடைய குவளை மலரினை ஒத்த கண்களை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் நன்றாக விரிந்து அகன்று மலர்ந்த சிறந்த மலர்களை தூவி, அவனது திருவடிகளை பணிந்து வணங்கி, அவனது திருவடி நிழலில் ஒதுங்குவோமாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


