அத்தியாயம் 76 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

கடுமையான பயிற்சி மூலமும், அறிவு விருத்தியுடனும், சமூகத்தின் ஆன்மிகத் தேவை, மருத்துவத் தேவை, உணவுத்  தேவை, சந்ததிப் பெருக்கம் உள்பட வளமை சார்ந்த எல்லா சடங்குகளை நிறைவேற்றித் தருபவரே சாமியாடி.
Published on
Updated on
7 min read

ஆதி சாமியடிகளின் குணங்களும் ரிக் வேத இருடிகளும்

பெயரில்லாத ஒரு மதம் இந்த உலகை ஒட்டுமொத்தமாக ஆட்சி புரிந்தது என்றால் அது சாமியாடியியம்தான். எழுதப்பட்ட நூல்களால் வழிநடத்தப்பட்ட மதங்கள் மக்களை மத அடையாளத்தோடு கூறுபோட்டது என்றால், எழுதப்படாத இம்மதம் அண்டார்டிகா போன்ற பனிப்பிரதேசமாகட்டும், சகாரா போன்ற பாலைநிலங்களாகட்டும், மேய்தல் புல்வெளியாக இருந்தாலும் சரி; அடர்ந்த காடாக இருந்தாலும் சரி; செழுமையான வயல்நிலமாக இருந்தாலும் சரி, கடல் சார்ந்த நிலமாக இருந்தாலும் சரி, மக்களை கூறுபோட்டதற்கான சான்றுகள் இல்லை. பொதுவாக உளவியல் சார்ந்தும், வளமை சார்ந்தும் இருந்த இதன் சிந்தனையும் செயலும் ஒரு உலகப் பொதுத்தன்மையுடன் அடையாளமாவது இதன் காரணமாகவே.

இம்மதத்தின் தோற்றம் எவ்வளவு பழைமை வாய்ந்தது என அறியமுடியாதுள்ளது. தொல்லியல் சான்றுகள்  ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ஆண்டுகள் பழைமையைக் காட்டும். 35000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மேல்நிலைப் பழைய கற்காலத்தில் இருந்து சாமியாடியியத்தின் உறுதியான சான்றுகள் கிடைத்து வருகின்றன. உலகின் எல்லா பகுதி மக்களும் ஏதோ ஒரு காலகட்டத்தில் சாமியாடிகளால் ஆளப்பட்டிருக்கின்றனர். அல்லது சாமியாடிகளின் ஆதரவு பெற்றவர்களால் ஆளப்பட்டிருக்கின்றனர். நூல்களால் வழிநடத்தப்படும் எல்லா மதங்களின் வேர்கள் இதிலிருந்துதான் கிளைத்துள்ளன. இறையியல் சார்ந்த கருத்துமுதல்வாதப் பள்ளியைச் சார்ந்த மதங்களாகட்டும், இறையியலை மறுத்த பொருள்முதல்வாதப் பள்ளியைச் சார்ந்த மதங்கள் ஆகட்டும் இதிலிருந்து விலக்கமில்லை. இந்தத் தொல்சமய சாமியாடிகளின் குணங்களும் ரிக் வேத இருடிகள் வெளிப்படுத்தும் குணங்களும் ஒன்றுபோலன. சாமியாடிகள் மக்களைக் கூறுபோடவில்லையே தவிர யுத்தம் புரிந்தார்கள். நம் ரிக் வேத இருடிகளைப்போல.

சாமியாடிகள்

மானுட இனத்தின் எல்லா கிளைகளிலும் தொல்சமய வழிபாட்டு நம்பிக்கைகளைச் சமூகம் நடத்திக்கொள்வது மற்றும் தனிமனிதன் அல்லது ஒரு குடும்பம் தங்களுக்குள் நடத்திக்கொள்வது என்ற இரு நடைமுறைகள் இருந்தன. துவக்கத்தில், ஒரு சமூகத்தின் வழிபாட்டு நம்பிக்கையை நடத்துபவராக சாமியாடிகள் உருவானார்கள். இவ்வாறு உருவான சாமியாடிகளின் உருவாக்கம் என்பது தனிக்குடும்பம் என்ற அமைப்பு உருவான பிறகு தனிக்குடும்பத்துக்கு என்றும், பிறகு தனிநபரின் நலனும் வளமையைக் கருதியும் செய்தனர்.

இந்த வகையில், தொல்சமய அல்லது வழிபாட்டு நம்பிக்கைகளான ஆவி/ஆன்மா வழிபாடு, உயிரியம்/மனா வழிபாடு, இயற்கை வழிபாடு, குலக்குறி வழிபாடு, விலக்கு, போலிப்பொருள் வழிபாடு, முன்னோர் வழிபாடு ஆகியவற்றை தம் கைக்குள் எடுத்துக்கொண்டவர்களாக ஆதி சாமியாடிகள் உள்ளனர். இன்று நாம் பூசாரிகள் என்று அழைப்பவர்களிடமிருந்து இவர்கள் வேறானவர்கள்; நவீன மாந்திரீகர்களிடமிருந்தும் வேறானவர்கள். அதேசமயத்தில், பூசையும், மந்திரம் ஓதுவதும், மாந்திரீகமும் இவர்கள் பணிகளில் ஒன்றே.

ஆதி சாமியடிகளின் குணங்கள்

இன்று சாமியாடிகள் என்று குறிப்பிடும்பொழுது, அருள்வாக்கு தருபவர்கள்தான் நம் நினைவுக்கு வருகின்றனர். ஆதியில், அருள்வாக்கு சொல்வது என்பது சாமியாடிகளின் ஒரு செயல் மட்டுமே. தொல்பழங்காலத்தில் இருந்தும் நாம் சாமியாடி குணங்கள் வளர்ந்து வருவதைக் காணமுடிகிறது. அதனால், இன்றைய நிலையினை மட்டும் அடையாளப்படுவதில் இருந்து வேறுபட்டு அவர்களின் பன்முகத்தன்மையை அடையாளப்படுத்தும் ஒரு சொல்லாக இங்கு ‘‘ஆதிசாமியாடி’’ பயன்படுத்தப்படுகிறது.    

துவக்கம் முதலே, சமூகத்தின் நல்ல மூளைச் செயல்திறன் மிக்க ஒருவர் சாமியாடி ஆனார். சாமியாடிகள் ஒருபோதும் சந்ததி வழிப்பட்டோ, மரபு வழிப்பட்டோ உருவாவதில்லை. அதனை சமூகமும் ஏற்பதில்லை. கடுமையான பயிற்சி மூலமும், அறிவு விருத்தியுடனும், சமூகத்தின் ஆன்மிகத் தேவைகளை, மருத்துவத் தேவைகளை, உணவு முதலான அன்றாட வாழ்வியல் தேவைகளை, சந்ததிப் பெருக்கம் உள்பட, வளமை சார்ந்த எல்லா சடங்குகளை நிறைவேற்றித் தருபவரே சாமியாடி ஆயினர். ஆண்-பெண் பால் வேற்றுமையற்று சாமியாடிகள் உருவானார்கள். சாமியாடிகளில் இரு பாலினத்தினரும் சமமாக மதிக்கப்பெற்றனர். மக்களின் நோய் முதலான தீங்குகளை நீக்குவதில் யார் சிறந்தவரோ அவரே மக்களால் போற்றப்படுபவராகவும், சமூகத்தில் உயரிடம் கொண்டவராகவும் ஆனார். சாமியாடிகள் தங்கள் அறிவுக்கு உள்பட்ட எல்லாச் செயல்களையும் செய்தனர். ஆவியுலத்துடன் தொடர்பு, வேற்றுலக சஞ்சாரம், தாவரவியல், விலங்கியல், ரசாயனம் என்ற அறிவியியல் துறை சார்ந்த அறிவு, அவற்றின் பயன்பாடு போன்றவற்றில் அவர்களின் செயல்பாடு வளர்ந்தது.

சாமியாடிகளும் சாமியாடியியமும் (Shamanism and the Shamans)

ஆங்கிலத்தில் Shamans and the Shamanism என்று சொல்லப்படுவதுதான், இங்கு சாமியாடிகளும் சாமியாடியியமும் என்று குறிக்கப்படுகிறது. மானுட வரலாற்றில் தொல்பழங்காலத்திலும் சரி வரலாற்றுக் காலத்திலும் மக்களின் பொதுவாழ்வியலை ஒருங்குபடுத்துபவர்களாக, அவர்களின் ஆன்மிக நம்பிக்கைகளை நிறைவேற்றுபவர்களாக, நோய் தீர்ப்பவர்களாக, குறி சொல்பவர்களாக என்று சாமியாடிகளின் பங்களிப்பு பெரிது. வேட்டைச் சமூகத்தில் சாமியாடிகளே வேட்டையை வழிநடத்துவர்களாகவும், போர்களை வழிநடத்துபவர்களாகவும், ஆயுதம் ஏந்தி போர்க்களத்தில் முன்நிற்பவர்களாகவும், மக்களின் உளவியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவர்களாகவும் இருந்தனர்.

வானவியல், ஜோதிடம், ரசவாதம் (வேதியியல்), தாவரவியல், விலங்கியல், பெளதிகம் போன்ற அறிவுப் புலன்களில் தேர்ந்தவர்களாக இச்சாமியாடிகள் தங்களை வளர்த்தெடுத்துக் கொண்டனர். இவற்றை, தகுதியான சாமியாடி குணங்களை வளர்த்துக்கொண்ட சமூகத்தின் உறுப்பினர்களுக்குத் தனிப்பயிற்சியின் மூலமும் வாய்மொழியாகவும் கற்றுத்தந்தனர். இது அண்மைக்காலம் வரை எழுதப்படாத மந்திரங்களாகவே, அறிவுப்புலன்களாகவே இருந்தன. இன்றும் பெரும்பான்மையும் அவ்வாறே இருக்கின்றன.

சாமியாடியியம், மானுடர்களிடையே உள்ள ஒரு மதமா/சமயமா என்ற கேள்வி அவ்வப்பொழுது எல்லாத் தரப்பிலிருந்தும் எழுப்பப்படுவது உண்டு. அது தொல்சமய நிலையா என்றும் ஆலோசிக்கப்படுவது உண்டு. மத நூல்களால் வழிநடத்தப்படும் ஒருவன் பண்பட்டவனாகவும், அவனது சமூகம் பண்பட்ட சமூகமாகவும் ஆக்கப்படுகிறது. மத நூல்களாக, அதாவது எழுதப்படாத வாழ்வியல் நெறிமுறைகள், சமூகக் கட்டுமானங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் கொண்டு இயங்கும் மனிதன் பண்படாத மனிதனாகிறான்; அவனது சமூகம் பண்படாத சமூகமாக்கப்படுகிறது. சாமியாடிகளுக்கும் மத குருவுக்கும் உள்ள வித்தியாசத்தையும் இந்த வரையறை வழங்கிவிடுகிறது. இந்த வித்தியாசத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளப்படும்பொழுது, சாமியாடியியத்துக்கும் அதாவது சாமியாடி கோட்பாடுகளுக்கும் மதங்களுக்கும் உள்ள வித்தியாசம் நன்கு புலனாகும். சாமியாடிகளின் வழித்தோன்றல்கள்தாம் ஆதிமத குருமார்கள் என்பது ஆச்சரியமான வரலாற்று உண்மை. இன்றை மத குருமார்கள் என்பர்களின் உருவாக்கம் அந்தந்த சமய நூல்கள் வழிப்பட்டதாகவும், அச்சமயங்கள் வளர்த்தெடுத்துக்கொண்ட மரபுகளின் வழிப்பட்டதாகவும் நிகழ்கிறது.

சமூகத்தின் தேவை அல்லது நன்மை கருதி உருவான தொல்சமய சாமியாடிகளில் இருந்து தற்கால மதகுரு வரை சாமியாடிகள் கடந்துவந்த ஐந்து நிலைகளைக் காணமுடிகிறது. இதனை ஐந்து காலகட்டங்களாகவும் கொள்ளலாம்.{pagination-pagination}

1. நிலை ஒன்று

சாமியாடி உருவாக்க நிலை. இந்நிலை, சமூகத்தை வளமையாக வழிநடத்தும் நிலை. அநேகமாக, இந்நிலை வேட்டைச் சமூகமாக, சிறு சிறு கூட்டமாக மக்கள் வாழ்ந்த நடோடிப் பண்பு நிலவிய காலகட்டமாகும். சமூகத்தின் எல்லாத் தேவைகளைக் குறித்தும் கடுமையான அக்கறை கொண்டவர்களாக இவர்கள் வளர்ந்தனர். இவர்கள் இரண்டாம் நிலை அடைய நெடுங்காலம் ஆனது. இவர்களின் இரண்டாம் நிலைக் காலகட்டம் என்பது, இனக்குழு சமுதாயம் உருவாக்கமும், இவர்கள் வளர்த்துக்கொண்ட பலதிற அறிவோடும் அடையாளம் ஆகும் காலகட்டமாகும்.

2. இரண்டாம் நிலை

இனக்குழு தலைமை உருவான காலகட்டத்தில், இனக்குழுவின் தலைமை நிலையில் சாமியாடிகள் இருந்த காலகட்டத்தை இவர்களின் இரண்டாம் நிலையாகக் குறிப்பிடலாம். வேட்டை, மேய்த்தல், வேளாண் போன்ற நிலம் சார்ந்த வாழ்வியலைக் கொண்ட சமூகத்திலும் சரி, நீர் சார்ந்த வாழ்வியலைக் கொண்ட சமூகத்திலும் சரி இத்தலைமை உருவாகியிருந்தது. ஒருவகையில், ரிக் கால மேய்த்தல் சமூகத்தின் தலைமைப் பிரதிநிதிகளாக உள்ள பரத்வாசர், வசிட்டர், விசுவாமித்திரர் போன்றோர் இந்நிலையின் பிரதிநிதிகளாகக் கொள்ளலாம். உண்மையில், இவர்கள் தம் தம் சமூகத்தைப் பொருத்து இரண்டாம் நிலையையும், பிற சமூகம் சார்ந்து இயங்கும்பொழுது நான்காம் நிலையையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக உள்ளனர்.

3. மூன்றாம் நிலை

இனக்குழு தலைமையின் மத்தியக் காலகட்டத்தில், இனக்குழு தலைமை தனியாகவும், வழிபாடு சமயத் தலைமை தனித்தனியாகப் பிரிந்த நிலை. உடல் வலிமை பெற்ற, போர்த்திறமை மிக்க தலைமை தனியாகவும், வளமைச் சடங்குகள் நிகழ்த்தும் தலைமையாக சாமியாடிகள் தனியாகவும் பிரிந்த காலகட்டமாகும். ரிக்கில் இந்த நிலையைக் காணமுடியவில்லை.

4. நான்காம் நிலை

பல இனக்குழுக்களின் தலைமையாக அரசுகள் உருவானபொழுது இருந்த சாமியாடிகளின் நிலை நான்காம் நிலையாகும். இக்காலகட்டத்தில், ஒரு இனக்குழு வேறொரு இனக்குழுவின் வழிபாடு, சமயத் தலைமையை அமர்த்திக்கொள்ளும் நிலை நிலவிய காலகட்டமாகும். ரிக் கால இருடிகள் பலரும் இந்நிலையையும் பிரதிநிதித்துத்துவம் செய்பவர்களாக உள்ளனர். புல்வெளிகளையும், பசுமையான சமவெளிகளையும் நாடு தொடர்ந்து இடம்பெயர்ந்த மேய்த்தல் சமூகம், பல சமயம் புலம் பெயர்ந்த இடத்தின் தலைமையை ஏற்று தம் வாழ்வியலை அமைத்துக்கொள்வர். அல்லது அண்டைப் பகுதிகளை தம் ஆளுமைக்கு உட்படுத்திக்கொள்ளும் அரசுகள் உருவாகும்பொழுது, ஒன்றுக்கும் மேற்பட்ட இனமக்களும் ஒன்று கூடி வாழ்ந்தனர். அதேசமயத்தில், அவ்வாறு வந்தவர்களின் திறமைகளை ஏற்று சாமியாடி அதாவது, போர்த்தளபதி, அமைச்சர், புரோகிதர் போன்ற சமூகத்தின் உயர் பதவிகள் அளிக்கப்பட்டன. ரிக் வேத பரத்வாசர், வசிட்டர், விசுவாமித்திரர் போன்றோர் இந்நிலையைப் பிரதிபலிப்பவர்களாக உள்ளனர்.

5. ஐந்தாம் நிலை

நூல்களால் வழிநடத்தப்படும் சமயத் தலைமை அல்லது மத குருக்கள்; பெளத்தம், சமணம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்று மத நூல்களால் வழிநடத்தப்படும் மதத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் அல்லது மத குருக்கள். இம்மத குருக்கள், சாமியாடியின் எல்லா குணங்களையும் பெற்றவர்கள் அல்லனர். இவர்கள் வழிபாடு, சடங்கு, இறையியலில் அல்லது உலகாய்த மரபில் அதிகாரம் கொண்டவர்கள். இவர்கள் மந்திர, தந்திரங்களில் இருந்தோ, மருத்துவத்திலிருந்தோ விலகியவர் அல்லனர். இக்காலகட்டத்தில், இவர்கள் கைவிட்ட முக்கியச் சாமியாடிகளின் குணங்கள் ஆயுதம் ஏந்துவது; படைகளுக்குத் தலைமை தாங்குவது; போர்க்களத்தில் முன் நிற்பது.{pagination-pagination}

ரிக் வேத இருடிகளின் குணங்கள்

ரிக் வேத இருடிகள் அனைவருமே பாடல் இசைப்பவர்கள். அப்பாடல்கள் மந்திரங்களாக ஓதப்படுபவை. இவர்கள் ஆயுதம் ஏந்தி தன் சமூகத்துக்கும் தான் சார்ந்திருந்த சமூகத்துக்கும் வெற்றிகளையும், வளத்தின் செழிப்புக்கும் காரணமாக விளங்கியவர்கள். இவர்களே மருத்துவர்கள்; இவர்களே பூசைகளும், பலிகளையும் புரிந்த புரோகிதர்கள்; எதிரிகளையும், பகைவர்களையும் வீழ்த்தும் மந்திரங்களையும், தந்திரங்களையும் உபயோகிப்பவர்கள். தொல்பழங்காலம் முதல் அரசுகளின் உருவாக்கக் காலகட்டம் வரை வளர்ச்சியடைந்திருந்த சாமியாடிகளின் குணங்களை இவர்கள் தப்பாமல் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

மேய்த்தல் தொழில் புரிந்ததால், இவர்களது மந்திரங்களும் சடங்குகளும் மேய்த்தல் தொழில் சார்ந்த மந்திரங்களாகவும் சடங்குகளாகவும் விளங்கின. இதனால் இவர்களிடம் இருந்து தொன்மைச் சமய முறைகளான ஆவி/ஆன்மா வழிபாடு உயிரியம்/மனா வழிபாடு இயற்கை வழிபாடு, குலக்குறி வழிபாடு, விலக்கு, போலிப்பொருள் வழிபாடு, முன்னோர் வழிபாடு போன்ற அனைத்தும் தனித்தும் இணைந்தும் வெளிப்பட்டுள்ளன. இவற்றுள் போலிப்பொருள் வழிபாடும், முன்னோர் வழிபாடும் பெரும் இடத்தை நிரப்பியுள்ளன.

சாமியாடியியத்தின் பின்னணியில்தான், ரிக் வேத பலிச் சடங்குகளான அஸ்வமேதம், புருசமேதம் போன்ற வேள்விச் சடங்குகள் மற்றும் சோம யாகம் போன்ற வேறு உலகங்களுக்குச் சஞ்சாரம் செய்ய உதவும் பொருள்களின் மிகையான பயன்பாடு ஆகியவற்றின் சரியான அக்காலப் பொருளை நேரடியாக நம்மை அடையச் செய்யும். இல்லையென்றால், நூல்களால் வழி நடப்படும் மதவழிப்பட்ட பொருள் கொள்ளலில், இவை அனைத்துமே மறைபொருளைத் தாங்கிய சூக்தங்களாகவே நேரடிப் பொருள் வேறு, உள்ளார்ந்த பொருள் மறைப்பொருள் வேறு என்று இருக்க வேண்டியதே. பலிகள், போலிப் பொருள் மற்றும் ஒத்த மந்திரத்தின் வகைப்பட்டில் இணைய, ரிக் வேத இருடிகளின் யுத்தங்கள் முன்னோர் வழிபாட்டில் இணைகின்றன. இந்த யுத்தங்கள்தான் இவர்களின் போர்க்கடவுளான “இந்திரனை” இவர்களுக்கு வழங்கியது.

ரிக் வேத இருடிகளின் செயல்கள் அனைத்தும் மந்திரம் என்ற சொல்லால் அடையாளப்படுத்தும் மரபு நம்மிடை உருவாகிவிட்டது. மந்திரமும் மந்திரத்தைக் கையாண்ட சாமியாடிகளின் குணங்களும் நிலமும் பொழுதும் சார்ந்து பல வடிவங்களைப் பெற்றது என்பது மேலே குறிக்கப்பட்டது. வீரம் வித்தி வீரத்தை விளைவிப்பது என்பது அதன் வடிவங்களில் ஒன்று. பின்னர் இதனோடு ஆவி வழிபாடு இணைந்தபொழுது, வீரத்தை வித்தியவர்களை வழிபட்டு வேண்டப்படும் வளமை; நன்மை, நலம் ஆகியவை பெறுவதாகிறது. இதனாலேயே, மூத்தோர் வழிபாடு மதம் என்ற சாயலற்றே வளர்ந்தது. பின்னர் மதக் கடவுளர்களாக மூதாதையருள் சிலரே ஆகினர். ரிக்கில் போற்றப்படும் இந்திரன் வழிபாடு, பிராமணியம் என்ற சமயம் உருவான பிறகு தேய்ந்ததும் இதன் காரணமாகவே. பிராமணியத்தில் போர்க்கடவுள்களுக்கு வேலையில்லை.

வீரம் வித்தி வீரம் அறுத்தல்

போரோடு தொடர்புடைய வீரம் வித்தி வீரத்தைப் பன்மடங்கு விளைவிப்பது என்ற மந்திரத்தின் அடிப்படையில், நாம் மகாபாரதத்தில் அரவான் பலியினைக் காணலாம். அரவான் பலி நிஜமான மனிதப் பலி. இது வீரம் வித்தி வீரத்தை அறுப்பது என்ற ஆதிமனித நம்பிக்கையின் தொடர்ச்சியின் வயப்பட்டதாக இருக்கலாம். ஆனால், ரிக் வேதத்தின் புருசமேதம், வீரத்தின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டது என்று யூகிக்க முடியவில்லை. புருசமேதத்தின் தோற்றத்துக்கான அடிப்படைகளை அறிந்துகொள்ள முடியாதபடி இன்றைய விளக்கங்கள் உள்ளன. ஆனால், ரிக்கின் பல சடங்குகளும் வளமைசார்ந்தாக இருப்பது இதன் அடிப்படையிலானதே எனக் கொள்ளலாம்.{pagination-pagination}

தயானந்தர் போன்றவர்களின் கருத்தாக, அஸ்வமேதம் வளமை சார்ந்து நிகழ்த்தப்பட்ட சடங்கு எனப் பொருள்படும்படியுள்ள “அசுவமேதம் என்பது குதிரையைப் பலி கொடுத்தல் இல்லை என்றும்; அது கூடுதல் உற்பத்தியைத் தர நிலத்தைச் சீர்திருத்தும் யாகம் என்பர். அதேபோல, புருசமேதம் என்பது மனிதனை உலகாயுத, ஆன்மிக வாழ்க்கையில் செம்மைப்படுத்துவது” என்பர். (யசூர் வேதம் - தமிழில் ம.ரா. ஜம்புநாதன், (கிரிஃபித் குறிப்பு தமிழில்), ப. 720.)

தயானந்தர்

தயானந்தர் அஸ்வமேதத்தையும், புருசமேதத்தையும் வளமைச்சடங்கு என்று அடையாளம் கண்டதும், மனிதனை உலகாயத மற்றும் ஆன்மிக வாழ்க்கையில் செம்மைப்படுத்துவது என்று கூறுவதும் வரவேற்கத்தக்கது. இங்கு உலகாயதம் என்பது பொருள்முதல்வாதமாகும். வேள்வியில் விலங்குப் பலி என்பது இல்லை என்று இவர் கூறுவது, தற்காலத்திய சித்தனை மரபினை அடியொட்டி கூறுவதாகும். ஏறத்தாழ 3500 ஆண்டுகளில், மேய்த்தல் தொழில்புரிந்த தொல்குடி ரிக் சமூக வாழ்க்கையில் இருந்து இன்றைய நவீன சமூகமாக வளர்ச்சி அடைந்ததுவரை, என்னென்ன மாற்றங்களை ஏற்றுக்கொண்டும், புதியவற்றை புகுத்திக்கொண்டும், தேவையற்ற பழையதை கழித்துக்கொண்டும் வந்துள்ளது என்பதை கணக்கில் கொள்ளாத ஒன்றாகும். இன்றுள்ள நிலையிலேயே 3500 வருடங்களுக்கு முன் இருந்தது எனக் கொள்வது, மானுட அறிவியலைப் புறந்தள்ளியதாகவே இருக்கும்.

யாகத்தில் விலங்குப் பலி வளமை சார்ந்து நடத்தப்பட்ட ஒன்று என்பதனை முழுமையாக அறிந்துகொள்ள நமக்கு உதவுவது தொல்சமயத்தின் மந்திரமே. ரிக் பலிச் சடங்கை சமயத்துடன் பொருத்திப் பொருள் கொள்ள விளையும்பொழுது, மனித இனம் தொன்மைக் காலத்தில் இருந்து கைக்கொண்டிருக்கும் மந்திரத்தின் உண்மைப் பொருளை இழந்துவிடுகிறோம். அதாவது, சாமியாடிகள் கைக்கொண்டிருந்த மந்திரப்பொருளை இழந்துவிடுகிறோம். அது தொன்மைச் சமய நிலையின் பரிமாணம் என்னும்பொழுது மட்டுமே நிறைய உண்மைகளை நாம் அடைந்துகொள்ள முடியும்.

அதே சமயத்தில், சமயங்கள் மந்திரத்தை கைக்கொள்ளாமல் இருந்ததில்லை. மந்திரம் பற்றி மானுடவியளார்கள் குறிப்பிடும்பொழுது, “தொன்மைச் சமயம் தொடங்கி இன்றைய சமயங்கள் வரை அனைத்து படிமலர்ச்சி நிலைகளிலும் மந்திரம் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது” என்று சுட்டிக்காட்டுவர். இந்நிலையில், மந்திரத்தின் மீது ஏற்றிக்கூறப்படும் தற்கால சமயக் கருத்துகளை நீக்கியே ஆதிமந்திரத்தின் உண்மைப்பொருளை அடையாளம் காணவேண்டி உள்ளது. ஏனெனில், மந்திரத்தின் துவக்க நிலை என்பது மனித இனத்தின் பழைய கற்கால வாழ்க்கையில் இருந்து அடையாளமாகிறது. படிப்படியாக, வேட்டைச் சமூகம், மேய்த்தல் சமூகம், நீர்நிலைச்சார் சமூகம், வேளாண் சமூகம், உணவு சேகரிக்கும் சமூகம், உணவு உற்பத்தி சமூகம், உணவு அபகரிக்கும் சமூகம், உழுவித்து உண்ணும் சமூகம், உழும் சமூகம் என எல்லா சமூக வாழ்வியலிலும், வாழ்வியலுக்குத் தகுந்த மாற்றங்களுடன் மந்திரம் இடம்பெற்றுகிறது.

ரிக் சூக்தங்களும் போர்களும்

மேய்த்தல் தொழில் புரிந்தவர்களின் தலைமைக் குருக்களாக இருந்தவர்கள் இயற்றிய ரிக் சூக்தங்கள், குறிப்பாக சமூகத்தின் நலனை, வளத்தை எதிர்நோக்கியது. இவர்கள் வளம் போர்களால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. போர், கொள்ளையிடுவதை மையமிட்டதாகும். கொள்ளைப் பொருள், சமூகத்தின் உறுப்பினர்களிடையே பகிரப்படும். இதனால், ரிக் வேத இருடிகள் போர் புரிந்து தம்தம் சமூகத்துக்கு வளத்தைப் பகிர்ந்தனர். போரில் வெற்றியை ஈட்டித் தருபவன் இந்திரன் ஆனான். இந்திரனை ஒத்த போர்வீர்களாக அக்னி, சோமன், அரியமான், வருணன், மித்திரன் போன்று சிலரும் குறிப்பிடப்படுகின்றனர். ரிக்கில் இவர்கள் இந்திரனுக்கு சமமானவர்கள்.

ரிக் வேத இருடிகளின் யுத்தங்கள்

ரிக் வேதத்திலிருந்து இருடிகள் புரிந்த அல்லது இருடிகளால் வழிநடத்தப்பட்ட மூன்று வகை யுத்தங்களைக் காண்கிறோம்.

1. காவிட்டி அல்லது காவிஷ்டி என்ற ஆநிரை தொடர்பான போர். தமிழ் மரபில் இது பூசல் என்றே குறிக்கப்படும். காவிஷ்டி என்றால் “ஆநிரைகளை விரும்புதல்” என்றும் பொருள் கொள்வர்.

2. இனக் குழுக்களுக்குள் போர் அல்லது உட்பூசல்.

3. பகை அரசர்கள் மீது நிகழ்த்திய போர்கள்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com