இலக்கியக் காதலர்களின் நூலகம் 'ஞானாலயா'!

நூல்களைக் காதலித்தவர்கள், அதனாலேயே ஒருவரையொருவர் காதலித்து- இணைந்து- காதல் கோட்டையை (அறிவுக்கோட்டை) ஞானாலயா ஆய்வு நூலகமாக வடித்திருக்கிறார்கள் கிருஷ்ணமூர்த்தி- டோரதி.
ஞானாலயா ஆய்வு நூலகம்
ஞானாலயா ஆய்வு நூலகம்

நூல்களைக் காதலித்தவர்கள், அதனாலேயே ஒருவரையொருவர் காதலித்து- இணைந்து- காதல் கோட்டையை (அறிவுக்கோட்டை) ஞானாலயா ஆய்வு நூலகமாக வடித்திருக்கிறார்கள். அது தற்போதைய நவீனத் தேவைக்கேற்ப டிஜிட்டல்மயமாகவும் மாற்றப்பட்டு வருகிறது. யுகங்களைக் கடந்தும் கிருஷ்ணமூர்த்தி- டோரதியின் காதல் வாசிக்கப்படும்.

அரசுப் பள்ளியில் பாரதியைப் பற்றி பா. கிருஷ்ணமூர்த்தி பேசிய உரையில் டோரதிக்குத் துளிர்த்த காதல், 6 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்விணையர்களாக்கி, 50 ஆண்டு கால வாழ்வில் தென் தமிழகத்தின் பிரம்மாண்ட தனியார் ஆய்வு நூலகமான ஞானாலயாவைக் கட்டி எழுப்பியது என்று சொன்னால், அது மிகைப்படுத்துதலாகுமா, இல்லை- அதுதான் மெய்!

1965ஆம் ஆண்டு மண்ணச்சநல்லூர் அரசுப் பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பா. கிருஷ்ணமூர்த்தி. இளைய ஆசிரியை டோரதி சாமிக்கண்ணு. இலக்கிய நிகழ்ச்சியொன்றில் பாரதியைப் பற்றி முழங்குகிறார் கிருஷ்ணமூர்த்தி. அந்த முழக்கத்தில் லயித்த டோரதிக்கு கிருஷ்ணமூர்த்தியின் மீது காதல் துளிர்த்தது.

இருவரும் இலக்கியப் பணிகளில் இணைந்தே பயணிக்கிறார்கள். காரைக்குடியில் 'புராகிரசிவ்' பதிப்பகத்தின் உரிமையாளர் விஆர்எம் செட்டியாரை இருவரும் இணைந்தே சந்திக்கிறார்கள். தாகூர் எழுதிய 'கிரசென்ட் மூன்' என்ற நூலை டோரதி ஒரே நாள் இரவில் மொழிபெயர்க்கிறார். அது நூலாகிறது. நீங்கள் வாழ்க்கையிலும் இணைந்தே பயணிக்கலாமே என முன்மொழிகிறார் விஆர்எம் செட்டியார்.

கிருஷ்ணமூர்த்தி- டோரதி
கிருஷ்ணமூர்த்தி- டோரதி

1971-ல் மதுரையில் பதிவுத் திருமணம். மொத்தமே 8 பேர் தான் திருமணத்தில் பங்கேற்றவர்கள். கிருஷ்ணமூர்த்தி இந்து; டோரதி கிறிஸ்தவர். இருவரின் குடும்பத்தினரும் இவர்களின் காதல் திருமணத்தைப் புரிந்து கொள்கின்றனர்; ஏற்றுக் கொள்கின்றனர்.

திரூவாரூர் மாவட்டம் காவலக்குடி கிருஷ்ணமூர்த்தியின் பூர்வீக கிராமம். கா.வீ. பாலசுப்பிரமணியம்- கி. மீனாட்சியம்மாள் தம்பதிக்கு 8-வது வாரிசாக 1941 ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்தவர் கிருஷ்ணமூர்த்தி. எம்ஏ தமிழ், பிஎஸ்ஸி கணிதம், எம்எட் முடித்தவர்.

மண்ணச்சநல்லூர், தலைமலைப்பட்டி (நாமக்கல்), உடையார்பாளையம், புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில், கந்தர்வகோட்டை ஆகிய இடங்களில் பணியாற்றியவர். கடைசியாக கந்தர்வகோட்டை அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி 1999இல் ஓய்வுபெற்றார்.

எஸ்.ஜெ. சாமிக்கண்ணு- தெரசா ராஜம் தம்பதியின் மூத்த மகளாக 1944 பிப்ரவரி 2ஆம் தேதி திருச்சியில் பிறந்தவர் டோரதி. எம்எஸ்ஸி தாவரவியல், எம்பில் படித்தவர். வில்லியம்ஸ் வேர்ட்ஸ்வொர்த்தின் சகோதரியின் பெயர் 'டோரதி'.

கிருஷ்ணமூர்த்தி- டோரதி
கிருஷ்ணமூர்த்தி- டோரதி

தொடக்கத்தில் காட்பாடியிலுள்ள ஆக்ஸிலியம் கல்லூரியில் பயிற்றுநராகப் பணியில் சேர்ந்தார். பிறகு திருச்சி மண்ணச்சநல்லூர் அரசுப் பள்ளியில் சேர்ந்தார்.

மதுரை மருத்துவக் கல்லூரி, சென்னை ராணிமேரி கல்லூரி, நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, மயிலாடுதுறை ஞானாம்பிகை மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை மகளிர் கல்லூரிகளில் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றி, 2002ஆம் ஆண்டு பணிநிறைவு பெற்றவர்.

இருவரும் தங்களின் ஓய்வுக்குப் பிறகு கிடைத்த பணக்கொடையில் இருந்து ரூ. 11 லட்சத்தில் எழுப்பியதுதான் புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் தற்போதுள்ள 'ஞானாலயா'. தென் தமிழகத்தின் பெரிய தனியார் நூலகம்.

நூல்கள் மீது கிருஷ்ணமூர்த்திக்கு இருந்த அணுக்கம், தொடக்கத்தில் தனது தாய் மீனாட்சி பெயரில் சிறிய நூலகத்தைத் தொடங்க வைத்திருக்கிறது. தந்தை கொடுத்த 100 நூல்களுடன் தேடித் தேடி வாங்கியது, பிஎப் பிடித்தத்தில் இருந்து கடன் போட்டு வாங்கியது எனத் தொடர்ந்து, பிரம்மாண்டமாய் வளர்ந்திருக்கிறது.

ஏறத்தாழ இரு தளங்களிலும் உள்ள சுமார் லட்சம் நூல்களும் எங்கெங்கே என்ன நூல் இருக்கிறது என்பது மட்டுமல்ல, அந்த நூலில் என்ன இருக்கிறது என்பது வரை கிருஷ்ணமூர்த்தியின் மூளையிலும் பதிவாகியிருக்கின்றன. ஏறத்தாழ ஆயிரம் சொற்பொழிவுகளைக் கடந்திருக்கும். ஒரு மணி நேரத்துக்கும் குறையாத- மடை திறந்த வெள்ளம் போல வரலாற்றைக் கொட்டும் அவரது பேச்சு.

ஏராளமானோர் இங்கு வந்து நூல்களை வாசிக்கின்றனர். ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இந்த ஆலயம் இருக்கிறது. பல பதிப்பகத்தார் தாங்கள் பதிப்பித்த முதல் பதிப்பை இங்கு வந்து வாங்கிச் சென்று- அடுத்தடுத்த பதிப்புகளைச் செய்த பிறகு கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள்.

பருவ இதழ்களில் முதல் இதழைச் சேகரிப்பதும், பழைமையான நூல்களில் முதல் பதிப்பைச் சேகரிப்பதும் ஞானாலயாவின் சிறப்பு. ஞானாலயாவுக்கு வந்து செல்லாத தமிழ் எழுத்தாளர்கள், அறிஞர்கள் மிக அரிது.

இவை அத்தனையிலும் கிருஷ்ணமூர்த்திக்கு உதவியாக டோரதி இருந்தார் என்பதல்ல, கிருஷ்ணமூர்த்தியும் டோரதியும் இணைந்து செய்கிறார்கள் என்பதுதான் அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம்.

'எங்களின் குடும்ப வாழ்க்கை தெளிவான நீரோடை போல, தனிமனித சுதந்திரத்துக்கு பங்கம் வராத வகையில் அன்பு, காதல், தோழமை, ஒருவரையொருவர் இட்டு நிரப்பிக்கொள்ளக் கூடிய புரிதல் ஆகியவற்றை அச்சாணியாகக் கொண்டு அமைந்தது' என விவரிக்கிறார் டோரதி.

அச்சமின்றிப் பேசுவதற்கும் தயக்கமின்றி எழுதுவதற்கும் கிருஷ்ணமூர்த்தி தூண்டுகோலாக இருக்கிறார். 'நடைமுறையில் எழக் கூடிய சில கோபதாபங்களும் அர்த்தமிழந்து அவ்வப்போதே காணாமல் போய்விடுகின்றன' என்றும் குறிப்பிடுகிறார் டோரதி.

ஜீவாவும், பெரியாரும் நிறைந்திருந்த என் சிந்தனையில் விதவைப் பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் உதித்து, ஒரு முறை அவ்வை இல்லத்துக்குச் சென்று பார்த்துவிட்டும் வந்ததாகக் குறிப்பிடும் கிருஷ்ணமூர்த்தி, இலக்கிய நட்பாக வந்த டோரதி வாழ்க்கை நட்பாகிப் போனார் என்கிறார்.

இவர்களின் மூத்த மகள் நிவேதிதா பாரதி, சென்னையில் மகப்பேறு மருத்துவர். இளைய மகள் ஞானதீபம் வெளிநாட்டில் இருக்கிறார். 'நல்லற நன்மணிகள்', 'இலட்சியத் தம்பதியினர்', 'நூலக நுண்ணறிவு இணையர்' விருதுகளைப் பெற்றுள்ளனர்.

நூல்களைக் காதலித்தவர்கள், அதனாலேயே ஒருவரையொருவர் காதலித்து- இணைந்து- காதல் கோட்டையை (அறிவுக்கோட்டை) ஞானாலயா ஆய்வு நூலகமாக வடித்திருக்கிறார்கள். அது தற்போதைய நவீனத் தேவைக்கேற்ப டிஜிட்டல்மயமாகவும் மாற்றப்பட்டு வருகிறது. யுகங்களைக் கடந்தும் கிருஷ்ணமூர்த்தி- டோரதியின் காதல் வாசிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com