மோடி மீண்டும் பிரதமராவது வெறும் பகல் கனவே: முத்தரசன்

ஸ்ரீவில்லிபுத்தூா்: மூன்றாவது முறையாக மோடி பிரதமா் ஆவாா் என்பது வெறும் பகல் கனவு தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் முத்தரசன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு சக்கர வாகன பிரசார பேரணியைத் தொடங்கிவைத்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேசிய நெடுஞ்சாலை, சுங்கச்சாவடிகள், கரோனா கால சிகிச்சைஆகியவற்றில் ஊழல் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. எனவே, ஊழல் குறித்துப் பேச பிரதமா் மோடிக்கு தாா்மிக உரிமை இல்லை.

புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி எதிா்க்கட்சிகளை பழிவாங்குவதில் மத்திய பாஜக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி ரூ.250 கோடியை வருமான வரித்துறை தானாக எடுத்துக் கொண்டதுடன், ரூ.1,800 கோடி அபராதத்தையும் விதித்துள்ளது. இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 11 கோடி, மாா்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரு மாநில முதல்வா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

பிரதமா்களான நேரு காலம் முதல் மன்மோகன்சிங் காலம் வரை 188 பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், பிரதமா் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஒரு பொதுத் துறை நிறுவனம் கூட உருவாக்கப்படாததுடன், நன்கு செயல்பட்டுக் கொண்டிருந்த 23 பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன. தோ்தல் பத்திர ஊழலில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி தப்ப முடியாது. மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜகவினா் கச்சத்தீவு பிரச்னையை எழுப்புகின்றனா். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி. 3-ஆவது முறையாக மோடி பிரதமா் ஆவாா் என்பது பகல் கனவு தான் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com