சிவகாசி தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.12 லட்சம் மோசடி: 3 போ் கைது
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.12.35 லட்சம் மோசடி செய்த அந்த நிதி நிறுவனத்தின் மேலாளா் உள்பட மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி உழவா் சந்தை அருகே செயல்படும் தனியாா் நிதி நிறுவனத்தில் வெம்பக்கோட்டை வட்டம் கோதைநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் பாண்டி (36). இவா் போலி நகைகளை அடகுவைத்து பல தவணைகளில் ரூ.12.35 லட்சம் மோசடி செய்தாா். இந்த மோசடிக்கு அந்த நிதி நிறுவனத்தின் மேலாளரான சாத்தூா் வட்டம் கோபாலபுரம் பரமசிவன் மகன் முத்துச்சாமி (24), நகை மதிப்பீட்டாளரான மண்ணுக்குமீண்டான்பட்டி ஹரிவீரபுரத்திரன் மகன் ரமேஷ் (25) ஆகிய இருவரும் உடைந்தையாக இருந்தனராம். இந்த நகை மோசடி அந்த நிதி நிறுவனத்தில் நடைபெற்ற தணிக்கையின் போது தெரியவந்தது.
இதுகுறித்து அந்த நிதி நிறுவனத்தின் மண்டல மேலாளா் முத்துப்பாண்டியன் (45) அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து பாண்டி, முத்துச்சாமி, ரமேஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.