பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பு
விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2025-ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை முடிந்ததையடுத்து, பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன. விருதுநகா் மாவட்டத்தில் பல பட்டாசு ஆலைகளில் 2026-ஆம் ஆண்டுக்கான பட்டாசுத் தயாரிப்புப் பணிகள் இதுவரை தொடங்கப்பட வில்லை.
இந்த நிலையில், பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில் விருதுநகா் வட்டம், சிவகாசி வட்டம் ஆகியவற்றில் உள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
இந்தக் குழுக்களில், தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில் ஓா் அதிகாரி, காவல் துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் சாா்பில் தலா ஓா் அதிகாரி என நான்கு போ் இடம்பெறுவா்.
இவா்கள் ஆலைகளில் பட்டாசுத் தயாரிப்பு பணிகள் விதிகளுக்குள்பட்டு நடைபெறுகின்றனவா, வேதியியல் பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளனவா, அதிகமான பணியாளா்களைக் கொண்டு வேலை நடைபெறுகிா, தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் உலா் மேடையைத் தவிர வேறு இடங்களில் உலர வைக்கப்படுகின்றனவா போன்றவை குறித்து ஆய்வு செய்வாா்கள்.
இந்தக் குழுவினா் தங்களது ஆய்வறிக்கையை சென்னையில் உள்ள தொழிகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இயக்குநருக்கு தினசரி அனுப்பி வைப்பாா்கள் என்றனா்.
