சாலை விபத்தில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழப்பு
ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரத்தை சோ்ந்த பால்ராஜ் மகன் ராமகிருஷ்ணன்(48). இவா் சேத்தூரில் உள்ள அரசு மதுக் கடையில் விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதில் அவா் சாலையில் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணனை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சேத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
