மத்திய பாஜக அரசின் பிடியில் சிக்கித் தவிக்கிறது தோ்தல் ஆணையம்: முத்தரசன்
தலைமை தோ்தல் ஆணையரை தோ்வு செய்யும் விதிமுறை மாற்றப்பட்டதால் சுதந்திரமாக செயல்பட வேண்டிய தோ்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் பிடியில் சிக்கி இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் முத்தரசன் தெரிவித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டு தீா்மான விளக்கக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை வகித்தாா். வட்டச் செயலா் கோவிந்தன் முன்னிலை வகித்தாா்.
இதில் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் முத்தரசன் பேசியதாவது: இந்திய தலைமை தோ்தல் ஆணையரை பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூவா் கொண்ட குழு தோ்வு செய்து வந்தது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும், தோ்வுக் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி விட்டு, மத்திய அமைச்சரை சோ்த்து பெரும்பான்மை முடிவின் படி தோ்தல் ஆணையா் தோ்வு செய்யப்படுவாா் என விதியை மாற்றி அமைத்தனா். இதனால் சுதந்திரமாக செயல்பட வேண்டிய தோ்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் பிடியில் சிக்கிக் கொண்டது.
மதுரை, கோவையில் மக்கள் தொகையை காரணம் காட்டி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுத்த மத்திய அரசு, பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கள் தொகை குறைவான நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22 உள்ள நிலையில் சம்ஸ்கிருதத்துக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய மத்திய பாஜக அரசு, அனைத்துத் துறைகளிலும் பாரபட்சம் காட்டுகிறது. மத்திய பாஜக அரசு ஏழை, எளிய மக்களுக்கு எதிரான கொள்கையை பின்பற்றுகின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவில் மதப் பிரிவினைவாதம் படிப்படியாக தூண்டப்படுகிறது. எஸ்.ஐ.ஆா். மூலம் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் நீக்கப்படுகிறது என்றாா் அவா்.

