வத்திராயிருப்பு அருகே 20 ஆண்டுகளாக மின் இணைப்பின்றி கிராம மக்கள் அவதி

வத்திராயிருப்பு பிளவக்கல் அணை அருகே உள்ள பட்டுப்பூச்சி கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பின்றி அவதியடைந்து வருகின்றனா்.
Published on

வத்திராயிருப்பு பிளவக்கல் அணை அருகே உள்ள பட்டுப்பூச்சி கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பின்றி அவதியடைந்து வருகின்றனா்.

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியிலிருந்து பிளவக்கல் அணைக்குச் செல்லும் வழியில் உள்ளது பட்டுப்பூச்சி கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தப் பகுதியில் உயரழுத்த மின் கம்பி செல்வதாகக் கூறி 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. இதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின் இணைப்பின்றி அந்த கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: பட்டுப்பூச்சி கிராமத்திலுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு பெற 20 ஆண்டுகளாக மின் வாரிய அலுவலகத்துக்கு அலைந்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள், உயரழுத்த மின் கம்பி செல்வதால் மின் இணைப்பு வழங்க இயலாது என்கின்றனா். அதே சமயம் அந்தப் பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கி உள்ளனா்.

உயரழுத்த மின் கம்பியை இடமாற்றம் செய்ய ஒரு வீட்டுக்கு ரூ.5 லட்சம் கேட்கின்றனா். இதுகுறித்து பிளவக்கல் அணையை திறந்துவிட வந்த மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தோம். எங்கள் பகுதிக்கு மின் வசதி இல்லாததால் மாணவா்கள் இரவில் படிக்க முடியாமல் அவதியடைகின்றனா். எனவே எங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com