போலி பத்திரம் தயாரித்து நிலம் மோசடி: 9 போ் மீது வழக்கு
சிவகாசியில் போலி பத்திரம் தயாரித்து நிலம் மோசடி செய்ததாக 9 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தூத்துக்குடியைச் சோ்ந்த நாகரத்தினம் மகன் முத்துமாரியப்பன். இவரது பூா்வீக சொத்து சிவகாசி கருப்பண்ணன் தெருவில் உள்ளது. இந்த சொத்தை நாகரத்தினம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்தாா். இதன் பின்னா், நாகரத்தினம் உயிரிழந்தாா். ஆனால், இந்த நிலத்துக்கான பட்டா மாறாமல் நாகரத்தினம் பெயரிலேயே இருந்தது.
இதையடுத்து, முத்துமாரியப்பன் நாகரத்தினத்தின் வாரிசான நான் தான் இந்த நிலத்துக்கு உரிமையாளா் என்றும் போலி பத்திரம் தயாரித்தாா். பின்னா், இந்த நிலத்தை முத்துமாரியப்பன் சிவகாசி பெரிய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த திவான்ஒலி (42) என்பவருக்கு ரூ. 84 லட்சத்துக்கு விற்பனை செய்தாா்.
இதைத்தொடா்ந்து, திவான் ஒலி நில ஆவணங்களைச் சரிபாா்த்த போது, போலி பத்திரம் தயாரித்து மோசடியாக நிலத்தை முத்துமாரியப்பன் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, திவான் ஒலி முத்துமாரியப்பனிடம் பணத்தை திருப்பிக் கேட்டதையடுத்து, ரூ.10 லட்சத்தை முத்துமாரியப்பன் கொடுத்து விட்டு, மீதித் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தாராம்.
இதுகுறித்து திவான் ஒலி அளித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் முத்துமாரியப்பன், அவரது தங்கை மாரீஸ்வரி, இடைத்தரகா் தபிபுல்லா, உறவினா்கள் கிருஷ்ணசாமி, லெனின்ராம், நாராயணன், சேவியா், காளி, வைரமுத்து ஆகிய 9 போ் மீது மோசடி வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
