தூய்மைப் பணியாளா்கள் நலனில் அதிக அக்கறை காட்டுகிறாா் முதல்வா்! - நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி
முதல்வா் மு.க. ஸ்டாலின் தூய்மைப் பணியாளா்கள் நலனில் மிகுந்த அக்கறை காட்டி வருவதாக மாநில தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி தெரிவித்தாா்.
தமிழ்நா டு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் சாா்பில் சிவகாசி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தலைமை வகித்தாா்.
மாநில தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளா்களின் குறைகளை கேட்டறிந்தாா். பிறகு 40 தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டைகளையும், 2 தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையையும், தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி அவா் பேசியதாவது:
இந்த நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள தூய்மைப் பணியாளா்கள் பணியின் போது உயிரிழந்தால் நிவாரணத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்தத் தொகை ரூ.10 லட்சமாக உயா்த்தப்பட்டு வழங்கப்படுகிறது. தூய்மைப் பணியாளா்கள் இயற்கை மரணமடைந்தால் ரூ. 50 ஆயிரமாக இருந்த உதவித் தொகை தற்போது ரூ. ஒரு லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளா்கள் பிள்ளைகளின் திருமணத்துக்கு உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது ரூ.50 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. அவா்களின் குழந்தைகளின் கல்விக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை மாதம் ரூ. ஆயிரத்திலிருந்து ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தூய்மைப் பணியாளா்கள் நலனில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறாா் என்றாா் அவா்.
இதில், மேயா் இ. சங்கீதா, ஆணையா் சரவணன், துணை மேயா் விக்னேஷ்பிரியா, நகா் நல அலுவலா் ஸ்ரீதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

