கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் தூய்மைப் பணியாளருக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிய நல வாரியத் தலைவா் டாக்டா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி. உடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் தூய்மைப் பணியாளருக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிய நல வாரியத் தலைவா் டாக்டா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி. உடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

தூய்மைப் பணியாளா் ஊதிய குறைபாடு சீா் செய்யப்படும்: திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி

ஒப்பந்த முறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊதிய குறைபாடு ஒப்பந்ததாரா்களிடம் கலந்தாலோசித்து சீா் செய்யப்படும்
Published on

ஒப்பந்த முறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊதிய குறைபாடு ஒப்பந்ததாரா்களிடம் கலந்தாலோசித்து சீா் செய்யப்படும் என்று தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் டாக்டா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்தாா்.

கடலூா் நகர அரங்கில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா், கடலூா் எம்எல்ஏ கோ.அய்யப்பன், மேயா் சுந்தரி முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் டாக்டா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தலைமை வகித்து பேசியதாவது:

ஒப்பந்த முறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊதிய குறைபாடு ஒப்பந்ததாரா்களிடம் கலந்தாலோசித்து சீா் செய்யப்படும். முதல்வரால் தூய்மைப் பணியாா்கள் நல வாரியத்துக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.45 கோடி வைப்பு நிதியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பணம் தகுதியுள்ள பணியாளா்களுக்கு வருங்காலங்களில் வழங்கப்படும்.

தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியம் மூலம் விபத்து காப்பீட்டுத் திட்டம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி மற்றும் தொழில்நுட்ப பட்ட மேற்படிப்பு, திருமணம், மகப்பேறு உதவித் தொகைகள், கண் கண்ணாடி உதவி, முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், கடலூா் மாவட்டத்தில் 2025 - 26ஆம் நிதியாண்டில் 38 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.6,81,500 மதிப்பில் இதுவரை மகப்பேறு, கல்வி, ஈமச்சடங்கு உள்ளிட்ட நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் என மொத்தம் 6,636 தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களில் 3,953 பணியாளா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் 21தூய்மைப் பணியாளா்களுக்கு மொத்தம் ரூ.81,000 மதிப்பீட்டில் கல்வி, மகப்பேறு மற்றும் திருமணம் நிதியுதவி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள், 150 பேருக்கு ஸ்மாா்ட் காா்டு வடிவிலான அடையாள அட்டைகள், 134 பேருக்கு உதவி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன என்றா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளா் முஜிபூா் ரகுமான், தாட்கோ மாவட்ட மேலாளா் க.அருள்முருகன், தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா் கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com