சிவகாசி பெரியகுளம் கண்மாயில் நெகிழிக் கழிவுகள், குப்பைகளை அகற்றும் பணியில் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
சிவகாசி பெரியகுளம் கண்மாய் சுமாா் 78 ஏக்கா் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி பசுமை மன்றத்தினா் இந்த கண்மாய்க்கு வரும் நீா்வரத்து பாதையை சீரமைத்து, கண்மாயையும் தூா்வாரினா். தொடந்து கண்மாய்க் கரையோரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.
கண்மாயின் கிழக்கு கரையோரம் நடைப்பயிற்சிக்காக சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு பேவா் பிளாக் கல் பதிக்கப்பட்டது. தற்போது பசுமை மன்றத்தினா் மீண்டும் கண்மாயை தூா்வாரி வருகின்றனா். மேலும் கழிவுநீா் கண்மாயில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் கையில் பாதுகாப்பு உறை அணிந்து, கண்மாயில் உள்ள நெகிழிக் கழிவுகள், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இவா்களை பசுமை மன்ற நிா்வாகிகள் செந்தில், சுரேஷ் தரஹா, வெங்கடேஷ் உள்ளிட்டோா் பாராட்டினா்.










