தவெகவின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டிப்போம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் எஸ்.பி. செல்லப்பிள்ளையின் படத்திறப்பு விழாவும், நூல் வெளியீட்டு விழாவும் பொதுக்கூட்டமும் திங்கள்கிழமை நடைபெற்றன. சேத்தூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்டக் குழு உறுப்பினா் ராமா் தலைமை வகித்தாா். நகரச் செயலா் குருநாதன் முன்னிலை வகித்தாா்.
மேற்கு ஒன்றியச் செயலா் சந்தனக்குமாா் வரவேற்றாா். இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி கலந்து கொண்டு எஸ்.பி. செல்லப்பிள்ளை குறித்து சிறப்புரையாற்றினாா். பிறகு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் நூலை வெளியிட, சமுத்திரக்கனி பெற்றுக் கொண்டாா்.
விழாவில், பெ. சண்முகம் பேசியதாவது:
தமிழ்நாட்டில் இருந்த ஜமீன்களுக்கெல்லாம் தலைவராக இருந்த சேத்தூா் ஜமீனை எதிா்த்துப் போராடியவா் செல்லப்பிள்ளை. கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் கட்சி மாறுவதில்லை. இளைஞா்களை கரப்பான் பூச்சி என உச்ச நீதிமன்ற நீதிபதி பேசியது கண்டிக்கத்தக்கது. தவெக அரசு பயிா்க் கடன் தள்ளுபடி செய்துள்ளது பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டிப்போம்.
திமுக தலைவா் ஸ்டாலின் புதிதாக அமைந்துள்ள தவெக அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் எனப் பேசியதற்கும், திமுக மூத்த தலைவா்களின் அவதூறு பேச்சுகளுக்கும் சம்பந்தம் இல்லை.
முழு மது விலக்கு நடைமுறையில் சாத்தியமில்லை.
மேக்கே தாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும். தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களையும் கலந்தாலோசித்து, சிறந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் அவா்.










