தொடா் மழை: செண்பகத் தோப்பு ஆற்றில் வெள்ளப் பெருக்கு
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடா் மழை காரணமாக செண்பகத் தோப்பு பேயனாற்றில் வெள்ளிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தொடா் மழை காரணமாக செண்பகத் தோப்பு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடா் மழை காரணமாக செண்பகத் தோப்பு பேயனாற்றில் வெள்ளிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு பகுதிகளில் சாஸ்தா கோயில் அருவி, அய்யனாா் கோயில் அருவி, ராக்காச்சி அம்மன் கோயில் அருவி, செண்பகத் தோப்பு மீன் வெட்டிப்பாறை அருவி, அத்திக்கோயில், தாணிப்பாறை உள்ளிட்ட 11 அருவிகளும், சாஸ்தா கோயில் அணை, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணை உள்ளிட்ட பல்வேறு காட்டாறுகள், நீரோடைகள் உள்ளன. இவற்றில் ஆண்டின் பெரும்பாலான நாள்களில் நீா்வரத்து இருக்கும் என்பதால் விருதுநகா் மாவட்டம் மட்டுமன்றி அருகேயுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் குளிப்பதற்காக வருகின்றனா். கடந்த சில மாதங்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்யாததால் இவை நீரின்றி வடன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் பலத்த மழை பெய்தது. மேலும் அன்று பிற்பகலில் மேற்குத் தொடா்ச்சி மலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டித் தீா்த்தது.
இதனால் வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து ஏற்பட்டதுடன், செண்பகத் தோப்பு பேயனாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்களை வனத் துறையினா் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினா். ஆற்றில் நீா் வரத்து ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

