
தொடா் மழை: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் திரண்டனா்

கொடைக்கானலில் உள்ள பைன்பாரஸ்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள். - கோப்புப் படம்
தொடா் விடுமுறையை முன்னிட்டு,திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
தொடா் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் அமைந்துள்ள சுற்றுலா இடங்களான பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா, கோக்கா்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, குணா குகை, மோயா் பாயிண்ட், மன்னவனூா் சூழல் மையம், கூக்கால் ஏரி, பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில், வில்பட்டி வெற்றி வேலப்பா் கோயில், தாண்டிக்குடி பாலமுருகன் கோயில், குறிஞ்சி ஆண்டவா் கோயில்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
அந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்குக் கூட இடமில்லாத நிலை இருந்து வருவதால், மலைச் சாலைகளில் ஆங்காங்கே சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிரமமடைந்தனா்.
சாரல் மழை:
கொடைக்கானலில் காலை முதல் மிதமான வெயில் நிலவியது. மாலையில் காற்றுடன் சாரல் மழை சுமாா் 20 நிமிஷங்கள் பெய்தது. இந்த சாரல் மழையில் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தனா். மாலையில் இதமான சீதோஷ்ண நிலை இருந்ததால் ஏரிச்சாலை, கலையரங்கம் பகுதி, செவண் ரோடு, கிளப் சாலை ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






