வருமான வரி தாக்கல்: படிவம்-16ல் புதிய மாற்றம்! ஏன் தெரியுமா?

வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவம்-16ல் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை
வருமான வரித் துறை
Published on
Updated on
2 min read

2025-26ஆம் நிதியாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதமே வந்துவிட்டது. வருமான வரி செலுத்துவோர், தங்களது வருமான வரி கணக்குத் தாக்கலுக்கான அனைத்து வேலைகளையும் தீவிரமாக செய்து வருவார்கள்.

கடந்த 2024 - 25ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு் தாக்கல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

எனவே, தேவையான ஆவணங்களை தயார் செய்து வைத்துக் கொள்வது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மிகவும் அவசியம்.

வருமானம் பெறும் வரி செலுத்துவோருக்கு மிக அவசியமான ஆவணங்களில் ஒன்று படிவம்-16. இது நிறுவனம், ஊழியருக்கு வழங்குகிறது. இந்த படிவத்தில் ஒரு ஊழியர் பெறும் வருமானம், பிடித்தம் செய்யப்பட்ட வரி என அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

இந்த படிவம் 16தான், ஒரு நிறுவனம் தனது ஊழியரிடமிருந்து பிடித்தம் செய்த வரியை வருமான வரித் துறைக்கு செலுத்தியதற்கான சாட்சி. அதுபோல, ஒரு ஊழியருக்கும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான அடிப்படை ஆவணம்.

படிவம் 16 என்றால் என்ன?

ஒரு நிறுவனம் தனது ஊழியரிடமிருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்ததற்கும், அந்த வரியை முறையாக வருமான வரித் துறை அலுவலகத்தில் செலுத்தியதற்கும் ஆதாரம். ஒருவர் எவ்வளவு ஊதியம் பெற்றார், எவ்வளவு வரி செலுத்தினார் என்பதற்கும் ஆதார ஆவணம். இது இரண்டு பிரிவுகளாக இருக்கும். ஒன்று ஏ, இரண்டாவது பி.

பணி மாற்றத்தின்போது?

ஒருவர் ஒரு நிதியாண்டில் பணி மாற்றம் செய்யும்போது, இரண்டு நிறுவனங்களில் இருந்தும் படிவம் 16-ஐ பெற்றுக்கொள்ள வேண்டும்.

படிவம் 16 பகுதி ஏ

படிவம் 16ன் ஏ பகுதியானது ஒருவர் செலுத்திய வரி மற்றும் செய்திருக்கும் வைப்புத் தொகைகள் குறித்த ஒவ்வொரு காலாண்டுக்கான நிலவரத்தை அளிக்கும். அதில் ஊழியரின் பெயர், முகவரி, பான் எண், நிறுவனத்தின் நிரந்தர வரிக் கணக்கு எண்ணான டேன் மற்றும் பான் எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

தனது மாத ஊதிய வருமானச் சான்றிதழில் இருக்கும் தகவல்களை இதன் மூலம் ஊழியர் சரிபார்த்துக் கொள்ளலாம்.

படிவம் 16 பகுதி பி

படிவம் 16-ன் பகுதி பியில், ஏ பாகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களை விரிவாக அறிந்துகொள்ள முடியும். ஊழியர் பெறும் ஊதியத்தின் விவரம், பல்வேறு பிரிவுகளில் பிடித்தம் செய்யப்பட்ட வரி விவரம் தெரிவிக்கப்படும்.

வரிவிலக்குக்கான விவரங்களும் அதில் இடம்பெற்றிருக்கும்.

படிவம் 16 ஏன் அவசியம்?

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கு மட்டும் படிவம் 16 அவசியம் என்றில்லை. கடன் விண்ணப்பங்களுக்கும் கட்டாயமாகிறது. வருமானத்துக்கு சான்றாக பல நிதிநிறுவனங்கள் படிவம் 16-ஐத்தான் கேட்கின்றன.

செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

வருமான வரித் தாக்கல் செய்வோர் இந்த ஆண்டு படிவம் 16ல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். படிவம் 16ன் மாதிரி மாற்றப்பட்டிருப்பதன் மூலம், பலவகையான வரிகள், வரிப் பிடித்தம், வரி விலக்கு என அனைத்தும் மிக விவரமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

இந்த மாற்றத்தால், முந்தைய படிவங்களைக் காட்டிலும் புதிய படிவத்தில் வரி செலுத்துவோர் விவரங்களை எளிதாகவே அறிந்துகொள்ளலாம். முந்தைய படிவம் 16 அடிப்படை விவரங்களை மட்டுமே கொண்டிருக்கும். புதிய படிவம் விரிவான விவரங்களை கொண்டிருக்கும். இதன் மூலம் எந்தெந்த படிகளுக்கு வரி விலக்கு உண்டு, எவ்வளவு பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. எந்த வருமான சலுகைகளுக்கு வரி உள்ளது என அறிய முடியும்.

இதனால் வருமான கணக்குத் தாக்கல் செய்யும்போது எந்தக் குழப்பமும் நேரிடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com