
ஏடிஎம் திருடர்களுக்கு பிரத்யேக பள்ளி! மெஷினை வைத்துப் பாடம்! கண்டுபிடித்த தமிழக காவல்துறை!
ஏடிஎம் திருடர்களுக்கு பிரத்யேக பள்ளிகளை நடத்தி மெஷினை வைத்துப் பாடம் எடுக்கும் சம்பவத்தை கண்டுபிடித்த தமிழக காவல்துறை...

ஏடிஎம் கொள்ளை - ஐஏஎன்எஸ்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும் ஏராளமான ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து, தமிழக காவல்துறை நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து செப்டம்பர் வரை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்றது, ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி பணத்தை கொள்ளையடித்தது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
இதுவரை கிட்டத்தட்ட ரூ.32 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வடமாநிலங்களைச் சேர்ந்த ஒரு சிலரை கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போதுதான், ஹரியாணாவின் நுஹ், பல்வால், மேவாத் பகுதிகளில் அனுபவம் வாய்ந்த கொள்ளையர்கள், புதிய நபர்களுக்கு எவ்வாறு ஏடிஎம்-ஐ உடைக்க வேண்டும், சிசிடிவி கேமராவை செயலிழக்கச் செய்வது, பணத்துக்கு சேதம் ஏற்படுத்தாமல் ஏடிஎம் மெஷினை வெல்டிங் செய்வது போன்றவை குறித்து பாடம் எடுத்து வருகிறார்களாம்.
பழைய ஏடிஎம் இயந்திரங்களை வைத்து நேரடியாக பாடம் எடுக்கப்பட்டுள்ளது. வெற்றுத் தாள்களை பணம் போல அதில் வைத்து வெல்டிங் செய்யவும் கேஸ் - கட்டிங் இயந்திரத்தில் உடைக்கவும் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு விரைவாக இந்த வேலையை செய்கிறார்கள் என்று தேர்வும் நடத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் நன்றாக கற்றுக் கொண்டவர்களின் தலைமையில் நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுக்கள் உருவாக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வங்கிகள், பழைய ஏடிஎம்களை இரும்புச் சாமான் கடைகளுக்கு போடும்போது, அவற்றை விலை கொடுத்து வாங்கவும் செய்திருக்கிறார்கள் இந்த கும்பல்.
ஒரு சில கும்பல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தும் பாடம் கற்றுக் கொடுக்க பயன்படுத்தியிருக்கிறார்கள்.
நுஹ், பல்வால், மேவத் போன்ற பகுதிகளுக்குள் நுழைந்த தமிழ்நாடு காவல்துறையினர், அங்கு ஏடிஎம் கொள்ளையர்களுக்கான பள்ளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கொள்ளையடிக்கும் பணம் முழுக்க கிராமத்துக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே இவர்களுக்கு அங்கிருக்கும் கிராமத்தினர் முழு ஆதரவு கொடுப்பதால் கிராமத்துக்குள் நுழைவதும், சிரமமாகவே உள்ளது. காவல்துறை சீருடை இல்லாமல் சாமானியர்கள் போல நுழைந்தே விசாரணை நடத்தும் நிலை உள்ளது என்றும் கூறப்படுகிறது.
Summary
A dedicated school for ATM thieves! Lessons conducted using an actual machine! Tamil Nadu Police uncover the operation!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






