நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

27 குழந்தைகளின் பெற்றோர்!

எய்ட்ஸ்  நோயாளிகளை தீண்டதகாதவர்களாக பார்க்கும்  மனிதர்களிடைய,   மனிதம் இன்னும் அழிந்துவிடவில்லை

News image
Updated On :29 மே 2018, 4:52 am

ஸ்ரீதேவி குமரேசன

எய்ட்ஸ்  நோயாளிகளை தீண்டதகாதவர்களாக பார்க்கும்  மனிதர்களிடைய,   மனிதம் இன்னும் அழிந்துவிடவில்லை என நிரூபித்திருக்கிறார் சாலமன். எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளைத் தத்தெடுத்து  அவர்களுக்காக  சென்னை செங்குன்றத்துக்கு அருகே உள்ள விளாங்காடுபாக்கத்தில் "ஷெல்டர்'  என்ற அமைப்பை உருவாக்கி பராமரித்து வருகிறார். இவரைச்  சந்தித்தோம்:
 
""எனக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் வரை குழந்தையில்லை. அதனால் ஒரு குழந்தையைத்  தத்தெடுக்க முடிவு செய்தோம்.  அதுவும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட  குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்று முடிவு  செய்தோம்.  
அதற்காக எஸ்ட்ஸ் நோயாளிகள்  பராமரிப்பு அமைப்பில் பதிவு செய்தோம்.   பலகட்ட விதிமுறைகளுக்கு பிறகு  நாங்கள் விரும்பியது போன்று எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட  6 வயது குழந்தையைத் தத்தெடுத்தோம். 

நானும், மனைவியும் வேலைக்குச் செல்பவர்கள். அதனால், காலையிலேயே  குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் செய்துவிட்டு குழந்தையை வீட்டுக்குள்ளே விட்டு பூட்டிவிட்டு சென்றுவிடுவோம். மனைவியின் அலுவலகம் தூரத்தில் இருந்ததால்,  நான் மதியம் திரும்பி வந்து குழந்தைக்கு உணவுக்கு கொடுக்க வருவேன்.
நான் வரும்போது சில நேரங்களில் குழந்தை தூங்கி கொண்டிருப்பான். சில நேரங்களில்  ஜன்னலில் வந்து அமர்ந்து கொண்டு வழியில் போகிறவர்கள், வருபவர்களை எல்லாம் அழைத்து  கதவை திறந்துவிடும்படி அழைப்பான்.  இதனால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம்   எங்களை ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். இனியும்  வீட்டில் வைத்து பூட்டிச் செல்வது சரியில்லை என்று என் அலுவலகத்தில் அனுமதி வாங்கி குழந்தையை அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன்.  

குழந்தையைப் பற்றி அறிந்த என் அலுவலக நண்பர்கள் முதல் இரண்டு நாள்கள் என்னைப் பாராட்டினர். அதன்பின் ஒரிரு தினங்களில்  என்   நண்பர்கள் என்னுடன்   மதிய  உணவருந்துவதை  தவிர்க்க ஆரம்பித்தார்கள்.  குழந்தை அங்குமிங்கும் செல்வதையும்,  அலுவலக பொதுக் கழிப்பறையை உபயோகிப்பதையும்  குற்றமாக கூற ஆரம்பித்துவிட்டார்கள்.  இதனால் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வதும் சாத்தியமற்றுப் போனது.  

அடுத்து என்ன செய்வது என்று யோசித்த போது,  இவனுடன் இன்னொரு குழந்தை இருந்தால் இருவரும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதனால் வீட்டில் பயம் இல்லாமல் விட்டு விட்டு  வரலாம் என தோன்றியது.    அதனால் மீண்டும்  அமைப்புக்கு  போன் செய்து  என் நிலைமையை விளக்கி இன்னொரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்றேன்.

இன்னொரு குழந்தையையும் வளர்க்கத் தொடங்கினோம்.  இரு குழந்தைகள் ஆனவுடன் அருகில் இருந்தவர்கள் எல்லாம் அந்த குழந்தைகள் இங்கிருக்கக் கூடாது என்று  சண்டைக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள்.  நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரும் வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார். 

வேறு வழியில்லாமல் அலுவலகத்தில் லோன் போட்டு ரெட்ஹில்ஸில்  சொந்தமாக நிலம் வாங்கி  வீட்டைக் கட்டி குடியேறினோம்.  இதற்கிடையில் என் மனைவிக்கு குழந்தை பிறந்தது.  தற்போது எங்களுக்கு என்று  இரண்டு குழந்தைகள் உள்ளனர்.   
 
 இந்நிலையில்   எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட  மேலும் இரண்டு குழந்தைகள் என்னிடம் வந்து சேர்ந்தார்கள்.  இவ்வாறு வந்ததில்   தற்போது எங்களின் பராமரிப்பில்  27 குழந்தைகள் உள்ளனர்.  
 
 ஆரம்பத்தில் எங்களிடம் வந்த குழந்தைகளில் தற்போது 13 குழந்தைகள்  கல்லூரியில் படித்து வருகிறார்கள்.   13 பேர் பன்னிரெண்டாம்  வகுப்பு முடித்துவிட்டனர்.  முதன்முதலில் வந்த குழந்தை மெக்கானிக்கல் எஞ்சினீயரிங் படித்து வருகிறார். ஒரு பெண் குழந்தை கல்லூரி முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறாள். 

இவர்கள் நார்மல் குழந்தைகள் இல்லை என்பதால்  திடீரென்று சோர்வடைந்து விடுவார்கள்.   சிகிச்சைக்காக ரெட்ஹில்ஸ்ஸில் இருந்து பேபி ஹாஸ்பிடல்,  ஜி.எச்., தாம்பரம் போன்ற மருத்துவமனைகளுக்குத்தான் அழைத்துச்  செல்ல வேண்டும். அதுபோன்று  அவர்களுக்கு சத்துள்ள   உணவுதான் கொடுக்க வேண்டும்.   

இவற்றிற்கு எல்லாம் எங்கள்  இருவரின் வருமானம் போதவில்லை என்பதால்  "மிலாப்'  என்ற அறக்கட்டளையின் உதவியை நாடினோம்.  அவர்கள் எங்கள் குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கும், கல்விச் செலவுக்கும் பெரிதும் உதவி  வருகிறார்கள். இதன் மூலம் 

எங்கள் இல்லத்தில் இல்லாமல், தனி பெற்றோராக இருந்து எய்ட்ஸ் பாதித்த குழந்தையைக்  கவனிக்க சிரமப்படும்  60 குழந்தைகளுக்கு உதவி வருகிறோம்.    மேலும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட  பெண்கள் 10 பேருக்கும் மாதாமாதம்  உதவி  தொகை அளித்து வருகிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.