தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பரிணாமம்: பதிப்பாளர் சங்கத்துக்கு முதலில் சொந்தக் கட்டிடமே கிடையாது!

தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம்தான் சென்னைப் புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது. கோவை, மதுரை, திருச்சி போன்ற பிற நகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதும் இவர்கள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:53 am

என்.ஜே.

தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம்தான் சென்னைப் புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது. கோவை, மதுரை, திருச்சி போன்ற பிற நகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதும் இவர்கள்தான்.

பதிப்பாளர் சங்கம் தோன்றி வளர்ந்ததைப் பற்றியும், புத்தகக் கண்காட்சிகள் நடத்துவதில் ஒவ்வோராண்டும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றியும் சங்கத்தின் தலைவரும், கவிஞர் கண்ணதாசனின் புதல்வருமான காந்திகண்ணதாசனிடம் கேட்டோம்.

சுவையான பல தகவல்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

""ஆரம்ப காலத்தில் தமிழ்ப் பதிப்பாளர் சங்கம் இரண்டு மூன்று அவ்வப்போது தோன்றி காணாமல் போயிருக்கிறது. வை.கோவிந்தன் கூட இத்தகைய முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். அவர் காலத்தில் பதிப்பகம் வளர்ந்த அளவுக்கு வாசகர்கள் வளரவில்லை.

இன்றுள்ள தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் 1971 இல் உருவானது. 1972 நவம்பரில் முறைப்படி பதிவு செய்யப்பட்டது.

ஆரம்பகாலத்தில் அதன் உறுப்பினர்களாக ஆங்கிலப் பதிப்பாளர்களே இருந்தனர். ஹிக்கின்பாதம்ஸ், யுபிஎஸ் பப்ளிஷர்ஸ், பி.ஐ.பப்ளிகேஷன்ஸ், ஓரியன்ட் லாங்மென், ஈஸ்ட் வெஸ்ட், அல்லய்டு பப்ளிஷர்ஸ், பார்க்கர் புக்ஸ் போன்ற ஆங்கிலப் பதிப்பாளர்களே இதில் தீவிரமாகச் செயல்பட்டனர்.

இந்தச் சங்கத்தை ஆரம்பித்த நோக்கமும் கூட வித்தியாசமானது. இந்த ஆங்கிலப் பதிப்பாளர்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து புத்தகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தார்கள். வெளிநாட்டு டாலர் மதிப்பு அவ்வப்போது ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். பதிப்பாளர்கள் ஒவ்வொருவரும் டாலருக்கான ரூபாய் மதிப்பை அவர்கள் இஷ்டத்துக்கு நிர்ணயித்தார்கள். இதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தச் சங்கம் தோன்றியது. 1971 இல் அமெரிக்க புத்தகத்தின் விலை டாலருக்கு ரூ.7.50 என்று நிர்ணயிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஒரு ஷில்லிங் மதிப்பு 0.90 பைசா என்று நிர்ணயிக்கப்பட்டது.

1973 இல்தான் புத்தகக் கண்காட்சி நடத்த வேண்டும் என்று கூட்டம் போட்டார்கள். ஆனால் உடனே கண்காட்சியை நடத்த முடியவில்லை. 1977 ஆம் ஆண்டு சென்னையில் முதல் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. சிறிய அளவில் நடத்தப்பட்ட இந்தப் புத்தகக் கண்காட்சியில் மொத்தமே 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள்.

1980 இல் கோவையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அப்போது என்சிபிஎச், வானதி, பாரதி பதிப்பகம், அருணோதயம் போன்ற 22 பதிப்பகங்களே கலந்து கொண்டன. ஆனால் தமிழ்ப் பதிப்பாளர்கள் சங்கத்தில் அதிகம் சேர்ந்த பின்னால்தான் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது.

1986 - 87 இல்தான் முதன்முதலில் சென்னை காயிதே மில்லத் கலைக் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அதற்குமுன் உட்லன்ட்ஸ் ட்ரைவ் - இன், செயின்ட் எப்பாஸ் பள்ளி போன்ற இடங்களில் நடத்தப்பட்டன.  காயிதே மில்லத் கலைக்கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டபோதுதான் வெளியே பரவலாக தெரிய வந்தது.

கலைக் கல்லூரியில் 55 - 60 ஸ்டால்கள்தாம் போடப்பட்டன. பெரிய விளம்பரம் இருக்காது. ஆனால் எல்லாப் பெரிய பதிப்பாளரும் அவரவர் அரங்குகளின் முன் நிற்பார்கள். என்னைப் போன்றவர்களுக்கு அதைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும்.

கலைக் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடத்த ஆரம்பித்த பின்புதான் சிறிய பதிப்பாளர்களும் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க ஆரம்பித்தார்கள்.

முதலில் ஆங்கிலப் புத்தகங்களுக்குத்தான் அதிகக் கூட்டம் இருந்து வந்தது. நாளாக நாளாக தமிழ்ப் புத்தகங்களுக்கு கூட்டம் அதிகமாக ஆரம்பித்தது. இதற்குக் காரணம் தமிழில் நல்ல, தேவையான புத்தகங்கள் வெளிவந்ததே.

1997 இல் சங்கத்தில் நான் துணைச் செயலாளராக ஆனேன். அந்தச் சமயத்தில் புத்தகக் கண்காட்சியில் வசூலாகும் பணம் அதன் செலவுகளுக்கே சரியாக வரும். விளம்பரம் செய்யப் பணம் இருக்காது.

நானும் அப்போதைய செயலாளர் சோப்ராவும் நல்லி குப்புசாமி செட்டியாரைப் போய்ப் பார்த்தோம். பத்திரிகையில் ஒரு நாள் விளம்பரச் செலவை அவரை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டோம். தினமணியிலும், ஹிந்துவிலும் ஒருநாள் விளம்பரக் கட்டணமான ரூ.12 ஆயிரத்தைத் தர அவர் ஒப்புக் கொண்டார்.

1997 புத்தகக் கண்காட்சியின் முதல் நாள் பேப்பரில் விளம்பரம் வந்தது. நல்லி குப்புசாமி செட்டியார் விளம்பரம் கொடுத்த ராசி, அந்த ஆண்டு வரலாறு காணாத கூட்டம். புத்தகக் கண்காட்சி மாபெரும் வெற்றி அடைந்தது. அதற்குப்பின் ஆண்டுதோறும் நடக்கும் புத்தகக் கண்காட்சி விழா மேடைகளில் ஏற்றி நல்லி குப்புசாமி செட்டியாரை கெüரவிக்காமல் இருக்கமாட்டோம். அதைப் போல முதல் நன்கொடையை அவரிடம் வாங்கிவிடுவோம்.

அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் சங்கத்தின் செயலாளராக ஆன பின்பு பெரிய திருப்பு முனை ஏற்பட்டது. அவர் புத்தகக் கண்காட்சி நடத்துவதில் பல மாற்றங்களைச் செய்தார்.

புத்தகக் கண்காட்சி அரங்கு 100 சதுர அடி என்பதை பெரிதாக்கியது அவர் காலத்தில்தான்.

புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாசகர்களைக் கருத்தில் கொண்டு அவர் நிறைய மாற்றங்களைச் செய்தார்.

புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு போர்டுக்கும் ஸ்பான்சர் ஏற்பாடு செய்தார்.

விடுமுறைநாட்களில் புத்தகக் கண்காட்சி முழுநாளும் செயல்படும். கண்காட்சி அரங்குகளில் வேலை செய்பவர் முழுநாளும் அங்கிருக்க வேண்டும். எனவே ஒவ்வோர் அரங்கிலுமுள்ள இருவருக்கு இலவசமாக உணவு அளிப்பதற்கு ஏற்பாடு செய்தவரும் அவரே. இது சென்னையில் மட்டுமே உள்ள நடைமுறை. வேறு ஊர் புத்தகக் கண்காட்சிகளில் இல்லாதது.

புத்தகக் கண்காட்சிக்கு கூரை போட்டது, தரை விரிப்புப் போட்டது எல்லாம் அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் காலத்தில்தான்.

2002 ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியை அப்துல்கலாம் துவக்கி வைத்தார். அப்போது அவர் அண்ணா யுனிவர்சிட்டியில் இருந்தார். அதே ஆண்டு ஜூலை மாதம் அவர் இந்திய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். இது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

2007 ஆம் ஆண்டு முதல் சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் ஹையர் செகன்டரிப் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. ஸ்டால்களின் எண்ணிக்கை 310 இல் இருந்து 600 ஆக உயர்ந்துவிட்டது.

தமிழ்ப் பதிப்பாளர்கள் குறைவாக இருந்ததுபோய் இப்போது 70 சதவீதம் தமிழ்ப்பதிப்பாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். 30 சதவீதம் பிறமொழிப் பதிப்பாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

முதலில் சங்கம் ஆரம்பித்த போது அதன் அலுவலகத்திற்குச் சொந்தக் கட்டிடம் கிடையாது. அப்போது ஹிக்கின்பாதம்ஸ் முகவரியில்தான் செயல்பட்டார்கள். ஆனால் இப்போது சொந்த அலுவலகக் கட்டிடம் உள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதி தனது சொந்தப் பணத்திலிருந்து தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்திற்கு 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை வைத்து ஒவ்வோராண்டும் சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் ஐவருக்கும், இந்திய மொழி எழுத்தாளர் ஒருவருக்கும், ஆங்கில மொழி எழுத்தாளர் ஒருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படுகிறது.

புத்தகக் கண்காட்சி நடத்துவதன் நோக்கமே மக்களை வாசிக்க வைப்பதுதான். ஆனால் இப்போது வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. குறிப்பாக இளைய தலைமுறையினர் புத்தக வாசிப்பில் அக்கறை காட்டுவதில்லை என்று சொல்கிறார்கள்.

ஆனால் இதை வேறு கோணத்தில் பார்க்க வேண்டியுள்ளது. இப்போது சமூக மனோபாவமே மாறிவிட்டது. என்ன தேவையோ அதை மட்டும் தெரிந்து கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். அதை இணையதளம் மூலமாக எளிதில் பெற்றுக் கொள்கிறார்கள். தேவைக்குப் பயன்படாத எதுவும் பயனற்றது என்று நினைக்கிறார்கள்.

முதலில் எல்லாம் பள்ளி, கல்லூரிகளில் பாடப் புத்தகத்தின் சுமை குறைவு. டிவி போன்ற பொழுதுபோக்குச் சாதனங்களும் கிடையாது. எனவே பாடப்புத்தகம் தவிர பிற புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் இருந்தது.

இப்போது படிப்பில் உயிரோட்டம் இல்லை. மனப்பாடம் செய்து தேர்வில் பாஸôகிறார்கள்.

எனவே படிப்பதில் இன்பம் இருந்தது போய்விட்டது. படிப்பதற்குச் சிரமப்படுபவர்கள். தேவையின் பொருட்டு ஆடியோ புத்தகங்களை எடுத்துப் போகிறார்கள்.

வாழ்க்கைக்குத் தேவையான டிப்ஸ்களைத் தரும் புத்தகங்களுக்கே இப்போது வரவேற்பு. வாழ்க்கையில் முன்னேற டிப்ஸ், இல்லற வாழ்க்கையை சந்தோஷமாக நடத்த டிப்ஸ், இண்டர்வியூவில் வெற்றியடைய டிப்ஸ் என்று டிப்ஸ்கள் தரும் குறிப்புகளே புத்தகங்களாகிப் போன காலம் இது.

என்றாலும் இக்காலத்தில் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க பலர் முனைந்து செயல்பட்டு வருகிறார்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இதில் ஐஏஎஸ் அதிகாரிகளும் அடக்கம். இறையன்பு, உதயசந்திரன், ஜவஹர், வி.பழனிச்சாமி, எஸ்.நாகராஜ் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள், சைலேந்திரபாபு போன்ற ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாரும் செல்கிற இடமெல்லாம் புத்தக வாசிப்பின் அவசியத்தை எடுத்துச் சொல்கிறார்கள். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாணவர்கள் மத்தியில், குழந்தைகள் மத்தியில் புத்தகம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து வருகிறார்.

ஈரோடு புத்தகக் கண்காட்சியை நடத்திவரும் ஸ்டாலின் குணசேகரன் புத்தகம் படிப்பதை ஓர் இயக்கமாகவே நடத்தி வருகிறார். அவர் புத்தக வியாபாரியோ, பதிப்பாளரோ அல்ல. இருந்தும் எந்தவித லாபநோக்கமுமில்லாமல் மக்களிடம் படிக்கும் பழக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அவர் செயல்பட்டு வருகிறார்.

சென்ற ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒரு சில பெரிய பதிப்பாளர்களே புத்தகக் கண்காட்சி முழுக்க ஆக்ரமித்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதற்குக் காரணம் பெரிய பெரிய பதிப்பாளர்கள் தன்னுடைய புத்தகங்கள் எல்லா ஸ்டாலிலும் இடம் பெற வேண்டும் என்று எல்லா ஸ்டாலிலும் கொண்டு போய் தங்கள் புத்தகங்களைக் கொட்டினார்கள். அதன் விளைவு பார்க்கிற இடங்களில் எல்லாம் அவர்கள் புத்தகங்களே இருந்தன. மக்களுக்கு இதனால் பதிப்பாளர் சங்கத்தைப் பற்றிய தவறான புரிதல் ஏற்பட்டது. பெரிய பதிப்பாளர்கள் இப்படி நடந்து கொள்வது மிகவும் மோசமான விஷயம்.

பிற பதிப்பகங்களும் தங்கள் புத்தகங்களை விற்பனை செய்ய ஸ்டாலை எடுத்துவிட்டு பெரிய பதிப்பகங்கள் கொடுக்கும் விற்பனைக் கமிஷனுக்காக அவர்கள் புத்தகங்களை விற்றுக் கொடுத்தன. இதைச் சம்பந்தப்பட்டவர்கள்தாம் தவிர்க்க வேண்டும்.

நல்ல புத்தகம் போட்டால் நிச்சயமாக விற்பனையாகும். எனவே  பதிப்பாளர்கள் தங்களுடைய புத்தகம் அதிகம் விற்பனையாக நல்ல புத்தகங்களை வெளியிடுவதே சிறந்த வழி'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.