சிற்றிதழ்: பதிப்பு... இதழியல்... ஊடகம்!
"காலச்சுவடு' சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் 1994 ஆம் ஆண்டு மீண்டும் துவங்கப்பட்டது. காலச்சுவடு பதிப்பகம் 1995 இல் துவங்கப்பட்டது. இதழ் - பதிப்பகம் இணைந்த செயல்பாடு என்பது இன்று தமிழில் ஒரு சூத்திர


"கா லச்சுவடு' சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் 1994 ஆம் ஆண்டு மீண்டும் துவங்கப்பட்டது. காலச்சுவடு பதிப்பகம் 1995 இல் துவங்கப்பட்டது. இதழ் - பதிப்பகம் இணைந்த செயல்பாடு என்பது இன்று தமிழில் ஒரு சூத்திரமாக உருவாகியிருக்கிறது. சில தீவிரப் பதிப்பகங்கள் இந்த மாதிரியைக் கைக்கொண்டுள்ளன. புத்தாயிரத்தில் சில வணிக இதழியல் நிறுவனங்களும்கூட தீவிர ஊடகங்களின் தாக்கத்தில் பதிப்பகங்களைத் துவக்கியுள்ளன.
என்னிடம் பலமுறை கேட்கப்படும் கேள்வி, இந்தச் சூத்திரத்தைத் திட்டமிட்டு உருவாக்கினேனா என்பதுதான். இல்லை. சந்தர்ப்பவசமாக ஏற்பட்ட வாய்ப்பை, அதன் வலுவை உணர்ந்து "காலச்சுவடு' கைக்கொண்டது. "காலச்சுவடு' துவங்கப்பட்ட சில மாதங்களிலேயே பதிப்பகம் துவங்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோது அதன் சாத்தியப்பாடுகளை உணர்ந்து செயல்பட்டோம்.
இதழ் - பதிப்பகம் என்ற இணைவுக்குத் தமிழில் சில முன்னோடிகள் உண்டு. நவீன தமிழ்ப் பதிப்புலகில் பிதாமகர் அந்தஸ்தோடு நினைவு கூரப்படும் "சக்தி' கோவிந்தன், "சக்தி' இதழையும் பதிப்பகத்தையும் இணைத்தே 1939 இல் துவக்கினார். "எழுத்து' இதழை 1959 இல் துவக்கிய சிற்றிதழ் இயக்க முன்னோடியான சி.சு.செல்லப்பா சில ஆண்டுகளுக்குப் பிறகு "எழுத்து' பிரசுரத்தையும் துவங்கினார்.
இன்று பதிப்பகங்களும் இதழியலும், "ஊடகம்' என்ற தகவல் பரிமாற்றத்தின் தளத்தில் இணைந்துள்ளன. நவீனத் தொழில்நுட்பங்களின் உருவாக்கத்தில் - இணையம், மின் நூல்கள், ஒலிப்பதிவு நூல்கள் - பதிப்பகத்திற்கும் இதழியலுக்குமான வேறுபாடு மங்கி வருகிறது. இன்று அந்த வேறுபாடு உணரக் கூடியதாக இருப்பினும் விளக்கிவிடக் கூடியதாக இல்லை. படைப்புத் தளத்தில், உன்னதமான இதழியல் எழுத்திற்கும் இலக்கியத்திற்குமான இடைவெளி நெருங்கி வருகிறது.
ஓர் ஆரோக்கியமான சூழலில் இதழியலும் பதிப்பகமும் இணையாதிருப்பதே சாலச் சிறந்தது. இதழியல் மேற்கொள்ள வேண்டிய தேர்வுகளும் வெளிப்படுத்தும் கருத்துகளும் பதிப்பகத்தைப் பாதிக்கக்கூடும். அதுபோல் பதிப்பகம் சார்ந்து உருவாகும் மதிப்பீடுகள் இதழியலுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடும். "காலச்சுவடு' மற்றும் பதிப்பகச் செயல்பாட்டில் இந்தச் சிக்கல்களைப் பலமுறை அனுபவித்திருக்கிறோம். "காலச்சுவடு' இதழின் செயல்பாட்டுடன் ஏற்படும் முரண்கள் பதிப்பகத்தைப் பாதிக்கின்றன. தற்போது காலச்சுவடு இதழை நூலகங்களில் தடை செய்வதை எதிர்த்து நாங்கள் இயங்கத் துவங்கியதும் நண்பர்கள் ஒரே கேள்வியை எழுப்பினர். ""காலச்சுவடு பதிப்பக வெளியீடுகள் பொதுத்துறை நூலகங்களில் வாங்கப்படுவது பாதிக்கப்படுமே, அதை எவ்வாறு சமாளிப்பீர்கள்?''. ஆனாலும் மாற்றுத் தமிழ்ச் செயல்பாடுகளில் இவை இணைவது பல வலுக்களையும் ஏற்படுத்துகிறது. ஒரு இதழ், பதிப்பகத்திற்கு அடையாளம் தருகிறது. தொடர்புகளை ஏற்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. இதழ்களில் வரும் "தொடர்கதைகள்' பின்னர் பதிப்பகத்தில் நூலாகின்றன. அல்லது இதழிலிருந்து படைப்புகள் பல்வேறு பொருள் சார்ந்து தொகுக்கப்படுகின்றன. இந்த விதங்களில் பதிப்பகத்திற்கான பிரதிகளை உருவாக்கவும் இதழியல் வாய்ப்பளிக்கிறது. பதிப்பகத்திற்கு இல்லாத அதிகாரம் இதழியலுக்கு உண்டு!
மேலும் இன்று புத்தகப் பண்பாட்டில் ஏற்பட்டுவரும் பாய்ச்சல்களுக்கு ஈடு கொடுத்து நூல்களுக்கு உரிய கவனத்தை அளிக்கும் பணியை நமது வெகுஜன இதழ்கள் மேற்கொள்ளத் தவறிவிடுகின்றன. இந்தப் பின்னணியில் பதிப்பகங்கள் தமக்கான ஊடகங்களை உருவாக்க வேண்டிய அழுத்தம் ஏற்பட்டுவிடுகிறது.
ஒவ்வொரு பண்பாட்டுச் சூழலும் தனக்கான செயல்திட்டங்களை உருவாக்கிக் கொள்கிறது. மேற்கில் பாரம்பரியமாக, பதிப்பகம், இதழியல், விநியோகம், விற்பனை ஆகியன தனித்தனியாகவே இயங்கி வருகின்றன. உலகமயமாதலும், மீடியாவின் வளர்ச்சியும் சில உடைவுகளை இப்போது இதில் ஏற்படுத்தியுள்ளன என்றபோதும்.
தமிழகம் தனக்காக உருவாக்கிவரும் செயல்திட்டங்கள் நமது பண்பாட்டு வணிக அடிப்படைகளிலிருந்து உருவானவை. பதிப்பகம், விநியோகம், இதழியல், விற்பனையகங்கள் என எல்லாவற்றையும் கலந்து செய்வது நமக்கான செயல்திட்டமாக உள்ளது. அவியல் போன்ற பதார்த்தத்தை மேற்கால் கற்பனை செய்யவே முடியாது. நம்மால் அது இல்லாமல் வாழ முடியாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...