ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சல் போக்கும் தேன் நெய்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சல் போக்கும் தேன் நெய்!

எனக்கு வயது 73. சென்ற 1 1/2 வருடங்களாக நெஞ்சிலும் முதுகிலும் தீ பிடித்த மாதிரி எரிச்சலாக உள்ளது. பல டாக்டர்களிடமும் காட்டிவிட்டேன். இதுவரை குணமாகவில்லை. எனக்கு 5 வருடமாக ஆஸ்துமா இருக்கிறது. இந்த வியாத
Published on

எனக்கு வயது 73. சென்ற 1 1/2 வருடங்களாக நெஞ்சிலும் முதுகிலும் தீ பிடித்த மாதிரி எரிச்சலாக உள்ளது. பல டாக்டர்களிடமும் காட்டிவிட்டேன். இதுவரை குணமாகவில்லை. எனக்கு 5 வருடமாக ஆஸ்துமா இருக்கிறது. இந்த வியாதியைப் போக்க வழி என்ன?

எஸ்பிஎம் இப்ராகீம், மேட்டுப்பாளையம்.

ஆஸ்துமா உபாதை மாற நீங்கள் அதிகம் வீர்யம் கொண்ட மருந்துகளைச் சாப்பிட நேர்ந்திருந்தால் வயிற்றில் புண் ஏற்பட்டு எரிச்சலைத் தூண்டிவிட்டிருக்கலாம். அல்லது சூடான வீர்யம் கொண்ட மீன், சிக்கன், கருவாடு, பட்டை, சோம்பு, சீரகம், மசாலா ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குருமா போன்ற வகையறாக்களைச் சூடாகவும் மனதில் மிகுந்த பரபரப்பு, கோப தாபங்களுடன் நீங்கள் அடிக்கடி சாப்பிடுபவராக இருந்தாலும் வயிற்றில் புண் ஏற்பட்டு எரிச்சலைக் கிளப்பியிருக்கலாம்.

இரைப்பைக்கும் சிறுகுடலுக்கும் நடுவில் அமைந்துள்ள குடற்பகுதியில் "பாசகம்' எனும் பித்தம் தன் முக்கியத் தொழிலாகிய உணவைச் செரிப்பது எனும் செயலைத் திறம்பட நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. இதன் செயல்பாட்டை அதிகம் தூண்டிவிடும் முன் குறிப்பிட்ட உணவுவகைகளையும், மருந்துகளையும் சாப்பிடும்பட்சத்தில்,  இந்தப் பித்தமானது தன் கட்டுப்பாட்டை இழந்து மேல் நோக்கி உணவுக் குழாயின் வழியாக வாய் நோக்கி நகர்கிறது. அப்போது நெஞ்சுப் பகுதியிலும் முதுகுப் பகுதியிலும் தீப்பிடித்தது போல நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். காலையில் எழும்போது வாய் கசக்கும். பல் தேய்க்கும்போது உமிழ்நீருடன் பித்தமும் வெளியேறும். அதன் வெளியேற்றம் சிறிது நிம்மதியைக் குடலுக்குத் தரும்.

இட்லி தோசை மாவிலுள்ள உளுந்துக்கும் இந்தப் பித்த ஊறலை அதிகப்படுத்தும் தன்மையிருப்பதால் இரவில் ஊற வைத்து மறுநாள் காலை பொங்கி நிற்கும் பொருளாகிய இட்லி மாவை நீங்கள் காலை உணவாக கொள்ளக் கூடாது. அது வயிற்றில் புளிப்பைத் தருவதால் உங்களுடைய உபாதை குறைய வாய்ப்பில்லை. மைதா சேர்த்து தயாரிக்கப்படும் பிரட் வகைகள், சாஸ், ஊறுகாய், சோடா, பீஸ் மசாலா, பேல்பூரி, பானி பூரி ஆகியவற்றையும் நீங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இப்படி ருசிகரமான பதார்த்தங்களை காலை உணவாக உங்களால் சாப்பிட முடியாமற் போனது வேதனையான விஷயம்தான். வேறு என்னதான் சாப்பிடுவது? என்று நினைக்கத் தோன்றும். வயிற்றில் உள்ள புண் ஆற வேண்டும். பித்தத்தின் மேல் நோக்கிய விபரீத செயல் மாறி தன் நிலைக்குத் திரும்ப வேண்டும். உணவும் ருசியாக இருக்க வேண்டும். அந்த வகையில் காலை உணவாக ஜவ்வரிசி, நெல் பொரி, புழுங்கலரிசி, தனியா, நெல்லி முள்ளி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கஞ்சியை வெதுவெதுப்பாகக் குடித்தால் மிகவும் நல்லது. இதில் நெல்பொரியும் அரிசியும் சம அளவாக அரை டம்ளரும், ஜவ்வரிசியை அரிசிக்குக் கால் பங்கும், தனியா, நெல் முள்ளியை வகைக்கு 2 கிராம் வீதமும், 5 டம்ளர் தண்ணீர் கஞ்சி காய்ச்சிப் பயன்படுத்துவது சிறந்தது.

குடித்த இந்தக் கஞ்சி செரித்தவுடன் பசி எடுக்கும். அப்போது தேன் 1/4 - 1/2 அவுன்ஸ் (1 அவுன்ஸ் = 25 மி.லி.) உருக்கிய நெய் 1/2 - 1 அவுன்ஸ். இரண்டும் கலந்து நக்கிச் சாப்பிடவும். முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டியது, தேனும் நெய்யும் சரி சமமான அளவில் கலந்து சாப்பிடக் கூடாது. நெய்யின் அளவில் பாதியளவு தேன் எடுத்துக் கொள்வது சம்பிரதாயம். கப தோஷத்தின் இருப்பிடமாகிய நெஞ்சில் உங்களுக்கு  பித்தத்தின் சீற்றம் அதிகரித்திருப்பதால் இந்தத் தேன் நெய் பிரயோகம் நல்ல பலனைத் தரும்.

மதிய உணவு வெதுவெதுப்பான புழுங்கலரிசி சாதத்துடன் சிறிது ஆயுர்வேத மூலிகை நெய் மருந்தாகிய திக்தகம் கிருதத்தைக் கலந்து, பயத்தம் பருப்பு வேக வைத்த நீரைச் சேர்த்துச் சாப்பிடவும். மணத்தக்காளிக் கீரை, வாழைப் பூ பொரியல், புடலங்காய்க் கூட்டு, நெல்லிக்காய் தயிர்ப்பச்சடி, ஜவ்வரிசிப் பாயசம், தக்காளி ரசம், கடைந்த வெண்ணெய் நீக்காத மோர் போன்றவை சாப்பிட பத்திய உணவுகளாகும்.

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை குடலில் சேரும் பித்தத்தை வெளியேற்ற மிதமான அளவில் பேதியை உண்டாக்கும் அவிபத்தி சூரணத்தை 5 - 8 கிராம் அளவில் எடுத்து 10 - 12 மி.லி. தேன் குழைத்து மதிய உணவிற்கு முன்பாக நக்கிச் சாப்பிட மிக நல்லது.

இரவில் கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் நன்றாக வேக வைத்த கறிகாய்களுடன் சாப்பிடவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com