ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கர்ப்பப் பையில் புற்றுநோய்!

என் அம்மாவிற்கு 85 வயதாகிறது. கர்ப்பப்பை புற்றுநோயால் அவதிப்படுகிறார். அவருக்கு ரத்தப்போக்கும் உள்ளது. இவை குணமாக உணவும் மருந்தும் என்ன சாப்பிடலாம்? எஸ்.ஆதிநாராயணன்,காஞ்சிபுரம். கபதோஷத்தின் குணங்களாகி
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கர்ப்பப் பையில் புற்றுநோய்!
Updated on
2 min read

என் அம்மாவிற்கு 85 வயதாகிறது. கர்ப்பப்பை புற்றுநோயால் அவதிப்படுகிறார். அவருக்கு ரத்தப்போக்கும் உள்ளது. இவை குணமாக உணவும் மருந்தும் என்ன சாப்பிடலாம்?

எஸ்.ஆதிநாராயணன்,காஞ்சிபுரம்.

கபதோஷத்தின் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைப்பு போன்றவை உணவின் வழியாக வயிற்றில் வந்து சேரும்போது, பசி எனும் தீயில் அவை பக்குவப்படுத்தப்பட்டு, உடல் முழுவதும் பரவிச் செல்லும்போது, உடல் உட்புற உறுப்புகள் அனைத்தும் போஷிக்கப்படுகின்றன.

வயோதிகத்தில் உடல் அங்க அசைவுகள் சோர்வின் காரணமாக மந்தப்படுவதால், பசித் தீயும் இளம் வயதில் இருந்த வேகம் இல்லாமல் மந்தமான நிலையில் தன் செயல்பாடுகளைச் செய்யும். அம்மாவின் மேலுள்ள பாசத்தினால் அவர்களுக்கு உடல் புஷ்டியைத் தரும் டானிக் மருந்துகளையும், உணவுகளையும் நீங்கள் அவருக்குத் தரும்பட்சத்தில் அதுவே பெரும் வினையாக அமையலாம். ஏனென்றால் இந்தப் புஷ்டி தரும் மருந்துகளிலும், உணவு வகைகளிலும் முன் குறிப்பிட்ட கப தோஷத்தின் குணங்கள் நிரம்பியுள்ளன. அவை பசித்தீயில் சரிவர வேகாமல் உடலில் எந்தப் பகுதி அதிகம் உழைத்துக் களைப்படைந்துள்ளதோ அந்தப் பகுதியில் சேருகின்றது.

கபத்தின் எந்த குணங்கள் உடலில் புஷ்டிக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்ததோ, அதே குணங்களின் வளர்ச்சி உடலில் ஒரு பகுதியில் மட்டும் தன் நிலை மீறினால், வளர்ச்சி விகாரமாக, கேன்சர் எனும் வடிவில் ஏற்படுகின்றது. உங்களுடைய அம்மாவிற்கும் மேற்குறிப்பிட்ட வழிகளின் மூலமாக கர்ப்பப்பை கேன்சர் ஏற்பட்டிருக்கலாம்.

கபத்தின் குண ஆதிக்கங்களை அகற்றவும் ரத்தக் கசிவை நிறுத்துவதற்கும் கசப்பும் துவர்ப்பும் நிறைந்த உணவும் மருந்துகளும் மட்டுமே உதவக் கூடும். கசப்பு பசித்தீயையும், தாது அக்னிகளையும் தூண்டி, உணவை நன்கு பாகம் செய்கின்றது. கபத்தின் குணங்களால் ஏற்பட்ட கேன்சர் அடர்த்தியை தளர்த்துகிறது. அதனால் நீங்கள் அம்மாவின் உணவில் பாகற்காய், சுண்டைக்காய், வாழைக் கச்சல், கொள்ளு, பாசிப்பருப்பு, வாழைப்பூ, மணத்தக்காளி, கறிவேப்பிலை, நெல்லிமுள்ளி, நன்கு கடைந்து ஆடை எடுத்த மோர், ஆடை புடைக்க இளந்தீயில் காய்ச்சி ஆடை நீக்கிய பசுவின் பால், வல்லாரைக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றை உணவாகக் கொடுக்கவும்.

துவர்ப்புச் சுவை கொண்ட நாவல், வில்வ இலை போன்றவற்றை இடித்து, துணியில் சலித்து, ஒன்றிரண்டு சிட்டிகை எடுத்து, தேனுடன் குழைத்துக் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுதல் போன்றவற்றின் மூலமாக கேன்சர் கட்டியின் தீவிரத்தைக் குறைக்கலாம். அதை மேலும் பரவச் செய்யாமல் அதன் பரிணாம வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

கருப்பையிலுள்ள கேன்சர் கட்டியின் காரணமாக ஏற்படும் ரத்தக் கசிவை நிறுத்த,  அருகம்புல் 15 கிராம், 1 லிட்டர் தண்ணீரில் சேர்த்து, கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, 125 மி.லி. காலையிலும் 125 மி.லி. மாலையிலும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

ஒரு மாங்கொட்டைப் பருப்பு, 1 செம்பருத்திப்பூ ( 5 இதழ்கள் கொண்டது ) இரண்டையும் காலை, இரவு உணவிற்கு 1 மணி நேரம் முன்பாக மென்று சாப்பிடுவது.

 கறுப்பு எள்ளு 10 கிராம் சர்க்கரை 10 கிராம் சேர்த்துப் பொடித்து ஆட்டுப் பாலுடன் கலக்கி 3-4 தடவைகள் சாப்பிடவும். ரத்த மூலத்திற்கு இது நல்லதே.

 வல்லாரை இலைச்சாறு அரை அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ், பால் அரை அவுன்ஸ் கலந்து 1 நாளில் 3 வேளை சாப்பிடவும். மூல மூளைகள் நசுங்கி ஏற்படும் மலத்துடன் கூடிய ரத்தக் கசிவை நிறுத்துவதற்கும் இதைப் பயன்படுத்தலாம்.

இளசான முள்ளங்கியை பச்சையாகவே கொஞ்சம் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம்.  கருவேலம் பிசின் சுத்தி செய்தது 10 கிராம், பொரித்த படிகாரச் சூரணம் 5 கிராம், நாககேசர சூர்ணம் 5 கிராம் இலவம் பிசின் 5 கிராம் நான்கையும் ஒன்றாய்க் கலந்து வைத்துக் கொண்டு வேளைக்கு 2 கிராம் வீதம் நாளில் 3 தரம் ஆட்டுப்பால் ஆவின் பால், புளிக்காத பழ ரசம் ஏதாவது ஓர் அனுபானத்துடன் பருகலாம். ரத்த மூலத்திற்கும் நல்லதே.

விற்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் புஷ்யானுகம் சூர்ணம் 3-5 கிராம் வீதம் எடுத்து, சிறிது அரிசி கழுவிய தண்ணீரும், தேனும் குழைத்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட ரத்தப்போக்கு நின்றுவிடும்.

    தயிர், பச்சரிசி, அதிக இனிப்பு, வெல்லம், பகல் தூக்கம், உளுந்து முதலியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com