கலைவண்ணம்: உயிர்ப்போடு ஒரு சிலை !

இலக்கியச் சிறப்பும்,இதிகாசப் பெருமையும் உடைய ஊர் திருஉத்தரகோசமங்கை. ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 19 கி.மீ தூரத்தில் உள்ளது. உத்தரம் என்றால் உபதேசம்,கோசம் என்றால் ரகசியம்,மங்கை என்றா
கலைவண்ணம்: உயிர்ப்போடு ஒரு சிலை !
Updated on
1 min read

இலக்கியச் சிறப்பும்,இதிகாசப் பெருமையும் உடைய ஊர் திருஉத்தரகோசமங்கை. ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 19 கி.மீ தூரத்தில் உள்ளது.

உத்தரம் என்றால் உபதேசம்,கோசம் என்றால் ரகசியம்,மங்கை என்றால் பார்வதி. உயர்ந்த தரமான வேதாகம தேவ ரகசியத்தை பார்வதிக்கு உபதேசம் செய்த புண்ணிய ஸ்தலம் என்பதால் திருஉத்தரகோசமங்கை என்ற பெயர் பெற்றது.

இக்கோயிலில் மூலவராக சுயம்பு லிங்கமாக இறைவன் மங்களநாதரும்,இறைவி மங்களேசுவரியும் காட்சி தருகின்றனர்.

இத்திருக்கோயிலில் நடராஜருக்கென்றே தனி சன்னதி இருக்கிறது. இங்குள்ள நடராஜர் நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதக்கல்லினால் ஆன ஒரு ஆள் உயரத்தில் நடனமாடும் திருக்கோலத்தில் விலை மதிக்கவே முடியாத அபூர்வ நடராஜராகப் பக்தர்களுக்கு காட்சியளிப்பது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பு.

ஒரே பச்சை மரகதக்கல்லினால் ஆன இச்சிலை மிகப்பழமையான கலைத்திறனுக்கும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஒளி வெள்ளத்தில் இச்சிலையை உற்று நோக்கினால் சிலை உயிரோடு உள்ளது போலவே உடலில் பச்சை நரம்புகள் எப்படி கண்ணுக்கு தெரிகிறதோ அப்படி இந்தச் சிலையும் தெரிகிறது.

பச்சை மரகதம் இயற்கையிலேயே மென்மையானது. ஒலி,ஒளி அதிர்வுகளைத் தாங்கும் சக்தி இல்லாதது என்பதால் இந்தச் சிலையை சந்தனக்கலவையால் பூசி பாதுகாத்து வருகிறார்கள்.

வருடத்தில் ஒருநாள் மார்கழி மாதத்தில் திருவாதிரைக்கு முதல் நாள் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காகச் சிலையில் இருந்து சந்தனப்பூச்சு கலைக்கப்பட்டு அன்று ஒரு நாள் மட்டும் திறந்து வைக்கப்படுகிறது. உயிர்ப் பொருளான பச்சை மரகதத்தின் மீது பூசப்படும் சந்தனம் மரகதத்தால் ஈர்க்கப்பட்டு ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இச்சந்தனம் தெய்வத்தோடு இரண்டறக் கலந்து நோய் தீர்க்கும் சக்தி பெறுகிறது என்பதால் இந்நடராஜரின் மீது பூசப்பட்ட சந்தனத்தைப் பக்தர்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர்.

தினமும் அபிஷேகம் இல்லாததால் அவரது பிரதிநிதிகளான மரகத மற்றும் ஸ்படிக லிங்கத்திற்குத் தினசரி அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் மூலமாக நடராஜருக்கே அபிஷேகம் நடப்பதாக நடைமுறை இருந்து வருகிறது. ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதால் அன்று ஒருநாள் மட்டும் இந்த இரு லிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடப்பதில்லை. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் இம் மாதம் 7 ஆம் தேதி அதிகாலை 6 மணி முதல் 7.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் மட்டுமே சந்தனப்பூச்சு கலைக்கப்படுவது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமானதாக இருந்தாலும் இந்த ஆண்டு மட்டும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனப்பூச்சு களைக்கப்படுகிறது. கும்பாபிஷேகமும்,சிறப்பு அபிஷேகங்களும் முடிந்த பின்பு மீண்டும் அன்றைய தினமே சந்தனம் பூசப்படவுள்ளது.

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களால் தலைசிறந்த ஸ்தபதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இச்சிலையினை பச்சை மரகத மேனியை கும்பாபிஷேகத்தன்று பக்தர்கள் பார்க்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com