48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

சாதனை: 'பரி' பேரீச்சையை அப்படியே சாப்பிடலாம்!

பேரீச்சம் பழத்தை பாலைவனத்தில் மட்டுமல்ல நாட்டுப்பகுதியிலும் விளைவிக்க முடியும். அதுமட்டுமல்ல பழத்தை உண்ணுவதற்காக பதப்படுத்தும் வரை காத்திருக்கவும் தேவையில்லை. மரத்தில் இருந்தே அப்படியே பறித்து பேரீச்ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:01 pm

பேரீச்சம் பழத்தை பாலைவனத்தில் மட்டுமல்ல நாட்டுப்பகுதியிலும் விளைவிக்க முடியும். அதுமட்டுமல்ல பழத்தை உண்ணுவதற்காக பதப்படுத்தும் வரை காத்திருக்கவும் தேவையில்லை. மரத்தில் இருந்தே அப்படியே பறித்து பேரீச்சம் பழத்தைச் சாப்பிட முடியும் என்றால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும். கண்ணெதிரிலேயே நிரூபணம் இருக்கிறது. திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிப்பாடியில் தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக பேரீச்சையை பண்ணை நிலப்பகுதியில் பயிரிட்டு அறுவடையையும் செய்துள்ளனர்.

திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் உள்ளது முள்ளிப்பாடி. இங்கு 12 ஏக்கர் பரப்பளவில் பேரீச்சை மரம் வளர்த்து வெற்றிகரமாக முதல் அறுவடையையும் செய்துள்ளார் கே. திருப்பதி. 'பாலைவனப் பயிர் என அழைக்கப்படும் பேரீச்சை ஊருக்குள் வளர்வது எப்படி?' என்றோம் திருப்பதியிடம். அவர் பேரீச்சையின் சுவையோடு அது பயிர் செய்த வரலாற்றையும் சொல்லத் தொடங்கினார்:

'தென்னிந்தியாவுக்கு வேண்டுமானால் பேரீச்சை பயிரிடுவது என்பது புதிதாக இருக்கலாம். அமெரிக்காவில் பல்வேறு இடங்களிலும் பேரீச்சை பயிரிடப்பட்டு வருகிறது. கலிஃபோர்னியாவில் சாஃப்ட்வேர் என்ஜினீயராகப் பணியாற்றி வரும் எனது மகன் கலிஃபோர்னியா மாகாணத்தின் பல இடங்களிலும் பேரீச்சை சிறப்பாக பயிரிடப்பட்டு வருவதைப் பார்த்ததும் தானும் இதுபோல் பேரீச்சை பண்ணை அமைக்க விரும்பி தனது ஆசையை என்னிடம் கூறினார்.

திண்டுக்கல் நாகல் நகர், மெங்கிள்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் யாரோ தின்றுவிட்டுப் போட்ட பேரீச்சை விதையின் மூலம் தானாகவே 2 மரங்கள் வளர்ந்து இருப்பதைக் கண்ட உடன் நகர் பகுதிகளிலும் பேரீச்சை வளரும் என்பதற்கு இந்த மரங்கள் சாட்சியாக இருப்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக வளர்ந்த இரண்டு மரங்களும் ஆண் மரங்களாகப் போனதால் காய்ப்பு இல்லாமலும், பேரீச்சை மரம் குறித்த தகவல் பலருக்கும் தெரியாமல் போனது. நகர் பகுதிகளில் பேரீச்சை வளர்க்க முடியுமா என்பது குறித்து வேளாண் பல்கலைக் கழகத்தினரிடம் கேட்டபோது, பேரீச்சை வளர்வதற்கான வாய்ப்பு இல்லை என்றுதான் கூறினர். ஏற்கனவே திண்டுக்கல் பகுதியில் இரண்டு மரங்கள் வளர்ந்திருப்பதால் நாம் வளர்த்தாலும் மரம் வளரும் என்ற எண்ணம் உறுதியாக இருந்ததால் முள்ளிப்பாடியில் 12 ஏக்கர் பரப்பில் பேரீச்சை நடலாம் என முடிவு செய்தோம்.

பேரீச்சை மரம் வளர அடிப்படையாக என்ன தேவை என்பதை அறிய முயன்றபோது 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும், தண்ணீர் வசதியும் இருந்தால் போதும் பேரீச்சை வளர்க்க முடியும் என்பது தெரிந்தது. விதை மூலம் மரம் வளர்த்தால் ஆண், பெண் மரம் என்பது செடி வளரும் போது உடனே தெரியாது. ஏனெனில் மூன்று, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே ஆண் மரமா, பெண் மரமா என்பது தெரியும். அதனால விதை மூலம் மரம் வளர்க்கும் முடிவை தள்ளி வைத்து வேறு எந்த முறையில் மரம் வளர்ப்பது என்பது குறித்து விசாரித்தோம்.

அப்போது குஜராத் மாநிலத்தில் பேரீச்சை பண்ணை குறித்து தெரியவந்தது. அங்கு விசாரித்தபோது பேரீச்சை மரங்களில் 2 ஆயிரம் ரகங்கள் இருப்பதாக தெரிந்து கொண்டோம். மரத்தில் பழம் பழுக்கும் போதே அப்படியே பறித்து உண்ணும் ரகத்தை சேர்ந்தது 'பரி' என்ற ரகம் தெரிய வந்ததைத் தொடர்ந்து இதனை வளர்க்க முடிவு செய்தோம். இந்த ரகத்தை லண்டன் நகரில் பேரீச்சைக்கான லேப் மூலம் திசு கன்றுகள் பெற்று பேரீச்சை வளர்க்கலாம் என தெரியவந்தது. ஒரு கன்று ரூ.3,500 என்ற விலையில் 650 செடிகள் வாங்கி குஜராத் பண்ணையில் பராமரிப்பு செய்து திண்டுக்கல்லுக்கு கொண்டு வந்தோம்.

இதில் பெண் மரக் கன்றுகளை மட்டுமே பெற்று அவற்றை நடவு செய்து வளர்க்க முடியும் என்பதால் விளைச்சல் இருப்பது உறுதியானது. இருந்தபோதிலும் மகரந்த சேர்க்கைக்கு ஆண் மரம் இல்லாம் எதுவும் செய்யமுடியாது என்பதால் ஆண் மரக்கன்றுகளையும் வாங்கி வந்து நட்டோம். மகரந்தசேர்க்கை இயற்கையான முறையில் நடைபெறாது. பொதுவாக ஜனவரி மாதத்தில் ஆண் மரம் பாளை விட்டு மகரந்தசேர்க்கைக்கு தயாராக இருந்தாலும் பெண் மரம் மார்ச் மாதத்தில்தான் சேர்க்கைக்கு தயாராகும். ஆண் மரத்தின் பாளைகளை உதிர்த்து அதை பொடியாக்கி மார்ச் மாதத்தில் பெண் மரம் பூ விடும் போது தயாராக உள்ள பொடியை அதன் மீது தூவி மகரந்தசேர்க்கையை நாம்தான் செயற்கையாக நடத்தவேண்டும்.

மரக்கன்றுகளை நட்ட மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே விளைச்சல் என்பது இருக்கும். இந்த காலத்தில் மரக்கன்றுகளுக்கு அடியில் உள்ள களையை எடுத்து ஒரு மரத்திற்கு சுமார் 100 லிட்டர் தண்ணீரை சொட்டு நீர் பாசனம் மூலம் வழங்க வேண்டும். இது முறையாக செய்யப்பட்டதனால் 3 ஆண்டுகளிலேயே நாங்கள் நட்டிருந்த 650 கன்றுகளில் 400 கன்றுகள் காய்க்கத் தொடங்கியது. ஒரு மரத்திற்கு சுமார் 20 கிலோ வீதம் 8 டன் பேரீச்சை பழம் கிடைத்தது.

மற்ற பேரீச்சைகளில் டாரின்' என்ற பால் சத்து இருப்பதனால் அவற்றை அப்படியே சாப்பிட முடியாது. ஏனெனில் அப்படியே சாப்பிடும்போது தொண்டையைக் கட்டும், இதனால் அவற்றைப் பதப்படுத்திய பின்னர் தான் சாப்பிட முடியும். ஆனால் 'பரி' என்ற இந்த ரகத்திற்கு மட்டும் மரத்தில் இருக்கும் போதே பறித்து சாப்பிடும் தன்மை உள்ளது.

பறித்த பழத்தை ஏதும் செய்யாமல் அப்படியே வைத்திருந்து 1 வாரம் வரை சாப்பிடலாம். குளிர்பதன பெட்டியில் வைத்து உபயோகப்படுத்தினால் ஒரு வருடம் வரை சாப்பிடலாம். இந்த 'பரி' ரகம் ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரையிலும் விற்பனையானது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நேரடியாக பேரீச்சையைப் பண்ணைக்கு வந்து வாங்கி செல்கின்றனர்.

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக திண்டுக்கல் நகரில்தான் பேரீச்சை பயிரிடப்பட்டுள்ளது. பேரீச்சைப் பண்ணையைப் பலரும் பார்த்து செல்வது மட்டுமின்றி இது குறித்து அறிந்த சினிமாக்காரர்கள் கூட இங்கு வந்து சூட்டிங்கை நடத்திச் சென்றுள்ளனர். பேரீச்சை எங்களது பண்ணையில் விளைந்தது மட்டும் எங்களுக்கு மகிழ்சியில்லை திண்டுக்கல்லில் பேரீச்சை என்பது தென்னகம் முழுவதும் பரவி வருவது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.

இது போல் பேரீச்சை பண்ணை அமைக்க யாராவது முயற்சி செய்தால் இது குறித்த தொழில் நுட்பத்தையும், வழிகாட்டுதலையும் சொல்லித் தர தயாராக இருப்பதாக திருப்பதி தெரிவித்தபோது, பேரீச்சைப் பழத்தை சாப்பிட்டது போன்ற உணர்வு நாவுக்கும், மனதுக்கும் ஒருசேரக் கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.