பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மருத்துவம்: புற்றுக்குப் பால் வார்க்கும் புகையிலை!

இக்காலத்தில் யாருக்கு? என்ன நோய் வரும்? என்று யாராலும் சொல்ல முடியாது. குழந்தைகள், முதியவர்கள், ஆண், பெண், படித்தவர், படிக்காதவர் என்கிற வேறுபாடின்றி எல்லாரும் நோய்களால் துன்புறுகிறார்கள். அவருக்கு எந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:38 am

ந. ஜீவா

இக்காலத்தில் யாருக்கு? என்ன நோய் வரும்? என்று யாராலும் சொல்ல முடியாது. குழந்தைகள், முதியவர்கள், ஆண், பெண், படித்தவர், படிக்காதவர் என்கிற வேறுபாடின்றி எல்லாரும் நோய்களால் துன்புறுகிறார்கள். அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாதே? அவருக்கு எப்படி வந்தது புற்றுநோய்? என்று அதிர்ச்சியுடன் கேட்பவர்களைப் பார்க்கிறோம்.

புற்றுநோய் வந்தவர்களைப் பார்த்து அவர்களுடன் நெருங்கி நின்று பேசாமல் கூட ஒதுங்கிப் போகிறவர்கள் அதிகம். ""புற்றுநோய் தொற்றுநோயல்ல'' என்கிறார் சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் உளவியல் வல்லுநராகப் பணிபுரியும் விதுபாலா. புற்றுநோய் உளவியல்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் அவர். உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலைத் தடுப்பு மையத்தின் பொறுப்பாளராகவும் அவர் இருக்கிறார்.

 ""புற்றுநோய் வந்தவர்களிடம் இருந்து சிலர் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். குழந்தைகளை அவர்களுடைய பக்கத்தில் விடவே மாட்டார்கள். புற்றுநோய் கிருமிகளினால் பரவும் தொற்று நோயல்ல'' என்கிறார் விதுபாலா.

புற்றுநோய் என்றால் என்ன? என்ற அடிப்படைக் கேள்வியுடன் தொடங்கினோம்.

""மனித உடல் செல்களால் ஆனது. மனித உடலில் காயம் ஏற்பட்டால், அதாவது செல்கள் பிளவுபட்டால், அந்தக் காயம் ஆறிவிடும். அதாவது காயம்பட்ட இடத்தில் உள்ள பிளவுபட்ட செல்கள் வளர்ந்துவிடும். வளர்ந்தவுடன் தனது வளர்ச்சியை நிறுத்திவிடும்.

ஆனால் அந்தக் காயத்தைத் திரும்பத் திரும்பக் காயமாக்கிக் கொண்டிருந்தால், அந்தக் காயத்தை ஆற வைக்க வளரும் செல்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். வளர்ச்சி கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்து செல்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலையைத்தான் புற்றுநோய் என்கிறோம்.

புகையிலையைப் பயன்படுத்தும் ஒருவருக்கு வாயிலோ, நுரையீரலிலோ ஏற்பட்ட ஒரு புண், அவர் தொடர்ந்து புகையிலையைப் பயன்படுத்திக் கொண்டே இருப்பதால் எரிச்சலூட்டப்படும். அந்தப் புண் ஆறாது. அதை ஆற வைப்பதற்காக வளரும் செல்கள் தொடர்ந்து வளர்ந்து அவற்றின் வளர்ச்சி ஒருகட்டத்தில் கட்டுப்படாமல் போய்விடும். அதனால்தான் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிக அளவில் புற்றுநோய் வருகிறது'' என்ற விதுபாலாவிடம்,புற்றுநோய்கள் எவற்றால் எல்லாம் வருகின்றன? என்ற பெரிய கேள்வியைக் கேட்டோம்.

""புற்றுநோய் வருவதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. முதலில் நமது உணவுமுறை மிகவும் மாறிவிட்டது. கொழுப்புச் சத்துள்ள ஃபாஸ்ட் புட் உணவு வகைகள் அதிகரித்துவிட்டன. நார்ச்சத்துள்ள உணவு வகைகள் குறைந்துவிட்டன. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படுகிறது. மலக்குடலில் புண் ஏற்பட்டு நாளடைவில் புற்றுநோயாக மாறுகிறது. நமது இளந்தலைமுறையினர்  வெளிநாட்டுக் குளிர்பானங்களை  விரும்பி அருந்துகிறார்கள்.

இந்தக் குளிர்பானங்களில் அமிலம், அளவுக்கதிகமான சர்க்கரை, நீர் போன்றவை உள்ளன. குளிர்பானம் கெட்டுப் போகாமல் இருக்க வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. உதாரணமாக, மாம்பழச் சாறை  நான்கு நாட்கள் அப்படியே வைத்திருந்தீர்கள் என்றால் அதில் புழுக்கள் வந்துவிடும். ஆனால் மாம்பழச் சாறைப் பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள்.

அதில் புழுக்கள் வருவதில்லை. ஏனென்றால் அதில் புழு, பூச்சிகள் தோன்றாமல் இருக்க வேதிப் பொருட்களைக் கலக்கிறார்கள். அவை நச்சுத் தன்மையுடையவை.

மனித உடலில் எரித்த பின்பும் எஞ்சியிருப்பவை எலும்புகள்.

ஆனால் நமது நாட்டில் விற்கப்படும் வெளிநாட்டுக் குளிர்பானங்கள் சிலவற்றில் ஓர் எலும்புத் துண்டைப் போட்டுவிட்டு 12 மணி நேரம் கழித்துப் பார்த்தால் எலும்புத் துண்டு கரைந்து போயிருப்பதைக் காண முடியும். ஆனால் நாகரீகம் என்ற பெயரில் நாம் இப்படிப்பட்ட  நச்சுத்தன்மை உள்ள பொருட்களைத் தினமும் அருந்திக் கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் புற்றுநோய் வரக் காரணங்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை நாம் அறவே தவிர்க்க வேண்டும்.

சிலர் அப்பளம், மீன் போன்றவற்றைப் பொரித்த எண்ணெய்யை - சுட வைத்த எண்ணெய்யைத் - மீண்டும் மீண்டும்  பயன்படுத்துவார்கள். இதுவும் புற்றுநோய்  வரக் காரணம். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாகப் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.

வாயில் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தினால் வாய்ப் புற்றுநோய் வரும். சிகரெட், பீடி போன்றவற்றைப் புகைத்தால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும். பொடி போட்டால் மூக்கில் புற்றுநோய் வரும்.  புற்றுநோய் வருவதற்கான காரணங்களை மக்கள் தெரிந்து கொள்வதில்லை. அப்படியே தெரிந்து கொண்டாலும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முயற்சி எடுப்பதில்லை.'' என்கிறார் வருத்தத்துடன்.

பெண்களுக்கும் புற்றுநோய் வருகிறதே? என்று கேட்டோம்.

""ஆமாம். பெண்களுக்கும்  புற்றுநோய்கள் வருகின்றன. அவற்றில் ஒன்று மார்பகப் புற்றுநோய். இன்னொன்று கருப்பை புற்றுநோய். மார்பகப் புற்று நோய் வருவதற்கு முக்கிய காரணம் பெண்கள் மிகக் குறைந்த வயதிலேயே வயதுக்கு வந்துவிடுவது. அடுத்து வரதட்சணை, வேலையின்மை, வறுமை, படிப்பு போன்ற பல்வேறு காரணங்களினால் அவர்களுக்குத் திருமண வயது தள்ளிப் போய்விடுவது. அதனால் முப்பது வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வது.

அப்படியே குழந்தை பெற்றுக் கொண்டாலும் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வது. குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டாதது. உடற்பயிற்சியின்மை. கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் உண்பது. நார்ச்சத்து உள்ள உணவுகளைக் குறைந்த அளவில் உண்ணுவது போன்ற பல காரணங்களால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது.

கருப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கு பெண்கள் மாதவிடாய் காலங்களில் தூய்மையான துணிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது ஒரு காரணமாக இருக்கிறது. பிறப்பு உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாதது இன்னொரு காரணம். புற்றுநோய் உருவாகக் காரணமான ஏன்ம்ஹய் ல்ஹல்ண்ப்ப்ர்ய் ஸ்ண்ழ்ர்ன்ள் பாதிப்புக்குப் பெண்கள் உள்ளாவது போன்றவை கருப்பைப் புற்றுநோய்க்குக் காரணங்களாக உள்ளன'' என்கிறார் விதுபாலா.

தொடர்ந்து, ""புற்றுநோய் வராமல் நம்மைக் காத்துக் கொள்ள முடியும். அதற்குச் செய்ய வேண்டியது, புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமாக உள்ள பழக்கங்களை நிறுத்திவிட வேண்டியதுதான். புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்தினாலே வாய்ப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றை அறவே தடுத்து நிறுத்திவிடலாம். அதற்காகத்தான் அரசும், உலக சுகாதாரநிறுவனமும் பலவிதங்களில் முயன்று வருகிறார்கள்.

 மேலும் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்தில் எளிதில் குணப்படுத்திவிட முடியும். பலருக்குப் புற்றுநோயைக் குணப்படுத்த முடியாது என்ற எண்ணம் உள்ளது. புற்றுநோயை முற்றிய நிலையில்தான் குணப்படுத்துவது சிரமம். அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்  மருத்துவமனையில் புற்றுநோய் வந்தவர்களைக் குணப்படுத்துகிறோம்.

நோய் முற்றி வேறு வழியில்லாதவர்களுக்கு அவர்கள் இருக்கும் காலத்தில் மனநிம்மதியுடன் வாழ மனநல சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்குகிறோம்'' என்கிறார் அவர். பொது இடங்களில் புகை பிடித்தால் தண்டனை என்று சட்டம் கொண்டு வருவது, சிகரெட் பாக்கெட்டுகளில் புகைப் பிடிப்பது உடல் நலனுக்குக் கேடு என்று விளம்பரம் செய்வது என்று புகை பிடிப்பதைத் தவிர்க்கும்படி அரசு கேட்டுக் கொள்கிறது. இதற்குப் பதிலாக புகையிலைப் பொருட்களின் உற்பத்தியையும் விற்பனையும் தடை செய்துவிடலாமே? என்று கேட்டோம்.

""நீங்கள் சொல்வது சரிதான். நமது நாட்டில் சரியான சுகாதாரக் கொள்கைகள் இல்லை. புகைபிடிப்பதால் புற்றுநோய் மட்டும் வருவதில்லை. பக்கவாதமும், மாரடைப்பும் கூட ஏற்படுகின்றன. 54 வகையான மனிதனைப் பாதிக்கும் கொடிய நோய்கள் வருவதற்குப் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதே காரணமாக இருக்கிறது.

எனவே புகையிலைப் பொருட்களின் உற்பத்தியையும் விற்பனையையும் தடை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் பெரிய அளவில் புற்றுநோய் உட்பட பல நோய்களைத் தவிர்த்துவிடலாம். புகையிலைப் பொருட்களைத் தடை செய்துவிட்டால் அதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுமே என்று கேட்கலாம். 2004}ஆம் ஆண்டில் செய்த ஓர் ஆய்வின்படி,புகையிலைப் பொருட்களினால் அரசுக்குக் கிடைத்த வருமானம் ரூ.4 ஆயிரம் கோடி. ஆனால் புகையிலைப் பொருட்களினால் ஏற்பட்ட நோய்களுக்காக செலவு செய்ததோ ரூ.30 ஆயிரத்து 800 கோடி. எனவே புகையிலைப் பொருட்களின் விற்பனையால் அரசுக்கு வருமானம் வருகிறது என்று சொல்வதில் உண்மையில்லை.

நான் ஒரு விளம்பரத்தைக் கவனிக்க நேர்ந்தது. அதில் சொல்கிறார்கள்: "உங்களால் சிகரெட்டை விட முடியவில்லையா? பரவாயில்லை. உங்களால் உடற் பயிற்சி செய்ய முடியவில்லையா? பரவாயில்லை. உணவுக்கட்டுப்பாட்டை உங்களால் கடைப்பிடிக்க முடியவில்லையா? பரவாயில்லை.

எங்களுடைய மெடிக்கல் இன்ஷூரன்ஸில் சேருங்கள்' என்கிறார்கள். மக்கள் நோயாளிகளாக மடிந்தாலும் பரவாயில்லை, எங்கள் மெடிக்கல் இன்ஷூரன்ஸில் சேருங்கள் என்று ஓர் இன்ஷூரன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன நியாயம்? அப்படிப்பட்ட நிறுவனங்களை அரசும் அங்கீகரிப்பது கொடுமையல்லவா? எல்லாவற்றைப் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதான் ஒரே வழி'' என்கிறார் சூடாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.