ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

முகங்கள்: ஆன்மிகம் முதல் ஆட்ட பாட்டம் வரை!

தமிழ்நாட்டில் எல்லா மாதங்களிலும் ஏதோ ஒரு கோயிலில் விழாக்கள் நடைபெறுகின்றன.  இந்தக் கோயில் விழாக்களில் கலந்து கொள்ள நினைத்துக் கலந்து கொள்ள முடியாமற் போகும் பக்தர்களின் மனதில் மகிழ்ச்சியையும், பக்தி உண

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

ந. ஜீவா

தமிழ்நாட்டில் எல்லா மாதங்களிலும் ஏதோ ஒரு கோயிலில் விழாக்கள் நடைபெறுகின்றன.  இந்தக் கோயில் விழாக்களில் கலந்து கொள்ள நினைத்துக் கலந்து கொள்ள முடியாமற் போகும் பக்தர்களின் மனதில் மகிழ்ச்சியையும், பக்தி உணர்வையும் பெருக்குவது தொலைக்காட்சியில் காட்டப்படும் கோயில் விழாக்களே.

தமிழகத்தின் பல்வேறு கோயில்களின் திருவிழாக்களையும் படம் பிடித்துத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பத் தருபவர் அலமு வெங்கடாசலம். அதுமட்டுமல்ல, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் படம் பிடித்துத் தருவது இவருடைய கேமராக்களே.

""தமிழ்நாட்டில் உள்ள பல கோயில் விசேஷங்களை நாங்கள் படம் பிடித்திருக்கிறோம். பிள்ளையார்பட்டி கோயில் கும்பாபிஷேகம், வைரவன் பட்டி வைரவர் கோயில் விழா ஆகியவற்றை படம் பிடித்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, நகரத்தார்களின் ஒன்பது நகர கோயில் நிகழ்ச்சிகளையும் படம் பிடித்திருக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டுக் கோயில் விசேஷங்களையும் படம் பிடித்திருக்கிறோம். உதாரணமாக பினாங்கில் உள்ள தண்ணீர் மலை கோயில் விழாவை அங்கே சென்று படமாக்கினோம். நாங்கள் எங்கள் குழுவினருடன் சென்று படமாக்கியதை பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் எங்களிடம் வாங்கி ஒளிபரப்புகிறார்கள். எங்களுக்கும் ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி கிடைக்கிறது'' என்கிறார் வெங்கடாசலம். வெங்கடாசலம் இந்தத் துறைக்கு வந்த அனுபவம் வித்தியாசமானது. ஆரம்பத்தில் அவர் ஓர் அக்கவுண்டன்ட்தான்.

""எனது சொந்த ஊர் காரைக்குடி. 32 வருடங்களுக்கு முன்பு நான் சென்னைக்கு வந்தபோது சேர்ந்த வேலை பிரகாஷ் ஸ்டுடியோவில் அக்கவுண்டன்ட் வேலை. அங்கு வேலை செய்த போது ஒரு மெடிக்கல் ஸ்டோரையும் ஆரம்பித்தேன். ஆனால் அதைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. அப்புறம் வீடியோ கம்பெனிகளில் மீண்டும் அக்கவுண்டன்ட்டாகவே வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது அந்தக் கம்பெனிகள் தயாரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு தயாரிப்பு நிர்வாகப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். ஒரு கட்டத்தில் அக்கவுண்டன்ட் வேலையை விட தயாரிப்பு நிர்வாகப் பொறுப்பே அதிகமாகிப் போனது.  நான் மெல்ல மெல்ல வீடியோ கம்பெனிகளின் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டேன். அப்புறம் நானே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது. 1990- இல் கேமராக்களைப் பிறரிடம் லீஸýக்கு வாங்கி அலமுஸ் வீடியோஸ் என்ற பெயரில் வீடியோ தொழிலை ஆரம்பித்தேன். எனக்கு அந்த நேரத்தில் உதவி கைதூக்கிவிட்டவர்கள் கோவை தம்பி, ஷெரீஃப், ரபி பெர்னார்ட், அமர்ஜித், பிரகாஷ் ஆகியோரைக் குறிப்பிடலாம். அப்புறம் நானே நிறையச் சொந்தமாகக் கேமராக்களை வாங்கி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பவர்களுக்கு வாடகைக்கு விட ஆரம்பித்தேன். நானும் நிறையத் தொலைக்காட்சிகளுக்குப் பல்வேறு நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் கொடுத்தேன்.'' என்கிறார் பெருமையாக.

ஆன்மிக நிகழ்ச்சிகள் தவிர வேறு என்ன நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துத் தந்திருக்கிறீர்கள்? என்றோம் ஆர்வமாக.

""1995 இல் நடந்த ஆசியன் விளையாட்டுப் போட்டிகளை நாங்கள்தான் படம் பிடித்தோம். எல்லாக் கட்சி மாநாடுகளையும் படம் பிடித்திருக்கிறோம். தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்ச்சிகளை 2001 முதல் 2005 வரை நாங்கள்தான் படம் பிடித்தது, எல்லாத் தொலைக்காட்சி சேனல்களுக்கும் கொடுத்தோம்.

நட்சத்திர இரவு என்று தமிழ்நாட்டில் பல நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நாங்கள்தான் படம் பிடித்திருக்கிறோம். அதில் சொல்ல வேண்டியது ஒன்றுண்டு. முதன் முதலில் இப்படிப்பட்ட பிரும்மாண்டமான நிகழ்ச்சிகளை 16 கேமிராக்களை வைத்து எடுத்தது நாங்கள்தான்.

இதுதவிர, தொலைக்காட்சித் தொடர்களையும் எடுத்துக் கொடுத்திருக்கிறோம். குறிப்பாக "தேன்மொழி', "தாலி', "காயத்ரி மந்திரம்' போன்ற தொலைக்காட்சித் தொடர்களைப் படம் பிடித்துக் கொடுத்தது நாங்கள்தான்.  மின்பிம்பங்கள், ஹன்ஷா விஷன், லேகா புரடக்ஷன் போன்ற நிறுவனங்களில் எங்களுடைய கேமராக்கள் பயன்பட்டிருக்கின்றன என்பது எங்களுக்குப் பெருமை'' என்ற வெங்கடாசலத்திடம், புதிது புதிதாகத் தொழில்நுட்பங்கள் மாறி மாறி வரும்போது நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பழைய கேமராக்கள் காலாவதியாகிவிடாதா? என்றோம் சீரியஸôக.

""ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பம் மாறிக் கொண்டே வருகிறது. நான் தொழில் ஆரம்பிக்கும்போது, லோ பேண்ட் தொழில்நுட்பம் இருந்தது. அதன்பின்பு, ஹை பேண்ட், பீட்டா, டிஜி பீட்டா, டிவி, எச்டி என பல தொழில்நுட்பங்கள் மாறி மாறி வந்திருக்கின்றன. அது எப்படியும் தெரிந்துவிடும். இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்கிறோம். நிறைய வெளிநாட்டு இதழ்களைப் படித்தும் தெரிந்து கொள்கிறோம். எங்களிடம் கேமராக்களை படம் எடுப்பதற்காக வாங்கிச் செல்பவர்கள் சொல்வதிலிருந்தும் தெரிந்து கொள்கிறோம். இப்போது எங்களிடம் 60 கேமராக்கள் இருக்கின்றன.'' என்கிறார்.

தமிழில் வெளிவந்த "சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி' என்ற திரைப்படத்திற்கு இவர் தந்த கேமராதான் பயன்பட்டிருக்கிறது. அந்தக் கேமராவில் வைத்துப் படம் பிடித்தது லிம்கா வேர்ல்டு ரிகார்டில் பதிவாகியிருக்கிறது. அந்தக் கேமராவில் அப்படியென்ன புதிது? என்றோம்.

""சினிமா என்றால் வீடியோ கேமராவில்தானே எடுப்பார்கள். ஆனால் "கேனான் 5 டி மார்க் 2' என்ற அந்தக் கேமரா, ஒரு எச்டிஎஸ்எல்ஆர் ஸ்டில் கேமரா. ஸ்டில் கேமராவில் மோஷன் படங்களை எப்படி எடுப்பது என்ற கேள்வி எழும். அதற்கான வசதிகள் அந்தக் கேமராவில் உள்ளன. அந்தக் கேமராவின் விலை அதிகம். உலக அளவில் அந்தக் கேமராவை வைத்து எடுக்கப்பட்ட முதல் முழுத் திரைப்படம் என்று அந்தப் படத்தைச் சொல்லலாம்'' என்கிறார் சிரிப்புடன்.

தொலைக்காட்சியில் ஆன்மிக நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்து வந்த வெங்கடாசலம், வேறு சில நிகழ்ச்சிகளையும் தயாரித்து அளித்திருக்கிறார். பொங்கலின்போது ஜெயா தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதைப் பற்றி அவரிடம் கேட்டோம்.

""சினிமாத்துறையில் பிரபலமான 12 கதாநாயகன், கதாநாயகிகள் கலந்து கொண்டு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று அமர்க்களப்படுத்தும் பூவா? தலையா? என்ற நிகழ்ச்சியைத் தயாரித்தளித்திருக்கிறோம். அது ஒளிபரப்பானதும் எல்லாராலும் பேசப்படும்'' என்கிறார் உறுதியாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.