பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிறுகதை: லோயர் கிளாஸ்

கம்பெனியிலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தான் ரகு. உடுப்பைக் கழட்டிக் கொடி கயிற்றில் கடாசிவிட்டு லுங்கியைக் கட்டிக் கொண்டு கிணற்றடிக்குப் போனான். பாலிஷ் மிஷினில் நாள் முழுவதும் நின்று வேலை பார்த்தத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:10 am

கண்ணன்

கம்பெனியிலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தான் ரகு. உடுப்பைக் கழட்டிக் கொடி கயிற்றில் கடாசிவிட்டு லுங்கியைக் கட்டிக் கொண்டு கிணற்றடிக்குப் போனான். பாலிஷ் மிஷினில் நாள் முழுவதும் நின்று வேலை பார்த்ததால் எமரித்தூள் உடல் முழுக்கப் பரவி அரித்தது. அவன் உடம்பில் இரும்பின் வாடை வீசியது. எவர் சில்வர் பாத்திரங்களைப் பளபளப்பாக பாலிஷ் செய்யும் வேலை அவனுடையது. ஐந்து குதிரைத் திறன் கொண்ட மோட்டாரின் முன்நின்று வேலை பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல. கொஞ்சம் கவனம் பிசகினால் போதும் உடம்பில் எங்கு அடிபடும் என்று சொல்ல முடியாது. நிறைய அடிப்பட்டிருக்கிறான். அதனால் ரத்தம் பழகிப் போச்சு. எப்படியாவது வாழ்க்கையை ஓட்டணும். சிரமத்தைப் பார்த்தா வேலைக்கு உதவாது. ஏதோ இந்த மட்டுமாவது வண்டி ஓடுதே. ஆனால் வாரம் முழுக்க வேலை இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. கரண்ட் கட், மெட்டிரியல் இல்ல, அது இதுன்னு நிறைய தொல்லைகள் வந்து பிழைப்பைக் கெடுக்கும். இப்படித் தூசியிலும் துரும்பிலும் மாரடித்தாலும் பெரிசா ஒண்ணும் கிடைச்சுடாது. வாரம் ஆறு நூறு பார்க்கலாம். அவ்வளவுதான். இருமல் சளின்னு உடம்புக்கு வந்துட்டா உள்ளதும் போயிடும். தண்டல்காரன் கிட்டக் கையேந்தணும். மனைவி சுந்தரி, வீட்டின் அருகாமையில் இருக்கும் எக்ஸ்போர்ட் கார்மென்டில் செக்கராக வேலை பார்க்கிறாள். அவள் கொண்டு வருவது வீட்டு வாடகைக்கும் பிள்ளைகளின் பள்ளிக் கட்டணத்திற்கும் சரியா போயிடும். ஆக மொத்தத்தில் கையில் எதுவும் மிஞ்சாது. அவசர ஆபத்தென்றால் அக்கம் பக்கம் கையேந்தணும். பிளாஸ்டிக் பாக்கெட்டில் நீர் நிரப்பிக் கொண்டு பாத்ரூமுக்கு போனான் ரகு. தலையில் தண்ணீர் கொட்டிக் கொண்டு சோப்பு டப்பாவைத் திறந்தான். அது காலியாக இருந்தது. உள்ளிருந்தவாறு குரல் கொடுத்தான்.

""சோப்பு வாங்கி வைக்கக் கூடாதா?''

அடுப்படி அனலில் நின்று கொண்டிருந்தவளுக்கு அது எரிச்சலை ஏற்படுத்தியது.

""இன்னா சொல்றீங்க.. மாசத்துக்கு எத்தனை சோப்பு வாங்கறது. ஒரு சோப்பை ஒரு வாரத்துக்காவது வச்சுக்கணும். இப்படின்னா எப்படிக் குடித்தனம் பண்றது... ம்... கடையில அக்கவுண்ட் ஏறிக்கினே போவுது. வெறுமனே கழுவிக்கினு வாங்க''

""அடிப்பாவி... உடம்பு முழுக்க இரும்புத்தூள்... நமநமன்னு எரியுது... துணிக்குப் போடற சோப்பாவது கொண்டா''

தலையைத் துவட்டியவாறு சுந்தரியைப் பார்த்தான். அவள் உம்மென்றிருந்தாள். சண்டை வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிந்தன. வெளி வாசலில் சுப்பு நின்றிருந்தான். பத்து வயதிற்கான வளர்ச்சியின்றி மெலிந்திருந்தான்.

""ஏன்டா வெளியே நிக்குற... ஏன் அவன் ஒரு மாதிரியா இருக்கான்''

சுந்தரியின் முகம் கோபத்தில் துடித்தது.

"" அவங்கிட்டே கேளுங்க''

""நீதான் சொல்லு... இன்னா விஷயம்?''

"" அவனோட ராங்க் கார்டை வாங்கிப் பாருங்க''

""இன்னா''

""நாலு பாடத்தில பெயிலாகி இருக்கான். கால் கடுக்க நின்னு கஷ்டப்பட்டு பீஸ் கட்டினா... பொறுப்பில்லாம பெயிலாகி நிக்கிறான். ஆட்டம் அதிகமாயிடுச்சி''

சுந்தரி மூக்கைச் சிந்தினாள். ரகு வாசலுக்கு வந்து சுப்புவின் முதுகில் ஒன்று வைத்தான். சுந்தரி ஓடி வந்து தடுத்தாள்.

""விடுங்க.. எல்லாம் உங்களாலதான். ஆரம்பத்திலேயே கண்டிச்சிருக்கணும். செல்லம் குடுத்துக் கெடுத்திட்டிங்க''

""இவன எங்கேயாவது டியூசனுக்கு விடு''

""இன்னாது... டியூசனுக்கு விடவா. டியூசன்னா சும்மா இல்ல. பணம். மாசாமாசம் பணம் கட்டணும் முடியுமா? ''

""சேர்த்து விடு தர்றேன்''

""தந்து கிழிச்சிங்க. வாயை மூடிக்கினு போங்க''

இந்த ரூட்டில் போனால் அது எங்கு போய் முடியும் என்பது ரகுவுக்குத் தெரியும். பேச்சை மாற்றினான்.

""அபி.. எங்க''

""எதிர்த்த வீட்ல விளையாடிட்ருக்கா''

எங்கள் ஒண்டுக் குடித்தனத்திற்கு முன் நிற்கும் பெரிய வீட்டை யாரோ வாங்கி குடிவந்திருக்கிறார்கள். சுந்தரியோடு நெருக்கமாகிவிட்டார்கள். பசியெடுத்தது.

""சோறு போட்றீயா ''

சுந்தரி தட்டு நிறைய சோறு போட்டு வைத்தாள். வத்த குழம்பும், ரசமும் இரு கிண்ணங்களில் கொண்டு வந்தாள். குழம்பும், ரசமும் மணம் வீசியது. இது சுந்தரி சமைத்தது அல்ல என்பது பார்க்கும்போதே தெரிந்தது. குழம்பைச் சோற்றில் விட்டுப் பிசைந்து ஒரு கவளத்தை உள்ளே தள்ளினான்.

""ஆஹா... கொழம்புன்னா இதான் கொழம்பு.. நீயும் ஒண்ணு வைக்கிறியே... கொழம்புன்னு உப்பு ஒரப்பு இல்லாம''

சுந்தரி எது சொன்னாலும் பொறுத்துக் கொள்வாள். அவள் சமையலைக் குறை சொன்னாள் தாங்கமாட்டாள். கோபத்தில் பொரிந்தாள்.

""அடுத்தவங்க வீட்டுச் சமையல்ன்னா நல்லாத்தான் இருக்கும். சொல்லுவிங்க. ஏன் சொல்லமாட்டீங்க. நாளெல்லாம் கம்பெனியில மாரடிச்சிட்டு இங்கேயும் வந்து உங்களுக்குத் துணி துவைச்சு, பாத்திரம் தேச்சு... சோறாக்கிப் போடுறேன் இல்ல. நக்கல் நையாண்டியெல்லாம் பண்ணத்தான் தோணும்''

அட, இது என்னடா வம்பாப் போச்சு என்று நினைத்தான். ஜாலியா பேசினா.. ஒரேயடியா சீறுகிறாள். அமைதியாகச் சாப்பிட்டு முடித்துக் கை கழுவினான். சாமி படத்தின் முன் கிடந்த கல்யாணப் பத்திரிகையை எடுத்துப் பார்த்தான். ஆச்சரியமாக இருந்தது.

""அட, துளசிக்குக் கல்யாணமா?''

""ம்.... என்ஜினியர் மாப்பிள்ளை. சிங்கப்பூரில் வேல பாக்குறாரு. கல்யாணமானதும் துளசியும் அங்கே போயிடுவாள்''

இவர்கள் இந்த இடத்திற்குக் குடிவரும் போது துளசி ஸ்கூல் போய்க் கொண்டிருந்தாள். சிவப்பு நிறம், தங்க விக்கிரகம் போல் ஜொலிப்பாள்.

""மாமி கொஞ்சம் ஆச்சாரம் பாக்குறாரு. கல்யாணமானதும் துளசியும் அங்கே போயிடுவாள்.''

"" சுந்தரி கம்பெனியில ஒரு நூறு ரூபா அட்வான்ஸ் வாங்கியாந்திடுறேன். நீ கொழந்தைகளோட கல்யாணத்துக்குப் போயிட்டு வா... ம்''

அவள் மெüனமாக இருந்தாள்.

""இன்னா பேச்சக் காணோம்.''

""காதுல டிசைன் டிசைனா கம்மல், கழுத்துல ரெட்டை வடம் செயின், நெக்லஸ், கும்பகோணம் பட்டுன்னு டாலடிக்கிறேன் பாரு. அந்த அழகை அங்கே போய் காட்டச் சொல்றீங்களா.. அது பெரிய இடம். எல்லாரும் பட்டும் நகையுமான ஜொலிப்பாளுங்க. வாயல் புடவையைச் சுத்திக்கிட்டு அவங்க மத்தியில போய் நிக்கணுமா... சத்திரம் கூட்றவ மாதிரி இருக்கும். அதுவும் இந்தத் தெரு பொம்பிளைங்க மோசமானவளுங்க. அந்தஸ்துப் பார்த்துப் பேசுவாளுங்க. கொழந்தைங்கள கூட்டிக்கிட்டு நீங்க போயிட்டு வாங்க''

""யாருடி இவ. நான் மட்டும் கோட்டு வச்சிக்கினு இருக்கேனா.. நைந்து போன நாலைந்து பேண்ட்டும் சட்டையும் வச்சிருக்கேன். அவ்வளவுதான். ஒண்ணு சொல்லவா. எல்லார் வீட்டு விசேஷங்களின் ஆல்பத்தையும் பார். எல்லாத்திலும் ஒரே டிரெஸ்லதான் இருப்பேன். அந்த நீலக்கலர் பேண்ட்டும் சந்தனக் கலர் சட்டையும் ரொம்பவும் ஃபேமஸ். இஸ்திரி போடுற ராணி கூட வேறு டிரஸ்úஸ இல்லையான்னு கிண்டல் பண்ணுது''

நான் சொல்லி முடித்தவுடன் சட்டென்று சுந்தரி என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன.

""என்ன செய்யறது... தரித்திரம் புடிச்சவங்க நாம''

""சேச்சே... அப்படியெல்லாம் சொல்லாதே. ஏழையா இருப்பது ஒண்ணும் கேவலமில்ல. கோடிக்கணக்கா பணம் வச்சிக்கிட்டிருக்கிறவனெல்லாம் சந்தோஷமா சிரிச்சிக்கிட்டு இருக்கான்னு நெனக்கிறீயா... அதான் இல்ல. என்னைப் பொறுத்தவரைப் பெருசா நோய் வந்திடக் கூடாது. அவ்வளவுதான். மத்தபடி நம்ம வாழ்க்கையில் சந்தோசங்கள் இருக்கத்தான் செய்யுது''

""போதும்... விட்டா லெக்சர் அடிக்க ஆரம்பிச்சுடுவிங்க. கொழந்தைகள கூட்டிக்கிட்டு போயிட்டு வாங்க. ஏன் வர்லன்னு மாமி கேட்டா நான் ஏதாவது காரணத்தைச் சொல்லிக்கிறேன்.''

ரகுவிற்கு அவள் பிரச்னை புரிந்தது. நிறைய நகை நட்டு மாட்டிக் கொள்வது. ஆடம்பரமா டிரெஸ் செய்வதுன்னு நிறையப் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதைப் பார்க்கும்போது இல்லாதவர்களுக்கு ஓர் ஏக்கம் ஏற்படத்தானே செய்யும். இந்த விஷயத்தில் ஆண்கள் பரவாயில்லை. பேண்ட், சட்டை தவிர கூடுதலா எதையும் அணிவதில்லை. அதனால் கல்யாணத்திற்கு இவனே போவதென்று முடிவானது.

""சுந்தரி.... வழக்கம்போல அந்த நீல பேண்ட், சந்தனக் கலர் சட்டையை தோய்ச்சு ராணிகிட்ட இஸ்திரி போட குடுத்திடு... ம் ''

இருவருக்கும் சிரிப்பு வந்தது.

துளசிக்கு இன்று கல்யாணம். சுந்தரி ஐந்து மணிக்கே எழுந்துவிட்டாள். வெந்நீர் போட்டு பிள்ளைகளைக் குளிக்க வைத்தாள். ரகு கம்பெனிக்கு லீவு போட்டிருந்தான். குளிக்க அவன் கிளம்புகையில் சுந்தரி சொன்னாள்.

""தோ பாருங்க. கொழந்தைங்க கிட்ட அவசரம் காட்டாதிங்க. பொறுமையா சாப்பிட வைங்க. முகூர்த்தம் முடிஞ்சதும் பறந்திடாதிங்க. மதியச் சாப்பாடும் உண்டாம். மாமி சொன்னாங்க. அவங்க சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும். இருந்து கூச்சப்படாம சாப்பிட்டு வாங்க. வீட்ல நான் சோறாக்கல. கடையில நாலு இட்லி வாங்கி சமாளிச்சுக்கிறேன். திரும்பவும் சொல்றேன். மத்தியானச் சாப்பாடும் சாப்பிட்டு வாங்க. அப்புறம் இன்னொன்னு... மொய் எழுதறது தப்புன்னு சொல்லிட்டு எழுதாம வந்திடாதிங்க. டே... சுப்பு அப்பா மொய் எழுதுறாரான்னு பாரு... ம்... நீயும் சாப்பிடு. பாப்பாவையும் சாப்பிட வை   ''

""சரி... சரி... போதும் விடு. பசங்கள ரெடி பண்ணு குளிச்சிட்டு வந்திடுறேன்'' ரகு பாத்ரூமுக்குள் நுழைந்தான். போன வேகத்தில் காக்கா குளியல் போட்டுவிட்டு தலை துவட்டியவாறு வெளியே வந்தான். எல்லா விசேஷங்களுக்கும் அவன் உடுத்திச் செல்லும் நீலப் பேண்ட், சந்தனக் கலர் சட்டை ஸ்டூலின் மேல் இஸ்திரி போட்டு வைக்கப்பட்டிருந்தது. போட்டுக் கொள்ள எடுத்துப் பிரித்தவன் அதிர்ந்தான். பிள்ளைகளும், அவர்களுக்குப் பவுடர் பூசிக் கொண்டிருந்த சுந்தரியும் ஏதோவென்று பயந்து விட்டனர்.

""இன்னாங்க... ஆச்சு... ''

""யாரு கிட்ட இஸ்திரி போட்ட''

""ஏன்... ராணிக்கிட்டதான்''

அவள் கலவரமடைந்தாள். ரகு பேண்ட்டைப் பிரித்துக் காட்டினான். இஸ்திரிப் பெட்டியின் அதிகப்படியான சூட்டின் காரணமாக துணி ஆங்காங்கே பொசுங்கி பொத்தல்கள் ஏற்பட்டிருந்தது. பெட்டி போட்டவள் கமுக்கமா மடித்துக் கொடுத்திருக்கிறாள். இருவருக்கும் பேச்சு வரவில்லை. இப்போ என்ன செய்வது? எப்படி கல்யாணத்துக்குப் போவது? பிள்ளைகள் ஏக்கத்தோடு கலங்கி நிற்கும் இவர்களைப் பார்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.