சேவை: தேவை: ஆறுதலாக ஒரு வார்த்தை!

சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதி. 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நோயாளிகளிடம் ஆதரவாகப் பேசுகிறார். நோயாளிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
சேவை: தேவை: ஆறுதலாக ஒரு வார்த்தை!
Published on
Updated on
3 min read

செ ன்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதி. 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நோயாளிகளிடம் ஆதரவாகப் பேசுகிறார். நோயாளிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று நோயாளிகளின் உறவினர்களுக்கு ஆலோசனை சொல்கிறார். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறார்.

 அவர் ஹேனா ஜேக்சின். ஏற்கெனவே அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் மனமும், உடலும் எந்த அளவுக்குத் துன்பப்படும் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர்.

 ""2001 ஆம் ஆண்டு ஒருநாள் திடீரென எனது மூக்கிலிருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது. எனக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அதற்கு முன்பாகவே எனக்கு சரியாகப் பேச முடியவில்லை. நான் ஒரு பாடகி. நான் சிறுவயதில் இருந்தே கிறிஸ்தவப் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பேன். எனது குரலில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. பாட முடியவில்லை. ரத்தம் வந்தவுடன் மருத்துவமனைக்குச் சென்றேன்.

 மருத்துவர்கள் பலவிதமான பரிசோதனைகள் எடுத்துப் பார்த்துவிட்டு மூச்சுக் குழாயில் எனக்குப் புற்றுநோய் வந்திருப்பதாகச் சொன்னார்கள். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது இன்னொரு பிரச்னையும் வந்தது. என் வயிற்றில் கட்டி. மூச்சுக் குழலில் உள்ள புற்றுநோயால் கட்டி உருவாகி இருக்கலாம் என்று நினைத்தார்கள். பின்பு சோதித்துப் பார்த்ததில் அது சாதாரணக் கட்டிதான் என்று கண்டுபிடித்தார்கள். புற்றுநோய்க்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடர்ந்து செய்தார்கள். அதேநேரத்தில் முதலில் கட்டியை நீக்க வேண்டும் என்றார்கள். கட்டியை அறுவைச் சிகிச்சை செய்து எடுத்தார்கள். மூன்றரை கிலோ இருந்தது. டாக்டர்கள் ஆச்சரியப்பட்டார்கள். புற்றுநோய், கட்டி இரண்டையும் நான் ஒரே நேரத்தில் எப்படித் தாங்கிக் கொண்டேன் என்று கேட்டார்கள். அதற்குப் பின்பு புற்றுநோய்க்கான தீவிர சிகிச்சை செய்தார்கள்.

 அதனால் என் முடியெல்லாம் கொட்டிவிட்டது. நாக்கில் சுவையரும்புகள் இல்லாமற் போய்விட்டன. என் முகத்தைப் பார்க்க எனக்கே அருவருப்பாக இருந்தது. இந்த உருவத்தோடு உயிரோடு இருக்க வேண்டுமா? என்று நினைத்தேன். சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை. வாயை மூட முடியவில்லை. ஒன்பது மாதங்கள் வரை திரவ உணவுதான் உட்கொள்ள முடிந்தது. பிறகுதான் சரியானது. அந்தத் துயரங்களை விட எனக்குப் புற்றுநோய் வந்தவுடன் உறவினர்கள் என்னைப் புறக்கணித்ததுதான் என்னால் தாங்க முடியாமற் போனது'' என்கிறார் குரல் தழுதழுக்க.

 ""கடவுள் எனக்குத் தண்டனை கொடுத்துவிட்டதாக உறவினர்கள் சொன்னார்கள். நன்றாகப் பாடிய நான் பாட முடியாமற் போனதில் அவர்களுக்கு உள்ளூர மகிழ்ச்சி. இன்னும் சிலர் யாரோ எனக்குச் சூன்யம் வைத்துவிட்டதாகச் சொன்னார்கள். நெருங்கியிருந்த உறவுக்காரர்கள் என்னைப் பார்த்து அருவருப்புடன் விலகிச் சென்றார்கள். இன்னும் சிலர் மருத்துவச் செலவுக்குக் கடன் கேட்டுவிடுவோமோ என்று பயந்தார்கள். ஆனால் அந்த சமயம் எனது கணவர் ஜேக்சின் சாலமன் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். நான் சாப்பிடக் கூட முடியாமல் தவித்தபோது, அவரும் சுமார் 10 மாதங்கள் காலை உணவு சாப்பிடவில்லை. எனக்காகப் பிரார்த்தனை செய்தார். நோயால் பாதிக்கப்பட்டு நான் மனதளவில் மிகவும் நொந்து போயிருந்த அந்தத் தருணத்தில், அவருடைய அன்பும் ஆதரவும்தான் என்னை மீள வைத்தது.

 எனக்குக் குணமான பின்பு, என்னைப் போல் கஷ்டப்படும் புற்றுநோய் வந்தவர்களுக்கு அன்பாக ஆதரவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் மருத்துவமனைக்குச் சென்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைச் சந்தித்து அவர்களிடம் அன்பாகப் பேசுகிறேன்'' என்றவரிடம், மருத்துவமனையில் நோயாளிகளைச் சந்தித்துப் பேசும்போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லுங்கள் என்றோம்.

 ""ஒருமுறை மருத்துவமனைக்குச் சென்றால் அறுபதுக்கும் அதிகமான நோயாளிகளைச் சந்தித்துப் பேசுவேன். புற்றுநோய் வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் அந்தச் சிகிச்சையின் போது ஏற்படும் கதிர்வீச்சால் விகாரமான தோற்றத்தைப் பெற்றுவிடுவார்கள். அதனால் பிறர் அவர்களைவிட்டு விலகிச் செல்வார்கள். நான் புற்றுநோய் வந்த நோயாளிகளைத் தொட்டுப் பேசுவேன். இதுவே அவர்களுக்குப் பலமடங்கு ஆதரவாக இருக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி 9 மாதங்களே ஆகியிருந்தன. அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுச் சென்ற அவளுடைய கணவன் திரும்பி வரவேயில்லை. அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? அப்படிப்பட்ட நேரங்களில் அன்பான பேச்சே அவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலைத் தரும்'' என்கிறார் நெகிழ்வுடன். தொடர்ந்து, ""நோயாளிகளைப் பார்த்துப் பேசச் செல்லும்போது பல துயரக் கதைகளைக் கேட்க நேரிடும். வியாசர்பாடி பகுதியில் ஓர் ஆட்டோ டிரைவர். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய சிகிச்சைக்காக ஆட்டோவை விற்றுவிட்டார்கள். அவருடைய மனைவி எந்த வேலைக்கும் போகவில்லை. ஆட்டோ டிரைவர் இறந்துவிடுவார் என்பது உறுதியாகிவிட்டது. அவரை மரணத்துக்கு தயார் பண்ண வேண்டியிருந்தது. இப்படி மனைவி, மக்களை அனாதைகளாக விட்டுவிட்டுப் போகிறோமே என்று அவர் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார். நான் அவருக்கு மிகவும் ஆறுதலாகப் பேசி, அவர் மனதில் இருந்த துயரங்கள் நீங்க முயற்சி செய்தேன். இறுதியில் அவர் இறந்துவிட்டார். இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு அந்தப் பெண் தெருவில் நிற்க வேண்டிய சூழ்நிலை. அதில் ஒரு பையனுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியவில்லை. நான் சில நண்பர்களின் உதவியுடன் அந்தப் பையனின் படிப்புக்கான உதவிகளைச் செய்து வருகிறேன். புற்றுநோய்க்கு மருத்துவம் பார்க்க வசதியில்லாதவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறேன்'' என்கிறார் ஹேனா ஜேக்சின்.

 அதுமட்டுமல்ல, புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்று பிறருக்கு விளக்கிச் சொல்கிறார். சென்னையில் ஆட்டோ டிரைவர்கள் நடத்திய விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு புற்றுநோய் வராமல் தடுக்க ஆலோசனை கூறி வருகிறார். எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இவையெல்லாம் உங்களுக்கு எப்படிச் சாத்தியம்? என்று கேட்டோம்.

 ""நான் மிகவும் பின்தங்கிய சூழலில் பிறந்து வளர்ந்தவள். எம்.ஏ. பொருளாதாரம் படித்தேன். அதில் புள்ளியியலும், மனோதத்துவமும் பாடங்களாக இருந்தன. அதன்பின்பு "வேர்ல்டு விஷன்' என்ற தன்னார்வ அமைப்பில் சேர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பணிகளைச் செய்தேன். எனக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கொடுமையான நேரடி அனுபவமும் இருந்ததால் என்னால் புற்றுநோய் வந்தவர்களுக்கு ஆலோசனை சொல்ல முடிகிறது'' என்கிறார் ஹேனா ஜேக்சின் தன்னம்பிக்கையுடன்.

 படங்கள் :அருணகிரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.