சூழல்: பாம்புக்குக் கால்கள் உண்டு!
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். படையல்ல, சாதாரண மனிதர்களே நடுங்கத் தேவையில்லை என்கிறார் ஆனந்த் குமார். ஆனந்த் குமார் எம்.எஃப்.டி பட்டம் பெற்றவர். சென்னையில் உள்ள ஷிப்பிங் கம்பெனியில் வ


பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். படையல்ல, சாதாரண மனிதர்களே நடுங்கத் தேவையில்லை என்கிறார் ஆனந்த் குமார். ஆனந்த் குமார் எம்.எஃப்.டி பட்டம் பெற்றவர். சென்னையில் உள்ள ஷிப்பிங் கம்பெனியில் வேலை. ஆனால் விடுமுறை நாட்களில் எல்லாம் அவருடைய பொழுதுபோக்கு பாம்புகளைப் பிடிப்பது, அவற்றைப் பற்றிப் படிப்பது, பாம்புகளைப் பற்றிய உண்மைகளை எல்லாருக்கும் எடுத்துச் சொல்வது. பாம்பு... பாம்பு... பாம்பு என்று பாம்புகளின் மேல் உயிராக இருக்கும் ஆனந்த் குமாரிடம், பாம்புகளுடன் எப்படிப் பழக்கம் ஏற்பட்டது என்று கேட்டோம்.
""நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். சைதாப்பேட்டைக்கு அருகில் உள்ள சின்னமலை பகுதியில்தான் வீடு. 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் நிறையப் பாம்புகள் இருக்கும். வீட்டிற்கே வந்துவிடும். எனவே நான் சிறுவனாக இருந்தபோதிருந்தே பாம்புகளைப் பார்த்ததால் பயமில்லாமற் போய்விட்டது. அப்புறம் நான் வளர்ந்து பெரியவனாகிய பின்பு 5 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த காளிதாûஸச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவரிடம் பழகப் பழக பல சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
குறிப்பாகப் பாம்புகளைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு ஒவ்வொரு வார விடுமுறை நாட்களிலும் செங்கல்பட்டுக்கு அருகே உள்ள தண்டரை கிராமத்துக்குப் போய்விடுவேன். அங்கு பாம்பு பிடிப்பவர்கள் நிறையப் பேர் வாழ்கிறார்கள். அவர்களுடன் நன்கு பழகி, பாம்புகளைப் பற்றித் தெரிந்து கொண்டேன். பாம்புகளைப் பயமில்லாமல் கையில் தொடவும், பிடிக்கவும் கற்றுக் கொண்டேன். பாம்பைப் பற்றி வெளிவந்திருக்கும் நிறையப் புத்தகங்களைப் படிப்பது, "ஓசை' அமைப்பினருடன் காடுகளுக்குச் செல்வது, பல பாம்புகளைப் பார்ப்பது என்று எனது உலகில் பெரும்பகுதியை பாம்புகள் ஆக்கிரமித்துக் கொண்டன'' என்கிறார் சிரிப்புடன்.
பாம்புகள் விஷமுள்ளவை. உங்களைக் கடித்ததில்லையா? என்றோம்.
""எல்லாப் பாம்புகளும் விஷமுள்ளவை அல்ல. இந்தியாவில் 270 வகை பாம்புகள் இருக்கின்றன என்றால் அதில் 62 வகைப் பாம்புகளே விஷமுள்ளவை. அதிலும் 4 வகைப் பாம்புகள் மனித உயிரைக் கொல்லக் கூடிய விஷம் உள்ளவை. நம்மைப் பொறுத்தவரையில் பாம்புகள் என்றாலே விஷமுள்ளவை என்று நினைக்கிறோம். பாம்பைப் பார்த்தவுடன் அடித்துக் கொன்று விடுகிறோம்.
அந்த நான்கு வகைப் பாம்புகளைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் என்ற நான்கும்தான் மனித உயிரைக் கொல்லக் கூடிய விஷமுள்ளவை. ஆனால் இந்த நான்கு வகைப் பாம்புகளும் மனிதர்களைப் பார்த்தால் ஒதுங்கிச் செல்லவே விரும்புகின்றன. அவற்றின் மீது மிதித்துவிட்டாலோ, அவற்றை அடித்துத் துன்புறுத்தினாலோ, குச்சியை வைத்துக் குத்தினாலோதான் அவை கோபமடைந்து மனிதர்களைக் கடித்துவிடுகின்றன. நாம் அவற்றிற்கு எந்தத் தீங்கும் செய்யாதவரை நம்மை அவை ஒன்றும் செய்வதில்லை. எனவே பாம்பும் நம்மைப் போன்ற உயிர்கள் என்று நினைத்து அவற்றைக் கொல்லக் கூடாது'' என்கிறார் உணர்வு பொங்க.
எல்லாம் சரி. பாம்பைப் பார்த்ததும் எது நச்சுப் பாம்பு, எது நஞ்சில்லாத பாம்பு என்று தெரியுமா? அப்படியிருக்க எந்தப் பாம்பாக இருந்தாலும் அதை அடிப்பதைத் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும். மனித உயிர்கள் பாம்புகளின் உயிர்களைவிட முக்கியமானதல்லவா? என்ற கேள்வியுடன் சீறினோம்.
""பாம்புகளைப் பற்றிய தவறான கண்ணோட்டம் இருப்பதால்தான் மனிதர்கள் பாம்புகளைப் பார்த்து தேவையில்லாமல் பயப்படுகிறார்கள். வெறி நாய் கடித்தால் மனிதர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும் என்பதற்காகக் கண்ணில் படும் நாய்களை எல்லாம் அடித்தா கொல்கிறோம்? உண்மையில் இந்தியாவில் ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் பாம்புக்கடியால் மரணமடைகிறார்கள். அதில் வெறும் 500 பேர் மட்டுமே பாம்பின் நஞ்சால் மரணமûடைகிறார்கள். மீதியுள்ளவர்கள் எல்லாரும் பாம்பு கடித்துவிட்டதே என்ற பயத்திலேயே இறந்து போகிறார்கள்.
இந்த 500 பேரையும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் அவர்களின் உயிரைக் காப்பாற்றிவிட முடியும். நல்லபாம்பு கடித்தால் 3 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் உயிருக்குப் பாதிப்பில்லை. சுருட்டை விரியன் என்ற பாம்பு உள்ளது. அது கடிக்கும்போது 12 மில்லி கிராம் விஷத்தை உமிழும். அந்தப் பாம்பு கடித்தால் 24 மணி நேரம் வரை உயிருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
அதனால் சுருட்டை விரியன் கடித்த ஒருவர் 8 மணிநேரம், 10 மணி நேரம் வரை எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருப்பார். அவரும், அவரைச் சுற்றியுள்ளவர்களும் பாம்புக் கடியால் எந்தப் பாதிப்புமில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லமாட்டார்கள். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். ஆனால் எந்தப் பாம்பு கடித்தது என்று யாருக்கும் தெரியாது. எனவே பாம்பு கடித்தால் உடனே மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பாம்பின் நஞ்சை முறிக்கும் மருந்தை மருத்துவர் நோயாளியின் உடலில் ஏற்றிக் காப்பாற்றிவிடுவார்.
பாம்பு கடித்தால் கடித்த இடத்தைக் கீறி, அதற்குமேல் கட்டுப் போடுவார்கள். அப்படிச் செய்தால் நஞ்சு உடலில் பரவாது அல்லவா? என்று கேட்டோம்.
""நிறையப் பேர் பாம்புக் கடிக்கு அதுதான் முதல் உதவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிக் கட்டுப்போட்டால் ரத்த ஓட்டம் தடைபடும். அப்புறம் கட்டை அவிழ்க்கும்போது ரத்த அழுத்தம் அதிகமாகி இதயம், மூளை போன்றவற்றை பாதிக்கக்கூடும்.
கண்ணாடி விரியன் பாம்பு கடித்துவிட்டால் கடிபட்ட இடத்தில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டே இருக்கும். உறையாது. கடிபட்ட இடத்தைக் கத்தியால் கீறினால் அதிகமாக ரத்தம் வழிந்து, ரத்த இழப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடலாம். எனவே ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு முன்பு பாம்புக் கடிபட்டவருக்கு மனதில் தைரியத்தை ஏற்படுத்த வேண்டும்.
பாம்புக்கடியால் ஒன்றும் ஆகாது. டாக்டரிடம் போனால் எளிதில் சரி செய்துவிடலாம் என்று நம்பிக்கையை ஊட்ட வேண்டும். பயத்தை அவர்களுடைய மனதில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். அவர்களுடைய பதற்றத்தைத் தணிக்க வேண்டும். அப்படிச் செய்தால் பாம்பு கடிபட்டவர்களை எளிதில் காப்பாற்றிவிடலாம்.'' என்கிறார்.
நம் வீட்டுக்கு ஒரு பாம்பு வருகிறது. அதை அடித்துக் கொன்றுவிடுகிறோம். அதற்குப் பின்பு நிறையப் பாம்புகள் நமது வீட்டிற்கு வருகின்றன. இது எதனால்? அந்தப் பாம்பைக் கொன்றதால் பழிக்குப் பழி வாங்க நிறையப் பாம்புகள் வருகின்றன என்று நினைக்கிறார்கள். இது உண்மையா? என்று கேட்டோம்.
""ஒரு பாம்பைக் கொன்றால் பல பாம்புகள் வீட்டிற்கு வருவது உண்மைதான். ஆனால் அது பழி வாங்குவதற்காக அல்ல. இனப் பெருக்க காலத்தில், பெண் பாம்பு ஆண் பாம்புகளைக் கவர ஒருவித வாசனைத் திரவத்தை உமிழ்கின்றன. அந்த வாசனையால் ஈர்க்கப்படுகிற ஆண் பாம்புகள் பெண் பாம்புகளைத் தேடி வருகின்றன. நாம் வீட்டிற்கு வந்த ஒரு பெண் பாம்பை அடித்துக் கொல்லும்போது அது தன்னையறியாமலேயே வாசனைத் திரவத்தை உமிழ்ந்துவிடும்.
அந்த வாசனைக்காகவே அதற்குப் பின்பு நிறையப் பாம்புகள் வருகின்றன. பழி வாங்கும் பழக்கம் எல்லாம் மனிதர்களுக்குத்தான். பாம்புகளுக்கில்லை'' என்ற ஆனந்த்குமாரிடம், பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். பாம்புக்கு உண்மையில் கால்கள் இருக்கிறதா? என்றோம்.
""பாம்பிற்குக் கால்கள் உள்ளன. பாம்பின் பின்புறத்தில் சிறிய இரண்டு கால்கள் உள்ளன.
ஆனால் அந்தக் கால்களை வைத்து நடக்க எல்லாம் முடியாது. அதில் நகங்கள் கூட உண்டு. அதுபோல பாம்புகளுக்குக் கேட்கும் திறன் உண்டு. நமக்கு இருப்பதுபோல வெளிப்புறச் செவி பாம்புகளுக்கு இல்லை. ஆனால் ஒலியால் அவற்றின் மண்டையோட்டில் ஏற்படும் அதிர்வுகளை வைத்து ஒலியைக் கேட்கும் திறன் உண்டு'' என்கிறார் ஆனந்த்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...