வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நீர்வளம்: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட், முன்பு "பெரிய' குளம்!

கோடைக்காலம். கொளுத்தும் வெயில். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கோடை விடுமுறை. எத்தனை நாட்கள்தாம் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது? எனவே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், குடும்பத்தோடு எங்கேயாவத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:38 am

ந. ஜீவா

கோடைக்காலம். கொளுத்தும் வெயில். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கோடை விடுமுறை. எத்தனை நாட்கள்தாம் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது? எனவே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், குடும்பத்தோடு எங்கேயாவது வெளியில் செல்பவர்கள் அதிகம். கொஞ்சம் வசதி இருப்பவர்கள் கொடைக்கானல், ஊட்டி என்று செல்வார்கள். வசதியில்லாதவர்கள் அருகிலுள்ள கோயில்களுக்கும், சுற்றுலாச் சிறப்புடைய இடங்களுக்கும் செல்வார்கள்.

ஒரு கண்மாய்க்கு யாராவது சுற்றுலாச் செல்வார்களா? சென்றார்கள்.

மதுரையில் உள்ள மாடக்குளம் கண்மாய்க்கு 90 பேர் கொண்ட ஒரு குழு சுற்றுலா சென்றது. இந்தச் சுற்றுலாவை ஏற்பாடு செய்தவர்கள், மதுரையில் உள்ள தானம் அறக்கட்டளை மற்றும் இந்திய தேசிய கலை, கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள். மாதம் ஒருமுறை வரலாற்றுப் பெருமை உள்ள இடங்களுக்கு மக்களை அழைத்துச் சென்று வருகிறார்கள். இந்த மாதம், மாடக்குளம் கண்மாய்.

இந்த மாடக்குளம் கண்மாயில் அப்படி என்னதான் வரலாற்றுப் பெருமை இருக்கிறது? என்ற கேள்வியோடு இந்தச் சுற்றுலாவில் பங்கேற்ற வெ.வேதாசலத்தை அணுகினோம்.

வெ.வேதாசலம் தமிழ்நாடு தொல்லியல்துறையில் 33 ஆண்டுகளாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் தொடர்பாக 15 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்.

""என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள்? இந்த மாடக்குளம் கண்மாயில் இருந்துதான் அந்தக் காலத்தில் மதுரை நகருக்கே தண்ணீர் கிடைத்திருக்கிறது. மதுரையைக் குறிக்கக் கூடிய சில பாடல்களில், கல்வெட்டுகளில் "மாடக்குளக்கீழ் மதுரை' என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாடக்குளக் கண்மாயில் இருந்துதான் அந்தக் காலத்தில் மதுரைக்கோட்டைக்கு அருகில் இருந்த பெரிய அகழிக்குத் தண்ணீர் போய் இருக்கிறது. மதுரையில் கோட்டையா? என்று இப்போது ஆச்சரியப்படுவார்கள். அந்தக் காலத்தில் இப்போதுள்ள கிழக்கு வெளிவீதி, மேற்கு வெளிவீதி, வடக்கு வெளிவீதி, தெற்கு வெளிவீதி ஆகிய நான்கு வெளிவீதிகள் இருந்த இடத்தில் பெரிய கோட்டையும், கோட்டையைச் சுற்றிப் பெரிய அகழியும் இருந்திருக்கிறது'' என்கிறார் வேதாசலம். தொடர்ந்து,

""இந்தச் சுற்றுலாவில் கல்லூரி ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள்,மாணவர்கள், இல்லத்தரசிகள் எனப் பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற ஊர்களில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள். இந்தச் சுற்றுலாவில் பங்கேற்றவர்களிடம் நமது நீர்நிலைகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? என்பதை எங்களால் விளக்க முடிந்தது'' என்ற அவரிடம்,மதுரையில் மாடக்குளம் கண்மாய் மட்டும்தான் நீருக்கான ஒரே ஆதாரமாக இருந்ததா? என்று கேட்டோம்.

""மதுரையில் நிறைய நீர் ஆதாரங்கள் இருந்திருக்கின்றன. 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை வில்லாபுரம் கண்மாய் என்ற ஒன்று இருந்தது. இப்போது அந்தக் கண்மாய் இருந்த இடத்தில் வீடுகள் வந்துவிட்டன. அதுபோல சிந்தாமணி கண்மாய், அனுப்பானடி கண்மாய் போன்றவை இருந்த இடத்தில் கட்டிடங்கள் வந்துவிட்டன. தல்லாகுளம், சொக்கிகுளம், பி.பி.குளம் போன்ற பகுதிகளில் ஏராளமான நீர்நிலைகள் இருந்தன. மதுரையின் மையப்பகுதியான டவுன்ஹால் ரோட்டில் பெருமாள் கோவில் தெப்பக்குளம் இப்போதும் இருக்கிறது. அதில் முன்பெல்லாம் தண்ணீர் நிரப்பினார்கள். இப்போது நிரப்புவதில்லை. இப்போது மதுரையில் உள்ள பெரியார் பஸ் ஸ்டாண்ட் இருந்த இடம் பெரிய குளமாக அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. இப்போதும் அந்தப் பகுதியில் அரை மணி நேரம் மழை பெய்தால் முழுங்கால் அளவுத் தண்ணீர் தேங்கிவிடும். என்ன காரணம்? அந்த இடம் பள்ளம். இப்படி நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி நகரத்திலும், நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்மாய், குளங்கள் போன்றவற்றை அமைக்கும் பணி சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது. இதற்கு நிறையக் கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கண்மாயிலும் அமைக்கப்பட்டிருக்கும் மடைகளின் அமைப்பு, அவற்றில் காணப்படும் கல்வெட்டுகளை வைத்தே நாம் இதைத் தெரிந்து கொள்ளலாம். விவசாயம், குடிநீர் போன்றவற்றுக்காகவே அக்காலத்தில் நம் முன்னோர்கள் கண்மாய், குளம் போன்றவற்றை ஏற்படுத்தினார்கள். ஏனென்றால் ஆண்டுக்கு 30 அல்லது 40 நாட்களே மழை பெய்யும். அந்த மழைநீரை இப்படிக் குளங்களிலும், கண்மாய்களிலும் சேமித்து வைத்தால்தான் நிலத்தடி நீர் வற்றாது. குடிக்கவும், குளிக்கவும், பாசனத்திற்கும் தண்ணீர் கிடைக்கும். ஆனால் இதற்கு நேர்மாறாக, நாம் நீர் வளத்தைப் பற்றிய சிறு அக்கறையும் இல்லாமல் இருக்கிறோம். நீர் நிலைகளில் கட்டிடங்களைக் கட்டி நீர் வளத்தை அழித்துவிட்டோம். இதனால் இப்போது தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கொடுமையானநிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையை மாற்ற வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் இப்போது கிடைக்கும் தண்ணீர் கூட கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்'' என்கிறார் கவலையுடன். தொடர்ந்தார்.

""இப்போது ராமநாதபுர மாவட்டத்தில் பல ஊர்களில் 15 அடியிலேயே உப்புத் தண்ணீர்தான் கிடைக்கிறது. மக்கள் குளத்து நீரைச் சுத்தப்படுத்தித்தான் பயன்படுத்துகிறார்கள். எனவே நாம் நீர்நிலைகளில் கட்டிடம் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு கண்மாய்க்கு விவசாயம் செய்யக் கூடிய பாசன நிலப் பரப்பு இல்லையென்றாலும் கூட, அதை அழிக்கக் கூடாது. ஏனென்றால் குடிக்க, குளிக்கத் தேவையான நீரைக் கிணறு, குளம், குழாய்க்கிணறு போன்றவற்றில் இருந்துதான் பெற வேண்டியிருக்கிறது. அதற்கு நிலத்தடி நீர் தேவை. நிலத்தடி நீரைக் காப்பாற்ற நீர் நிலைகள் தேவை'' என்கிறார் வேதாசலம்.

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் பெரும்பாலான கண்மாய்களில், ஏரிகளில் கட்டிடங்கள் கட்டுவதை அனுமதிப்பது அரசுதானே? அரசிடம் நீங்கள் உங்கள் கருத்துகளை வலியுறுத்துவதை விட்டுவிட்டு சாதாரண மக்களிடம் போய் நீர்நிலைகளைப் பாதுகாக்கச் சொல்வதால் என்ன பெரிய நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது? என்று கேட்டோம்.

""உண்மைதான். மதுரை வில்லாபுரம் கண்மாய் இப்போது ஹவுசிங் போர்டு கட்டிடங்களால் நிறைந்துவிட்டது. பல நீர்நிலைகளைப் பாதுகாப்பதைப் பற்றி அரசு கவலைப்படுவதேயில்லை. முன்பு மதுரை நகருக்குள் ஓடும் கிருதுமால் நதியில் இப்போது சாக்கடைதான் ஓடுகிறது. முன்பு அதற்கு வைகையாற்றில் இருந்து தண்ணீர் வந்தது. மாடக்குளத்தின் கலிங்கிலிருந்து அதிகப்படியான நீர் கிருதுமால்

நதிக்கு வந்தது. ஆனால் இப்போது அதில் மதுரை நகரின் சாக்கடைகள் கலந்து சாக்கடை நதியாகிவிட்டது.

நீர் நிலைகளைப் பாதுகாப்பது அரசின் கடமைதான் என்பதை ஒத்துக் கொள்கிறேன். கி.பி.800 முதல் 1300 வரை தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் நீர் வளத்தைப் பெருக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உத்திரமேரூர் கல்வெட்டில் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஏரிகளைப் பாதுகாக்கும் பணியைத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கண்காணித்தனர். ஏரியை ஆழப்படுத்துவது, அதன் கரைகளை உயர்த்துவது போன்ற பணிகளை மக்களே செய்தனர். அதை இந்த உறுப்பினர்கள் வழிநடத்தினர். ஏரிகளின் மீன்களைக் குத்தகைக்கு விட்டு அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை ஏரிகளின் பராமரிப்புச் செலவுக்குப் பயன்படுத்தினார்கள். வரிகளின் மூலமாகவும் ஏரிகளைப் பராமரித்தார்கள்.

பாண்டிச்சேரிக்கு அருகில் பாகூரில் உள்ள கல்வெட்டில் ஏரியைப் பராமரிக்க குடும்பத்தில் ஒருவர் செல்ல வேண்டும் என்ற குறிப்பு இருக்கிறது. இதைக் "குடி மராமத்து' என்பார்கள். எனவே நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் மக்களுக்கும் அந்தக் காலத்தில் இருந்து பெரிய பங்கு இருந்து வந்திருக்கிறது. நீர்நிலைகளைப் பாதுகாப்பதைப் பற்றி மக்களுக்கு விளக்கிச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் அவர்கள் நீர்நிலைகளைப் பாதுகாக்க தங்களால் முடிந்ததைச் செய்வார்கள். அரசையும் வற்புறுத்துவார்கள்'' என்கிறார் தெளிவாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.