ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஐந்து நட்சத்திர கனவு!

நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார். மதுரையில் கேட்டரிங் துறையில் டிப்ளமோ படித்தார். படித்த படிப்புக்கு வேலை தேடி முயற்சித்ததில் சென்னையில் ஐந்து நட்சத்திர ஓட்டலான ஜிஆர்டியில் வேல

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:13 am

ந. ஜீவா

நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார். மதுரையில் கேட்டரிங் துறையில் டிப்ளமோ படித்தார். படித்த படிப்புக்கு வேலை தேடி முயற்சித்ததில் சென்னையில் ஐந்து நட்சத்திர ஓட்டலான ஜிஆர்டியில் வேலை கிடைத்தது. அங்கே சிறிது காலம் வேலை செய்தார். பின்பு ஓட்டல் க்ரீன் பார்க்கில் வேலை செய்தார். இப்படியே மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. நல்ல சம்பளம் கிடைத்தாலும், கார்த்திக் குமாரின் மனதில் சொந்த ஊரைப் பிரிந்த ஏக்கம். பணம் சம்பாதிப்பதற்காகத்தானே இவ்வளவு கஷ்டம்? பணத்தை மொத்தமாகச் சம்பாதித்துவிட்டு சொந்த ஊரில் போய் நிம்மதியாய் உட்கார்ந்து கொள்ளலாமே? என்று அவர் மனதுக்குள் எண்ணம்.

 மலேசியாவுக்குப் போகலாமா? சிங்கப்பூர் போகலாமா? கனடா போகலாமா? என்று யோசித்து யோசித்து, அதற்கான முயற்சிகள் செய்தும் எதுவும் கை கூடவில்லை. வயது இருபத்தாறுதானே ஆகிறது? நடக்கிறது நடக்கட்டும் என்று சொந்த ஊருக்கு வந்தார்.

 வந்த இடத்தில் அங்கேயே தங்கிவிடும்படியான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அவருடைய தம்பி லக்ஷ்மணன் நுங்கு பறிப்பதற்காகப் பனை மரத்தில் ஏறும்போது தவறி விழுந்து முதுகுத் தண்டுவடத்தில் பலத்த அடி. தம்பியால் எழுந்து உட்கார முடியவில்லை. நடக்க முடியவில்லை. அவரைப் பார்த்துக் கொள்ள மோகனூரிலேயே தங்கி விட்டார் கார்த்திக் குமார்.

 கார்த்திக் குமாரின் அம்மாவும் அப்பாவும் கர்நாடக மாநிலத்தில் தாவணிக்கரை என்ற ஊரில் நிலத்தைக் குத்தகை எடுத்து விவசாயம் செய்ய அங்கே போய்விட்டார்கள். எனவே சிறுவயது முதலே பாட்டி வீட்டிலும், மாமாவின் ஆதரவிலும் வளர்ந்தனர் கார்த்திக் குமாரும், அவருடைய தம்பிகளும்.

 தம்பியைப் பார்த்துக் கொள்ள வேண்டுமானால் சொந்த ஊரை விட்டுப் போக முடியாத நிலை. ஆனால் பிழைப்புக்கு என்ன செய்வது?

 அப்போது கார்த்திக் குமாருக்கு திருச்சியில் உள்ள வாழை பற்றி ஆராய்ச்சி செய்யும் தேசிய நிறுவனமாகிய என்ஆர்சிபியைப் பற்றித் தெரிந்தது.

 திருச்சியில் அந்த நிறுவனம் நடத்தும் "அறுவடை பின்சார் தொழில்நுட்பப் பயிற்சி'யைப் பெற்றார்.

 கார்த்திக் குமார் தனது மாமாவின் 4 ஏக்கர் வயலில் வாழை பயிரிட்டார். அதில் இருந்து கிடைத்த வாழைப் பழம், வாழைப் பூ போன்றவற்றை வைத்து ஏதேனும் தொழில் செய்தால் என்ன என்று கார்த்திக் குமாருக்குத் தோன்றியது.

 உடனே ஆரம்பித்தார் வாழைப் பூ ஊறுகாய் தொழிலை. சிறிய அடுப்பு, சிறிய மிக்சி என்று கையில் அப்போதிருந்த 10 ஆயிரம் ரூபாயை வைத்து சிறிய அளவில் வாழைப் பூ ஊறுகாயைத் தயாரித்து, தெரிந்த கடைக்காரர்களிடம் விற்பனை செய்து தரும்படி கேட்டார். ஆரம்பத்தில் தயங்கினார்கள். பிறகு வாழைப் பூ ஊறுகாய் நல்ல சுவையாக இருக்கிறது என்று அதைப் பயன்படுத்தியவர்கள் அடுத்தவர்களிடம் சொல்லவே, வியாபாரம் சூடு பிடித்தது.

 அப்போது கரூரில் ஆட்சியராக இருந்த தேவசகாயம், உழவர் சந்தையில் இந்த ஊறுகாயை விற்பனை செய்ய அனுமதி கொடுத்தார். உழவர் சந்தையில் விற்பனையான ஊறுகாயின் சுவை, வாடிக்கையாளர்களைப் பலமடங்கு பெருக்கியது.

 அதுபோல, பல கடைக்காரர்கள் நேரில் வந்து வாழைப் பூ ஊறுகாய் வேண்டுமென்று கேட்க ஆரம்பித்தார்கள்.

 ""நான் படித்த கேட்டரிங் டெக்னாலஜி எனக்கு வாழைப் பூ ஊறுகாய் தயாரிப்பதில் கை கொடுத்தது. நல்ல சுவையான ஊறுகாய் தயாரித்துக் கொடுத்தாலும், நாங்கள் தயாரித்த ஊறுகாய் இரண்டு மாதங்களில் கெட்டுப் போய்விட்டது. இதனால் நிறைய நஷ்டம் ஏற்பட்டது. பிறகு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து ஓர் ஆண்டு வரை கெட்டுப் போகாத ஊறுகாயைத் தயாரித்தேன்'' என்கிறார் கார்த்திக் குமார்.

 வாழைத் தண்டு ஊறுகாய், முருங்கைக்காய் ஊறுகாய் என்றும் கூடுதலான வகைகளைத் தயாரித்தார் அவர்.

 ""எனது ஊறுகாய்களுக்கு நிறைய வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் நீண்ட தொலைவு நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டிச் செல்லும் டிரைவர்களே. அவர்கள் வைத்திருக்கும் ஸ்டவ்வில் சோறு ஆக்கிக் கொண்டு, அல்லது தோசை, சப்பாத்தி சுட்டுக் கொண்டு எங்கள் ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுவிடுகிறார்கள்'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.

 முதலில் வாழை விவசாயிகள் வாழைப் பூவைத் தூக்கி எறிந்துவிடுவார்கள். கார்த்திக் குமார் ஒரு பூவுக்கு இரண்டு ரூபாய் கொடுத்ததும், விவசாயிகள் வாழைப் பூவை இவர் இருக்கும் இடத்துக்கே வந்து கொடுத்துவிட்டுப் போனார்கள். இதனால் வாழைப் பூ ஊறுகாய் தயாரிப்பதற்கு மூலப் பொருள் எந்தவிதத் தடையுமின்றி இவருக்குக் கிடைத்திருக்கிறது.

 வியாபாரம் என்றால் போட்டி இருக்கும். கார்த்திக் குமாரைப் போலவே சிலர் வாழைப் பூ ஊறுகாயுடன் கடைகளில் களம் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் இவர் தயாரிக்கும் ஊறுகாயைப் போல சுவை அவற்றில் இல்லை என்பதால் நாளடைவில் போட்டி இல்லாமற் போய்விட்டது.

 ""இப்போது என்னிடம் 15 பேர் வேலை செய்கிறார்கள். கரூர், திருச்செங்கோடு, நாமக்கல், காட்டுப்புத்தூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் மொத்த விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். எங்களிடம் ஊறுகாயை வாங்கிக் கொண்டு போய் கடைகளில் விற்பனை செய்வது அவர்களுடைய வேலை. என்றாலும், கடைக்காரர்களின் நேரடி தொடர்பு எங்களுக்கிருக்கிறது. விற்பனை செய்வதற்கு ஊறுகாய் தேவைப்படுகிறது என்றால் எங்களுக்குத் தொலைபேசியில் தகவல் சொல்லிவிடுவார்கள். இப்போது வாழைப் பூ ஊறுகாய், வாழைத்தண்டு ஊறுகாய், முருங்கைக்காய் ஊறுகாய் மட்டுமே தயாரிக்கிறோம். இன்னும் வாழைக்காய் மாவு, ஜாம், சிப்ஸ், ஆரோக்கிய பானம் எல்லாம் தயாரிக்கும் திட்டம் இருக்கிறது. இப்படிப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்க எஃப்பிஓ சான்றிதழ் பெற வேண்டும். அதை நாங்கள் பெற்றிருக்கிறோம். இன்னும் தொழிலை விரிவாக்க மோகனூரில் இருந்து வலையபட்டி செல்லும் பாதையில் தொழிற்சாலை அமைக்க கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது'' என்கிறார் அந்த முன்னாள் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் செஃப்.

 கார்த்திக் குமாருக்கு இந்த ஆண்டு "சிறந்த வாழை தொழில் முனைவோருக்கான விருது' கிடைத்திருக்கிறது. விருது வழங்கியவர்கள் வாழை தொடர்பாக இவருக்குப் பயிற்சி அளித்த என்ஆர்சிபி நிறுவனத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.