2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

எம்.ஜி.ஆரின் முதலாளி

கிராமத்தில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கிடையிலான உட்பூசலை மையமாகக் கொண்டது "செளகார்' கதை.

News image
Updated On :15 டிசம்பர் 2012, 10:05 am

வைரஜாதன்

நாகிரெட்டி நினைவுக: மகன் விஸ்வம் எழுதுகிறார்

17. எங்க வீட்டுப் பெண் இயக்குநர்

'எங்க வீட்டுப் பிள்ளை'யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அடுத்து எந்த படத்தைத் தயாரிப்பது என்ற கேள்வி என் தந்தையாரின் மனதில் எழுந்தது.
 காரணம்
 ஏற்கெனவே தயாரித்த படத்தைவிட, அடுத்த படம் தரத்திலும் வசூலிலும் மேம்படாவிட்டாலும் அந்த அளவுக்காவது இருந்தால்தான் பேனரின் பெயர் காப்பாற்றப்படும் என்ற படவுலகின் நியதிதான்.
 என் தந்தையாரும் சக்கரபாணியாரும் கலந்து, ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். எல்.வி. பிரசாத் டைரக்ஷனில் உருவான, விஜயா புரொடக்ஷன்ஸின் முதல் படமான "செüகார்' தெலுங்குப் படத்தை தமிழில் தயாரிப்பது என்பதுதான் அது.
 கிராமத்தில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கிடையிலான உட்பூசலை மையமாகக் கொண்டது "செளகார்' கதை. அவர்களுக்கு மிகவும் பிடித்தமான கதை.
 இப்படத்தைத் தயாரிப்பதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்காது. அதேசமயத்தில் சிறிய பட்ஜெட்டில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்காத படத்தைத் தயாரித்து வெளியிட்டால் அதனை ரசிகர்கள் ஏற்கவும் வாய்ப்பு உண்டு என "எங்க வீட்டுப் பெண்' படத்தை தயாரிக்க முனைந்தனர்.
 "எங்க வீட்டுப் பெண்' படத்திற்கு யார் டைரக்டர்? என்ற கேள்வி எழுந்தபோது சக்கரபாணியார் என் தந்தையாரிடம், ""உங்களுக்கு கிராமத்து வாழ்க்கை நன்றாகத் தெரியும். வாகினி படத்தயாரிப்பு விவாதங்களில் பங்கேற்றதுடன் படத்தயாரிப்பில் பல ஆண்டுகள் பெற்ற அனுபவம் இவற்றை வைத்து நீங்களே எங்க வீட்டுப் பெண் படத்தை டைரக்ட் பண்ணலாம்'' என்று சொன்ன ஊக்கத்தினால் என் தந்தையாரே எங்க வீட்டுப் பெண் படத்தை இயக்க முடிவு செய்தார்.
 என் பெரிய தகப்பனார் பி.என். ரெட்டியின் படத்தில் நடிக்க வேண்டும் என்று வந்த ஜானகி, விஜயா புரொடக்ஷன்ஸின் முதல் படமான "செüகார்' தெலுங்கு படத்தில் அறிமுகமாகி செüகார் ஜானகி எனப் பிரபலமானார்.
 அவரைப்போலவே, என் பெரிய தகப்பனாரின் "ரங்குல ராட்டினம்' தெலுங்குப் படத்தில் அறிமுகமான நிர்மலா, விஜயாவின் "எங்க வீட்டுப் பெண்' தமிழ்ப்படத்தில் அறிமுகமாகி விஜயநிர்மலா என பிரபலமாகி தெலுங்குப் படவுலகில் நடிகையாக, பிற்காலத்தில் இயக்குநராக, தயாரிப்பாளராக வெற்றிக் கொடி நாட்டினார்.
 சக்கரபாணியாரின் கதைக்கு, எஸ். அய்யாபிள்ளை வசனம் எழுத, பாடல்களை கவியரசர் கண்ணதாசன், ஆலங்குடி சோமு இயற்ற கே.வி. மகாதேவன் இசையமைத்தார். மார்க்கஸ் பார்ட்லே ஒளிப்பதிவு செய்ய எம்.ஆர். ராதா, எஸ்.வி. சுப்பையா, ஏவி.எம். ராஜன், ஜெய்சங்கர், கே.ஏ. தங்கவேலு, நாகேஷ், வி. நாகய்யா, ஓ.ஏ.கே. தேவர், விஜயநிர்மலா, மனோரமா, வசந்தா, மாதவி ஆகியோர் நடித்தனர்.
 என் தந்தையார் இயக்கத்தில் நடித்ததைப் பற்றி இரு நடிகைகள் சொன்னதை இங்கே சொல்ல விரும்புகிறேன். நடிகை மனோரமா சொல்லும்போது,"" "எங்க வீட்டுப் பெண்' படத்தில் எனக்கு வித்தியாசமான கிராமத்து சலவைத் தொழிலாளி வேடம். நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை பல காட்சிகளில் ரெட்டியாரே நடித்துக் காண்பிப்பார். அந்தக் கொடுப்பினை எத்தனை பேருக்குக் கிடைத்ததோ தெரியாது. எனக்குக் கிடைத்தது. படப்பிடிப்பு அரங்கில் அவர் மிகவும் அமைதியாக, எந்தவித படபடப்பும் சலசலப்பும் இல்லாமல் இருப்பார். ஒளிப்பதிவாளரிடம் சொல்லி என் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிகவும் சிரத்தையோடு எடுத்தார். ரஷ் போட்டுப் பார்த்த உடனேயே என் நடிப்பைப் பாராட்டுவார்'' என குறிப்பிட்டுள்ளார்.
 அறிமுக நாயகி விஜயநிர்மலாவின் கருத்து:
 "" "எங்க வீட்டுப் பெண்' கதாநாயகியான என்னை மாற்ற வேண்டும் என்ற பிரச்னை வந்தபோது தமது முடிவில் தயாரிப்பாளராக, இயக்குநராக நாகிரெட்டியார் காட்டிய உறுதியைக் கண்டு பெருமிதம் கொண்டவள் நான். நேரத்தின் அருமை தெரிந்து வருபவர், அதுவே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது'' என்றார்.
 படத்தின் டைட்டில் கார்டில் இயக்குநராக என் தந்தையாரின் பெயர் இடம்பெறவில்லை. படவுலகில் பெரும்பாலானவர்களுக்கு என் தந்தையார் படத்தை டைரக்ட் செய்ததுகூட தெரியாது. ஏன்? "எங்க வீட்டுப் பெண்'ணைப்பற்றி என் தந்தையார் சொல்லக் கேட்போம்:
 ""தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் நான் பல படங்களைத் தயாரித்து இருந்தாலும் ஒரே ஒரு படத்தை, அதுவும் தமிழில் இயக்கியதை என் வாழ்நாளில் மறக்க இயலாது. அதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
 "எங்க வீட்டுப் பெண்' படத்தைத் தயாரிக்க ஆயத்தப் பணிகள் செய்து கொண்டிருந்தபோது அதிகாலையில் ஸ்டூடியோவுக்கு சென்றுவிடுவேன். வேறு படத்தில் நடிப்பதற்காக எம்.ஆர். ராதாவும் அங்கே வருவார். நான் அவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அவரை நேரில் பார்த்ததில்லை. அவருக்கும் என்னை நேரில் பார்க்க ஆவல். ஒருவாரமாக படப்பிடிப்புக்கு வருகின்ற எம்.ஆர். ராதாவும் ஸ்டூடியோவுக்குப் போகும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் இவர்தான் எம்.ஆர்.ராதா என்பது எனக்கும், இவர்தான் நாகிரெட்டியார் என்பது அவருக்கும் தெரியாது.
 இவர்தான் எம்.ஆர்.ராதா என்பதை அறிந்து, அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.
 அப்போது அவர், ""தப்பாக நினைக்கக் கூடாது. இதுவரையில் உங்களை தோட்ட மேஸ்திரி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்'' என்று சொல்லி என்னை கட்டியணைத்துக் கொண்டார்.
 அப்போது "எங்க வீட்டுப் பெண்' படத்தில் வரும் கிராமத்து பணக்காரர் வேடம் என் நினைவுக்கு வர, உடனே அவரிடம், ""நீங்கள் என்னுடைய "எங்க வீட்டுப் பெண்' படத்தில் நடிக்க வேண்டும்'' என்று கேட்டேன்.
 ""யார் டைரக்டர்?''
 ""நான்தான்''
 ""அப்படியா ரொம்ப சந்தோஷம். நீங்க காமிரா முன்னாடி என்னை உட்காரச் சொன்னா உட்கார்றேன்... நிற்கச் சொன்னா நிக்கறேன்'' என்று தெலுங்கில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
 படப்பிடிப்பில் நான் சொல்வதைக் கேட்டு, கேரக்டரை அப்படியே அவருக்கே உரிய பாணியில் பிரதிபலிப்பார். அவரது நடிப்பைப் பார்த்து வியந்து போவேன்.
 ""பார்கவி நிலையம்'' என்ற மலையாளப்படத்தில் (ஏற்கெனவே 200 படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றிருந்த) பிரேம் நசீருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நிர்மலா. அந்தப் படத்தின் ரஷ் பார்த்த நான், அந்த நடிகையைப் பற்றி விசாரித்தேன். வாகினி ஸ்டூடியோவில் தலைமை ஆபரேட்டராக இருக்கும் ராம்மோகன் ராவின் மகள் என்பது தெரியவந்தது.
 எங்களது ""குணசுந்தரி'' படத்தில் சிறுமி வேடத்தில் நடித்திருந்தார் நிர்மலா. இருந்தாலும் "எங்க வீட்டுப் பெண்' படத்தில் நிர்மலாவை கதாநாயகியாக, தமிழில் புதுமுகமாக அறிமுகப்படுத்த விரும்பினேன்.
 நிர்மலாவை அழைத்து மூவி டெஸ்ட் எடுக்கச் சொன்னேன். அப்போது அவருக்குத் தமிழ் சரளமாகப் பேச வராது. எனவே தமிழாசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்து, அவருக்கு தமிழ்ப் பேச கற்றுக் கொடுக்கச் சொன்னேன்.
 "எங்க வீட்டுப் பெண்' முதல் நாள் படப்பிடிப்பு... முதல் காட்சியாக எஸ்.வி. ரங்காராவ், உடன் நிர்மலா நடிக்க வேண்டிய காட்சியை படமாக்க விரும்பினேன்.
 ஷாட் ரெடி... ஆக்ஷன்... கேமரா... என்று சொன்னவுடன் நிர்மலாவுக்கு படபடப்பு ஏற்பட்டுவிட்டது. ஷாட் "ஓகே' ஆகவில்லை.
 அப்போது நிர்மலாவைப் பார்த்த எஸ்.வி. ரங்காராவ், ""என்ன... பல்லி மாதிரி ஒல்லியான இந்தப் பெண்ணா படத்தின் கதாநாயகி... சரிப்பட்டு வராதே... இவளுக்குப் பதிலாக வேறொரு பெண்ணைப் போடலாமே. இந்தப் பெண்ணை மாற்றிவிடுங்கள்'' என்று வற்புறுத்திச் சொன்னார்.
 ""அந்தப் பெண்ணுக்கு இது முதல்நாள்... முதல் ஷாட் படப்பிடிப்பு... கொஞ்சம் படபடப்பாக இருக்கிறாள்... அவ்வளவுதான்'' என்று எவ்வளவோ சொல்லியும் எஸ்.வி. ரங்காராவ் நிர்மலாவுடன் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. முதல் நாள் படப்பிடிப்பு ஒரு ஷாட்கூட எடுக்கப்படாமல் கேன்சல் ஆகியது.
 இனி என்ன செய்வது நிர்மலாவை மாற்றச் சொல்லி எஸ்.வி. ரங்காராவ் வற்புறுத்துகிறாரே... முதல்நாளே இப்படி இருந்தால்... படத்தை முடிப்பதற்குள் நிலைமை என்னவாகும்? சிந்தித்து சிந்தித்து... சக்கரபாணியுடன் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.
 மறுநாள் நிர்மலாவை அழைத்து வரச்சொன்னேன். மேக்அப் போட்டுக் கொண்டு படப்பிடிப்பு அரங்கினுள் நுழைந்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
 முன்தினம் எடுக்கப்படவேண்டியிருந்த அந்தக் காட்சியில் எஸ்.வி.ஆருக்குப் பதிலாக எஸ்.வி.எஸ். நடிக்கத் தயாராக இருந்தார்.... ஆம்... எஸ்.வி. ரங்காராவுக்குப் பதிலாக எஸ்.வி. சுப்பையா நடித்தார்.
 அந்த வேடத்திற்கு பொருத்தமானவராக நிர்மலா இருந்ததால், நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த கதாநாயகியை மாற்ற விரும்பவில்லை. அந்த நடிகையுடன் நடிக்க விரும்பாத நடிகர் (எஸ்.வி. ரங்காராவ்) மாற்றப்பட்டார். ஏற்கெனவே நிர்மலா என்ற பெயரில் நடிகை இருந்ததால், இவரது பெயரை விஜயநிர்மலா என்று மாற்றினேன்.
 "எங்க வீட்டுப் பெண்' தொண்ணூறு சதவீதம் எடுக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பில் இரவு பகலாக, ஓய்வில்லாமல் வேலை, அத்துடன் "ராம் அவுர் ஷ்யாம்' (இந்தி எங்க வீட்டுப் பிள்ளை) படத்தின் திட்டமிடுதல் வேலைகளும் ஒரு சேர என் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவர் என்னிடம் ஆறு மாதம் பூரணமாக ஓய்வு எடுக்கும்படி உத்தரவு போட்டுவிட்டார்.
 படத்தை குறிப்பிட்ட தேதியில் முடித்தாக வேண்டுமே, என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருந்தபோது ஆபத்சகாயனாக வந்தார் எம்.ஜி.ஆர். எனக்கு உடல் நலம் சரியில்லை என்பதை அறிந்த எம்.ஜி.ஆர். உடல் நலம் விசாரிக்க வந்தார்.
 என்னால் சரியாகக்கூட பேச முடியாத நிலையில் அவரைக் கண்டவுடன் என் கண்களில் நீர் முட்ட அவரைப் பார்த்தேன். என் மனதில் இருப்பதை அறிந்த எம்.ஜி.ஆர்., "" ரெட்டியார், நீங்கள் படத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். படத்தை முடிக்க பொருத்தமான இயக்குநரை ஏற்பாடு செய்கிறேன்... "எங்க வீட்டுப் பிள்ளை'யை இயக்கியவரே "எங்க வீட்டுப் பெண்'ணையும் இயக்கட்டும்'' என்று அப்போது சத்யா மூவிஸின் "நான் ஆணையிட்டால்' படத்தை இயக்கிக் கொண்டிருந்த சாணக்யா, "எங்க வீட்டுப் பெண்' படத்தையும் முடித்துக் கொடுக்க ஏற்பாடு செய்வதாக எம்.ஜி.ஆர். ஆறுதல் சொன்ன பிறகே எனக்கு நிம்மதி ஏற்பட்டது.
 "எங்க வீட்டுப் பெண்' படம் குறிப்பிட்ட நாளில் படம் வெளியானது என்றால் அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். நான் கேட்காமலே முன்வந்து உதவிபுரிந்து, "நாடோடி மன்னன்' நன்றிக்கடனை செலுத்தினார் எம்.ஜி.ஆர். என்றே கருதுகிறேன். தானாகவே முன்வந்து உதவும் எம்.ஜி.ஆரின் இந்த குணம்தான் அவரிடம் எனக்கு அளப்பரிய அபிமானத்தை, நட்பை ஏற்படுத்தியது.
 "எங்க வீட்டுப் பெண்' படத்தின் மீதி காட்சிகளை சாணக்யா இயக்கி, படத்தை முடித்துக் கொடுத்தார்.
 அதனால் படத்தின் டைட்டில் கார்டில் டைரக்ஷன் "சாணக்யா' என்று போடச் சொன்னேன்.
 "எங்க வீட்டுப் பெண்' படம் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. ஆனால் படத்தை சாணக்யா சரியாக இயக்கவில்லை என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டுவிட்டது.
 இத்தனைக்கும் "எங்க வீட்டுப் பெண்' படத்தை முழுமையாக அவர் இயக்கவில்லை. பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பதற்கேற்ப பழி அவர்மீது சுமத்தப்பட்டது. ஆனால் சாணக்யா இயக்கி அடுத்து வந்த "நான் ஆணையிட்டால்' படத்தின் வெற்றி அவரது அந்த இமேஜை மாற்றி அவரை வெற்றிப்பட இயக்குநர் வரிசையில் சேர்த்தது.
 நல்ல படங்கள் எல்லாம் வெற்றி பெறும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதேபோல நன்றாக ஓடும் படங்களை எல்லாம் நல்ல படம் என்றும் சொல்ல முடியாது. படம் வெளியாகி சரியாக போகாவிட்டால் அதன் பாதிப்பு இயக்குநரை மட்டுமல்ல... தயாரிப்பாளரையும் பெருமளவில் பாதிக்கும் என்பதற்கு இரு சம்பவங்களை இந்தச் சந்தர்ப்பத்தில் கூறுவது பொருத்தமாக இருக்கும்:
 "எங்க வீட்டுப் பெண்' வியாபார ரீதியில் சரியாக ஓடாததினால் அதை வாங்கி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு படவுலகில் முதன் முறையாக நஷ்டஈடு வழங்கப்பட்டது. இதனால் விஜயாவின் பேனருக்கு விநியோகஸ்தர்களுக்கிடையே பெருமதிப்பு ஏற்பட்டது. அடுத்தது
 "சந்திரஹாரம்' படத்தை அந்தக்காலத்தில் 25 லட்ச ரூபாய் செலவில் தயாரித்து வெளியிட்டோம். படம் வெற்றியடையவில்லை. இனி விஜயா புரொடக்ஷன்ஸ் அவ்வளவுதான்... மீள முடியாது என்ற வதந்தி திரையுலகில் வேகமாகப் பரவ... அது என்னையும் எனது நிறுவனங்களையும் பாதித்தது. எங்களது நிறுவனங்களுக்கு பொருள்கள் சப்ளை செய்பவர்கள் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் உடனே பணம் தரவேண்டும் என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.
 எங்களது நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு மாதக் கடைசி வேலைநாள் சம்பள பட்டுவாடா செய்யும் நாள். அதைப்போலவே பொருள்கள் சப்ளை செய்தவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதி செக் கொடுக்கப்படும். இந்த முறையை நான் கண்டிப்புடன் கடைப்பிடித்து வந்தேன். "சந்திரஹாரம்' படத்தின் தோல்வியால் இனி இவர்களால் குறிப்பிட்ட தேதியில் பணம் தர முடியாது என்றிருந்த வதந்தியை மாற்ற... அந்த வதந்தியைப் பொய்யாக்க... அந்த மாதம் 10ஆம் தேதிக்குப் பதிலாக, ஐந்து நாட்களுக்கு முன்பே, 5ஆம் தேதியே செக் வழங்கப்பட்டது. இதனால், இவர்கள் பணவிஷயத்தில், கறாராக கண்டிப்புடன் இருப்பவர்கள், சரியாக ஒழுங்காக பணம் தருபவர்கள் என்ற நற்பெயர் விஜயாவின் நிறுவனங்களுக்கு படவுலகிலும் பணியாளர்கள் மத்தியிலும் நிலைநாட்டப்பெற்றது.
 ஒரு படத்தின் தோல்வி தயாரிப்பாளர், இயக்குநரை மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட மற்ற கலைஞர்களின் திறமையையும் எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதற்கும் ஓர் நிகழ்ச்சி:
 "எங்க வீட்டுப் பெண்' படம் வெளியாகி, பல ஆண்டுகள் கழித்து விஜயா கார்டனில் வேறு பட பாடல் பதிவுக்காக வந்திருந்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனைப் பார்த்தேன்.
 (தொடரும்)
 தொகுப்பு: வைரஜாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.