

டாக்டரின் வீட்டுக் கதவை ஒருவர் தட்டினார். அவர்கள் ஆறு பேராக வந்திருந்தார்கள். டாக்டர் கதவைத் திறந்துகொண்டு தட்டுத் தடுமாறி வந்தார்...
டாக்டர், சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் என்று பெயர் பெற்றவர். அவரைப் பார்த்ததுமே அனைவரும் குதூகலமாகக் கூச்சல் போட்டார்கள். எல்லாருமே எழுபது வயதைத் தாண்டியவர்கள்...டாக்டர் உள்பட.
""டாக்டர்! இன்று நாங்கள் எல்லோருமே உயிருடன் இருக்கிறோம் என்றால் அது உங்களால்தான். நாங்கள் அனைவருமே உங்கள் அறுவைச் சிகிச்சைக்கு ஆளாகி இருக்கிறோம்''
""மெத்த மகிழ்ச்சி. உள்ளே வாருங்கள்!'' என்று டாக்டர் அழைத்துச் சென்றார். அனைவரும் கணப்பருகே அமர்ந்தனர். டாக்டரைப் பார்க்க வந்தவர்கள் உயர்ந்த வகை மதுப்புட்டிகளைக் கொண்டு வந்திருந்தார்கள்.
அனைவரும் மகிழ்ச்சியுடன் மது அருந்திக் கொண்டே பேசத் தொடங்கினார்கள்.
""உங்களுக்கு ஒரு விசித்திரமான கதை ஒன்றை சொல்லப் போகிறேன்'' என்று டாக்டர் ஆரம்பித்தார்.
புகைப்படக் கலை அப்போதுதான் தோன்றியிருந்தது. இளைஞன் டெக்ரான் புகைப்படக் கலையில் நன்றாகத் தேர்ச்சி பெற்றான். ஸ்டாண்டு போட்டு நிறுத்தும் தன் கேமராவைத் தூக்கிக் கொண்டு சந்தை கூடும் இடத்திற்கு வந்துவிடுவான்.
""ஐயா! வாங்க! அம்மா! வாங்க! என்றும் ஞாபகார்த்தமாக இருக்கும். ஒரு படம் எடுத்துக் கொள்ளுங்கள்!'' என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டு தன் வசீகரமான சிரிப்பைக் காட்டுவான்.
எப்படிப் போஸ் கொடுப்பது என்று சொல்லிக் கொடுப்பதில் நிபுணன். அவனது புகைப்படங்கள் அருமையாக அமைந்து இருந்ததால் நிறையப் பேர் போட்டோ எடுக்க வந்தார்கள்.
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், அவன் சந்தை கூடும் இடத்திற்கு ஓர் ஒட்டகத்தின் மேல் சவாரி செய்து கொண்டுதான் வருவான். கரும்பச்சை நிறமுள்ள அந்த ஒட்டகம் ரெட்டைத் திமில் கொண்டது. பார்க்க அழகாக இருக்கும். எங்கிருந்தோ அதை அவன் விலைக்கு வாங்கி வந்திருந்தான்.
படகுச் சவாரியில் அவனுக்கு மிகுந்த விருப்பம். அடிக்கடி கடலில் படகுப் பயணம் செய்வான். ஒரு முறை அவன் படகுப் பயணம் சென்றபோது நீரில் இருந்த ஒரு கண்ணி வெடி வெடித்துத் தூக்கி எறியப்பட்டான். எப்படியோ கரைக்குத் தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்த்தார்கள். உடம்பெல்லாம் காயம்.
உடனே அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும்.
அறையில் இருந்த மங்கலான வெளிச்சம் கண்ணுக்கும், மனதுக்கும் இதமாக இருந்தது. விருந்தினர்கள் கதை கேட்கும் ஆர்வத்தில் லயித்திருந்தார்கள். டாக்டர் ருமனோவ் சொன்னார்...
""ஆபரேஷன் செய்தால் டெக்ரான் பிழைக்கமாட்டான் என்று நான் சொன்னேன். என் சக டாக்டர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினார்கள்! "எப்படியும் டெக்ரானை நீங்கள் காப்பாற்றித்தான் ஆக வேண்டும், இந்தப் பட்டணத்து மக்கள் அனைவராலும் அதிகமாக நேசிக்கப்படும் ஆத்மா இவன்! இவன் இறந்து போனால் பொதுமக்கள் நம்மை உலுக்கி எடுத்துவிடுவார்கள்!''
""எனக்கென்னமோ ஆபரேஷன் செய்தாலும் ஒன்றுதான்; செய்யாவிட்டாலும் ஒன்றுதான் என்று தோன்றியது! கைராசிக்கார மருத்துவன் என்ற கீர்த்தியைப் பெற்றிருந்த நான் மனதை திடப்படுத்திக்கொண்டு அறுவைச் சிகிச்சையை செய்தேன்''
டெக்ரானை கவனித்துக் கொள்ள அவனது தாயார் மட்டுமே வந்திருந்தார். அழகான டெக்ரானுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.
இரட்டை நாடி சரீரம் உள்ள அவன் தாயார் குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள்.
""டாக்டர்! என் மகன் பிழைப்பானா?'' என்று நொடிக்கொரு முறை கேட்டுக் கொண்டிருந்தாள்.
உன் மகன் பிழைக்கமாட்டான் என்று ஒரு தாயாரிடம் எப்படிச் சொல்லுவேன்?
நள்ளிரவு பன்னிரண்டு மணி இருக்கும். தேவதை மாதிரி ஒரு பெண் அறைக்குள் நுழைந்தாள். நான் டெக்ரான் படுத்திருந்த கட்டிலின் அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன்.
""டாக்டர்! இன்றிரவு நான் டெக்ரானைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்'' என்றாள்
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.
""இரவு கல்யாணம் செய்து கொண்டு மறுநாள் காலை விதவை ஆகப் போகிறாயா?'' என்று நான் வருத்தத்துடன் கேட்டேன்.
""எது எப்படியோ? இன்றிரவு நான் இவரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவது மட்டும் நிச்சயம்! என் அன்பில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது''என்றாள்.
இந்த ஆழ்ந்த காதலின் ஆணி வேரைக் கண்டுபிடிக்க எனக்கு ஆசையாக இருந்தது! அந்தப் பெண்ணின் பெயர் மெல்வின்!
அவள் அவர்களின் தீவிரக் காதல் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.
அந்தப் பட்டணத்தில் கார்னிவல் நடந்து கொண்டிருந்தது. கார்னிவலை ஒட்டி ஒரு பொருட்காட்சி. நல்ல கூட்டம்; பல ஸ்டால்கள்.
துப்பாக்கிச் சுடும் ஒரு ஸ்டாலில் மெல்வின் நின்றுகொண்டிருந்தாள். காசு கொடுத்து டோக்கன் வாங்கி சரியாகப் பலூனை சுட்டுவிட்டு ஒரு கரடிப் பொம்மையை பரிசாகப் பெற்றுக்கொண்டான் டெக்ரான். மறுபடியும் டோக்கன் வாங்கினான்.
""இது என்ன? சின்னப் பிள்ளைகளுக்குப் பரிசு கொடுக்கிற மாதிரி கரடிப் பொம்மை! நான் துப்பாக்கியால் சரியாகச் சுட்டுவிட்டால் ஒரு முத்தம் பரிசாகக் கொடுக்கிறேன் என்று சொல்! அதற்கு சம்மதம் என்றால் துப்பாக்கியை எடுக்கிறேன். இல்லை என்றால் வேண்டாம்'' என்று டெக்ரான் கறாராகச் சொன்னான்.
நாணத்துடன் தன் சம்மதத்தைச் சொன்னாள் மெல்வின். உற்சாகத்துடன் சரியாகச் சுட்டுவிட்டான் டெக்ரான். அடுத்த கணமே இருவரும் முத்தமிட்டார்கள்.
இரண்டு மணி நேரத்திற்குள் ஆண்டாண்டுக் காலம் ஒன்றாகப் பழகிய ஜோடி போல் ஆகிவிட்டார்கள். மெல்வின் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அங்குதான் டெக்ரான் இந்த ரெட்டைத் திமில் ஒட்டகத்தைப் பார்த்தான். மெல்வின் ஞாபகார்த்தமாக அதைப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டான். நிச்சயம் அவன் ஊருக்கு வந்து, அவனைக் கல்யாணம் செய்து கொள்வதாக மெல்வின் வாக்குக் கொடுத்தாள்.
""டாக்டர்! என்னை இவருடன் தனியே இருக்க அனுமதியுங்கள்! நான் இவருடன் ஆத்மார்த்தமாகப் பேசப் போகிறேன்'' என்று கண்களில் நம்பிக்கையுடன் சொன்னாள்.
""அம்மா புண்ணியவதி! நீ ஏதாவது நாட்டு மருந்து கொடுத்து அவனை சீக்கிரம் மேலே அனுப்பிவிடாதே!'' என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சுரணை அற்றிருந்த டெக்ரானின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவள் கொஞ்சிப் பேசத் தொடங்கினாள்.
""அன்பே! இப்போதே நாம் கல்யாணம் செய்துகொள்ளலாம். நாம் ஆனந்த வாழ்க்கை நடத்துவோம் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நம் முதல் இரண்டு குழந்தைகளும் ஆண் குழந்தைகள்தான். அவர்களுக்கு என்ன பெயர் வைப்பது என்று கூட நான் நிச்சயம் செய்துவிட்டேன்!'' என்று சொல்லிக்கொண்டே கண்ணீர் சிந்தினாள். என்னாலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சூரியக் கதிர்கள் என் முகத்தை முத்தமிட்டபோது ஒரு தவிப்புடன் எழுந்து டெக்ரானின் படுக்கை அறையை நோக்கி ஓடினேன். அதிசயமான காட்சி!
ஆச்சரியம்! ஆனால் உண்மை! டெக்ரான் படுத்தபடியே மெல்வினுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.
சத்தியமாகச் சொல்கிறேன் டெக்ரானைக் காப்பாற்றியது என் அபார மருத்துவத் திறமை அல்ல...மெல்வினுடைய ஆழ்ந்த அபரிமிதமான காதல்தான்!
""மரணத்தை வென்ற மாதரசி அவள்!'' என்று முடித்தார் டாக்டர் ருமனோவ்.
(அண்மையில் நடந்த ஐரோப்பியப் பட விழாவில் பங்கெடுத்துக் கொண்ட SOMETHING MORE
ABOUT LOVE (2010) என்ற பல்கேரியத்
திரைப்படத்தின் கதை இது. படத்தின் இயக்குநர்: மெகதலினா ரால்செவா)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூா் அருகே வாகன தணிக்கையில் 24 தங்க நாணயங்கள் பறிமுதல்

இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் வேளாண் கல்லூரி மாணவா்கள்

அரசுப் பேருந்து ஓட்டுநா் கைது

கனமழை: மக்காச்சோள பயிா்கள் சேதம்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

