சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சீவாரா

சீவாரா சார் என்கிற சீனிவாச ராகவனை அன்று மாலை நான் கோவிலின் அருகில் சந்தித்தேன். கையில் குடையுடன் நின்று கொண்டிருந்த அவர் சற்றுக் கலவரப்பட்டாற்போல் காணப்பட்டார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 3:59 pm IST

சீவாரா சார் என்கிற சீனிவாச ராகவனை அன்று மாலை நான் கோவிலின் அருகில் சந்தித்தேன். கையில் குடையுடன் நின்று கொண்டிருந்த அவர் சற்றுக் கலவரப்பட்டாற்போல் காணப்பட்டார். நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கத் தயாராயிருப்பதுபோல் தெரியவில்லை. சற்று மந்தமாக விழித்தார். சீவாரா சார் மேல் எனக்கு எப்போதுமே ஒரு மரியாதை உண்டு. காரணங்கள் மூன்று. ஒன்று அவர் என் அப்பாவின் நண்பர். இரண்டு என் உடன் பிறப்புகளின் திருமணங்களுக்குப் பண உதவி செய்திருக்கிறார். மூன்றாவது முக்கிய காரணம் அவர் பெண் கோமளா (கோமி - என்று செல்லமாக நான் அழைப்பேன். நான் மட்டும்தான். எனக்கு அவள் மேல் ஓர் அலாதிப் பிரியம் உண்டு)

சீவாராவை நான் கோவிலின் அருகில் சந்தித்த பின் நாங்கள் சங்க கால இலக்கியக் கட்டம் முதல் சமச்சீர் கல்வித் திட்டம் வரை உரையாடிக் கொண்டே நடக்க ஆரம்பித்தோம். கோவில் மதிலை ஒட்டிய ஆள் நடமாட்டமில்லாத ஒரு தெருவில் நடந்தபோது, சீவாரா அதிசயமான காரியம் ஒன்றைச் செய்தார். என்னுடன் நடந்து கொண்டே வந்தவர் திடீரென்று சற்று அவசரமாகச் சென்று முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு வழுக்கைத் தலை மனிதரை தன் குடையின் வளைவான கைப்பிடியால் நடு மண்டையில் நச்சென்று ஒரே போடாக போட்டுவிட்டார். சற்றும் இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத அந்த மனிதர், கரகாட்டம் ஆடுபவன்போல் சற்று அசெüகரியமாக ஆடிவிட்டு "த்ரே' என்று வினோதமான ஒலி எழுப்பிக் கொண்டு தடாலென்று கீழே விழுந்துவிட்டார். இந்தத் தாக்குதலின் காரணத்தை கண்டிப்பாக அவர் உணர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. நான் அதிர்ந்து போய் நின்றுவிட்டேன். சீவாரா குடையைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு விசுக்விசுக் என்று நடந்து வீட்டுக்குப் போய்விட்டார். கீழே விழுந்த மனிதர் மெள்ள எழுந்து என்னை விரோதமாகப் பார்த்துக் கொண்டே பலமாக தாக்க முற்பட்டபோதுதான் நான் உணர்வு வரப்பெற்று ஓடத் துவங்கினேன். அவரைத் தாக்கியது நான்தான் என்று அவர் நினைத்திருப்பதில் வியப்பேயில்லை. என்னைத் தாறுமாறாகத் திட்டிக் கொண்டே துரத்தி வந்தார். கோவிலின் பின்புறம் உள்ள மதிற்சுவரை ஒட்டிய தெரு என்பதால் ஜனநடமாட்டம் இல்லை என்பது அன்று எனக்கு நேர்ந்த ஓர் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். நான் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தலைதெறிக்க நாலுகால் பாய்ச்சலில் ஓடி கடைத்தெரு கூட்டத்தில் கலந்து விட்டேன். இரைக்க இரைக்க ஓடிவந்த வழுக்கைத் தலை மனிதர் திருதிருவென்று விழித்துக் கொண்டு கடைத்தெரு கூட்டத்தில் என்னைத் தேட ஆரம்பித்தார். அடிக்கடி தன் நடுத்தலையைக் கைகளால் தடவிக் கொண்டே அங்கிருந்து அவர் அகன்ற பின்தான் எனக்கு மீண்டும் உயிர் வந்தது.

நான் சில சில்லறை வேலைகளை கடைத்தெருவில் முடித்துவிட்டு அவசர அவசரமாக சீவாரா சார் வீட்டை அடைந்தபோது, இரவு மணி எட்டு. சீவாரா ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு வேகமாக ஆடிக் கொண்டே விசிறிக் கொண்டிருந்தார்.

""என்ன மாமா இப்படி செய்துட்டேள்?'' என்றேன்.

""என்னடா செஞ்சேன்?'' என்று சீவாரா எதுவும் நடக்காதது போல் கேட்டவுடன் எனக்கு ஆத்திரமாக வந்தது.

""என்ன செஞ்சேன்னா கேக்கிறேள்'' என்று சொல்லிவிட்டு அங்குவந்த மாமியிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறி முடித்தேன். இதைக் கேட்டவுடன் மாமி வெலவெலத்துப் போய்விட்டாள்.

""ஐயையோ இதென்னடா கிரகசாரம். நான் என்ன பண்ணுவேன்? அவர் ஆபிசிலிருந்து வந்ததிலிருந்தே ஒரு மாதிரியாகத் தான் இருக்கார். நானும் கவனிச்சிண்டுதான் இருக்கேன். ஏன்னா என்னாச்சு உங்களுக்கு?''

""பேசாம உள்ள போடி. இந்த அரை வேக்காடு சொல்றான்னு நீயும் கேக்க வந்துட்டியா? ஆமாம் அடிச்சேன். இப்ப என்ன? பெருமாள் அடிக்கச் சொல்லி என்னிடம் சொன்னார். செஞ்சேன். சாமி காரியம். தவறினா தெய்வ குத்தம்''

""ஐய்யோ கண்ணா... என்னமோ ஆயிடுத்துடா இவருக்கு. சட்டுனு டாக்டரை அழைச்சுண்டு வாடா''

இதற்குள் கோமளா அங்கு வர அவளிடம் மாமி ஒரு குரல் அழுது தீர்த்தாள். நான் முந்திக் கொண்டேன்.

""மாமி அழாதீங்கோ. நான் உடனே டாக்டரை அழைச்சிண்டு வரேன். கவலையை விடுங்கோ''

""பெருமாளே... இதென்ன சோதனை. நான் என்ன குத்தம் பண்ணினேன். தெரியலையே''

""மாமி பெருமாள்தான் நாமத்தால இழுத்து கண்ணை மூடிண்டிருக்காரே. நன்னா கண்ணைத் திறந்திண்டிருக்கிற தாயாரைப் பாத்து வேண்டிக்குங்கோ''

ஜோக் அடித்த பெருமையுடன் கோமளாவைப் பார்த்தேன். கோமளா, ""ஜோக் சகிக்கலை. சிரிப்பே வல்லே'' என்றாள். ""வெவ்வெவ்வே'' என்று அழகு வேறு காட்டினாள்.

சீவாராவை டாக்டர் க்ளீனிக்குக்கு அழைத்துப் போக நான் செய்த ஏற்பாடுகள் யாவும் ரகளையில் முடிந்தன. பின்பு நான் சீவாராவின் குடும்ப டாக்டர் சலபதி ராவைக் கையோடு அழைத்து வருவதாகச் சொல்லி புறப்பட்டேன். கோமளா வாசலில் கவலையுடன் நின்று கொண்டிருந்தாள்.

""கோமி டோண்ட் வொர்ரி...ஐ வில் டேக் கேர் ஆஃப் யுவர் ஃபாதர்'' ஆங்கிலப் புலமையை அள்ளி வீசினேன்.

""நாட் நெசஸரி''

""நான்தான் கோமி உனக்கு ஹீரோ''

""இல்லை''

""பின்னே?''

""யாரோ''

""கோமி அப்படியெல்லாம் பேசாதே. என்னைவிட அழகான புருஷன் உனக்குக் கிடைப்பானா?''

""கிடைச்சாச்சு''

""யாரு?'' அதிர்ந்தேன் நான்.

""ஆஞ்சநேயர்''

டாக்டர் சலபதிராவ் க்ளீனிக்கை மூடிவிட்டுப் புறப்படும்போது மணி பத்தைத் தாண்டி விட்டது. நானும் டாக்டர் ராவும் சீவாராவின் வீட்டை அடைந்தபோது அவர் நெற்றியில் பெரிதாக நாமம் போட்டுக் கொண்டு சோபாவில் அமர்ந்து பெரிய்ய குரலில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருந்தார். மாமி அரக்க பரக்க ஓடிவந்து, ""வாங்கோ, டாக்டர் இத பாருங்கோ. அவருக்கு என்னமோ ஆயிடுத்து. கழிப்பை மிதிச்சுட்டாரோ என்னவோ தெரியலை. பாருங்கோ வேளை கெட்ட வேளையிலே ஸ்தோத்தரம் எல்லாம் சொல்லிண்டு. எனக்கு கவலையாயிருக்கு டாக்டர்''

""கொஞ்சம் பொறுமையாயிருங்கோ. நான் பாக்கறேன். என்ன மிஸ்டர் சீனிவாசராகவன். எப்படி இருக்கீங்க?''

""வாங்க டாக்டர்... என்ன சமாச்சாரம்? பூஜை வேளையில் கரடி பூந்த மாதிரி''

""ஓஹோ அப்படி ஒண்ணு இருக்கோ. இப்ப பூஜை வேளையுமில்லே. நான் கரடியுமில்லே, ஸ்வாமி. அதுசரி நான் உங்களைச் செக்கப் பண்ணனுமே''

""எதுக்கு? ஐ ஆம் ஆல்ரைட். செளக்கியமா இருக்கேன்''

""நீங்க செüக்கியமா இருக்கீங்க. ஆனா மத்தவங்க யாரும் உங்களால செüக்கியமா இல்லை.''

""அப்ப அவங்களுக்குப் பாருங்க வைத்தியம் . இத பாருங்க டாக்டர் உங்களை எதுக்கு இந்த அரைவேக்காடு அழைச்சுண்டு வந்திருக்கான்னு எனக்குத் தெரியும். டாக்டர் என் பேச்சிலே எதுவும் முரண்பாடு கிடையாது. பெருமாள் கோவிலிலே தரிசனம் முடிச்சிண்டு வெளியே வந்தபோது பகவான் சொல்லித்தான் இந்தக் காரியம் பண்ணினேன். என்னை நீங்க பைத்தியம்னு சொன்னா அந்தப் பெருமாளும் பைத்தியம்''

இதற்குள் டாக்டர் அவரைப் பரிசோதனை செய்தார். பின்பு, ""சரி... உங்களுக்கு ஒரு ஊசி போடறேன். நிம்மதியா தூங்குங்க. போகிறபோது அந்த பெருமாள்கிட்ட உங்களுக்கு ஊசி போட்டதைச் சொல்லிட்டுப் போறேன்''

""ஆல் ரைட் அதைச் செய்யுங்க முதலில்''என்று சீவாரா தனது இடது புஜத்தைக் காட்டி சமர்த்தாக ஊசி போட்டுக் கொண்டார். பின்பு அவரைப் படுக்க வைத்துவிட்டு, என்னையும் மாமியையும் கூப்பிட்டு, ""மிஸ்டர் கண்ணன் ஒண்ணும் கவலைப்படாதீங்கோ... நார்மலாகத்தான் இருக்கார். காலையிலே எழுந்து லண்டனுக்கெல்லாம் ஒழுங்கா போயிண்டு இருக்காரோல்லியோ. அதாம்பா கொல்லைப் பக்கம். இன்னும் விளக்கமாகச் சொல்லணுமா? '' விட்டால் செய்து காட்டுவார் போலத் தெரிந்தது.

நான் அவசரமாக, "" வேண்டாம் வேண்டாம். புரிஞ்சு போச்சு. இந்த விஷயத்தை அவரிடம் தான் கேக்கணும் டாக்டர்''

""அட கரெக்டா சொல்லிட்டியே. கெட்டிக்காரன்பா நீ. சரி அவருக்கு ஒண்ணும் பெரிசா ஆயிடலை. மனதளவில் ரொம்ப கொதிப்படைஞ்சிருக்கார். அவ்வளவுதான். ஒரு தூக்க மருந்து கொடுத்திருக்கிறேன். காலையில் தெளிஞ்சிடுவார். ஏதோ ஆபிஸிலே எக்ஸ்ட்ரீம் டென்ஷன் போலிருக்கு. அவரை எதுக்கும் தொந்தரவு பண்ணாதீங்கோ. நன்னா ரெஸ்ட் எடுக்கட்டும்''

""பால் கூட சாப்பிடலை, டாக்டர்'' என்றாள் மாமி.

""பரவாயில்லை. என்னிடம் கொடுங்கோ. நான் சாப்பிடறேன்'' என்று மாமியின் கையிலிருந்த பாலை வாங்கி ஒரே மடக்கில் குடித்தார் டாக்டர்.

""நேத்து பாரு கண்ணா... நம்ம ஊரு ஆரிய பவனில் காபி சாப்பிட்டேன். சுத்தமா சூடே இல்லை. சர்வரிடம் என்னய்யா காபியிலே சூடே இல்லைன்னு கேக்கறேன். அவன் பாரு நீங்க வந்திருக்கறது "ஆறிய' பவனுக்கு சார் ''

அப்படிங்கறான். இதெப்படி இருக்கு? ஹஹ்... ஹா'' என்று சிரித்துக் கொண்டே புறப்பட்டார்.

மறுநாள் சீவாராவுக்கு லீவு லெட்டர் கொடுப்பதற்காக அவருடைய அலுவலகத்துக்குச் சென்றேன். சீவாராவின் மேலதிகாரியின் சர்க்கரை கார்டை மாற்றிக் கொடுத்ததுபோன்ற சிறு சிறு உதவிகள் செய்ததன் மூலம் அவருக்கு என்மேல் கொஞ்சம் விசுவாசம் உண்டு. நான் அவரைச் சந்தித்தபோது அவர் சில போட்டோ பிரதிகளை கையில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார். நான் லீவு லெட்டரைக் கொடுத்தேன்.

""அக்கவுண்டென்ட் சீனிவாசராகவன்தானே? என்னாச்சு அவருக்கு?''

""கொஞ்சம் உடம்பு சரியில்லை, சார்'' என்றேன்.

""அடப் பாவமே... கொஞ்ச நஞ்சமா வேலை செஞ்சிருக்கார் அவர். கடந்த ஒரு மாசமா எங்க ஆபீசிலே ஆடிட்டிங். போட்டுக் குடைஞ்சு எடுத்துட்டான். மூச்சுவிட நேரமில்லை. எனக்குக் கூட ஒரு கட்டத்திலே வெறுப்பாயிடுச்சு. போங்கடா நீங்களுமாச்சு உங்க கணக்கு வழக்குமாச்சுன்னு காலாற நடந்து வெளியிலே போயிட்டேன். ஆனா சீனிவாச ராகவன் இயந்திரம் கணக்கா வேலை செஞ்சிருக்கார். அதுவும் அந்த சீஃப் அக்கெüண்ட்ஸ் ஆபிசர் ஒருத்தர். அடேயப்பா அவரிடம் மாட்டிண்டு ராகவன் ரொம்ப கஷ்டப்பட்டார். இதோ பாருங்க கண்ணா ஆடிட் பார்ட்டி வழியனுப்பு விழா. புகைப்படங்கள். இதோ நடுவிலே வழுக்கைத் தலையா மாலை போட்டுண்டு உட்கார்ந்திருக்காரே அவர்தான் அந்த சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆபிசர்'' என்று போட்டோவை என்னிடம் காண்பித்தார்.

நான் அதிர்ச்சியடைந்தேன். சீவாரா ஏன் நேற்று அந்த வழுக்கைத் தலை மனிதரை அப்படித் தாக்கினார் என்பது புரிந்தது. அடிபட்ட வழுக்கைத் தலை மனிதரின் சாயல், புகைப்படத்திலிருந்த சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆபீசரிடம் அழுத்தமாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.