சரியாக உச்சரிக்கப் பழக வேண்டும்!
வரலாற்று நாடகம் என்றதுமே பிரம்மாண்டமான செட்களும், வண்ணங்களைக் காட்சிக்குப் பொருத்தமாகப் பீச்சியடிக்கிற ஒளி வெள்ளமும், காதுகளில் அதிர்கிற ஒலி அமைப்புகளும்


வரலாற்று நாடகம் என்றதுமே பிரம்மாண்டமான செட்களும், வண்ணங்களைக் காட்சிக்குப் பொருத்தமாகப் பீச்சியடிக்கிற ஒளி வெள்ளமும், காதுகளில் அதிர்கிற ஒலி அமைப்புகளும் இருக்கும் என்றுதான் நினைப்பார்கள்.
இப்படி எந்த பந்தாக்களும் இன்றி, வீதி நாடக வடிவில் அண்மையில் தமிழகத்தின் பல நகரங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது "வஞ்சியர் காண்டம்' நாடகம்.
இந்நாடகத்தை எழுதியிருப்பவர் சென்னைக் கலைக் குழுவைச் சேர்ந்த பிரளயன். அவரிடம் பேசினோம்.
""தஞ்சாவூரில் கடந்த ஆண்டு அக்டோபர் 28 - நவம்பர் 27 வரை ஒரு மாத காலமாக ஓர் உண்டு உறைவிட நாடகப் பயிலரங்கம் நடந்தது. தேசிய நாடகப் பள்ளியும், தென்னகப் பண்பாட்டு மையமும் இந்தப் பயிலரங்கை நடத்தின. இந்தப் பயிலரங்கில் பங்கேற்றவர்கள் வழங்கியதுதான் இந்த வஞ்சியர் காண்டம்.
நான் இந்தப் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத்துறையின் தலைவர், பேராசிரியர் ராஜு இந்த நாடகத்தை இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கெனவே இந்திராபார்த்தசாரதியின் "நந்தன் கதை', "ஒüரங்கசீப்', "கொங்கைத் தீ' போன்ற நாடகங்களை இயக்கியவர்.
வஞ்சியர் காண்டம் நாடகம், சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியான வஞ்சிக் காண்டத்தில் சொல்லப்படும் ஒரு காட்சியில் இருந்து தொடங்குகிறது. சேரன் செங்குட்டுவன் வடக்கில் உள்ள மன்னர்களை வென்று கல் எடுத்துக் கொண்டு வந்து குடவாயில் கோட்டத்தில் கண்ணகிக்குச் சிலை வைக்கிறான். அதற்கு விழா நடத்துகிறான். அந்த விழாவுக்கு கண்ணகி உயிரோடு இருந்தபோது பழகிய செவிலித்தாய் காவற்பெண்டு, கண்ணகியின் தோழி தேவந்தி, கண்ணகிக்கு மதுரையில் அடைக்கலம் தந்த மாதரியின் மகள் ஐயை ஆகியோர் வருகின்றனர்.
அங்கே சிலையாக தெய்வ வடிவில் நிற்கும் கண்ணகியை அவர்கள் பார்க்கின்றனர். ஆனால் அவர்களோடு பழகிய கண்ணகியோ வேறு ஒருத்தி. இங்கே தெய்வமாக நிற்பவளோ வேறு ஒருத்தி. இந்த வேறுபாடு அவர்களைத் திகைக்க வைக்கிறது. இதுவே "வஞ்சியர் காண்டம்' நாடகத்தின் அடிப்படை. அவர்கள் தாங்கள் பார்த்த கண்ணகியை நினைவு கூர்வதுதான் நாடகம்.
எதற்கு இந்த ஆயிரம் ஆண்டு பழைய கருப்பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும்? என்று கேட்பார்கள். கடந்த காலத்தில் நாம் எப்படி இருந்தோம்? என்பதைத் தெரிந்து கொள்ள இந்த நாடகம் உதவும். அதுமட்டுமல்ல, கடந்த கால மதிப்பீடுகள் இப்போது எப்படி சுமையாக மாறுகின்றன என்பதையும் இந்நாடகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நாடகத்தில் பங்கேற்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஆராய்ச்சி மாணவர்கள். இந்த நாடகத்தை சென்னை, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிபேட்டை போன்ற பல ஊர்களில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த நாடகத்தை உருவாக்கும்போது எங்கள் முன் எதிர்ப்பட்ட சிக்கல், தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும்முறைதான். தமிழ்நாட்டில் முறையாக, சரியாகத் தமிழ் பேசத் தெரியாமல் தமிழர்கள் இருக்கும் அவலநிலையை நாங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நடைமுறையில் உள்ள பேச்சுத் தமிழைப் பேசும்போது தமிழ்ச் சொற்களின் உச்சரிப்பில் சிக்கல் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் கொஞ்சம் காப்பியத் தமிழில் நாடகத்தில் பேசும்போது சரியாக சொற்களை உச்சரிக்க முடியாமல் திணறித்தான் போகிறார்கள். தமிழ்ச் சொற்களைச் சரியாக உச்சரிக்க, ஓர் அகராதி தயாரிக்க வேண்டியதன் தேவையை நாங்கள் உணர்ந்தோம்'' என்கிறார் பிரளயன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...