புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சர்ச்சைகளின் நாயகி!

உலகப் புகழ் பெற்ற பெங்குயின் பதிப்பகத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதுபோன்று

News image
Updated On :6 ஜூலை 2013, 10:07 am

ந. ஜீவா

உலகப் புகழ் பெற்ற பெங்குயின் பதிப்பகத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதுபோன்று பொருளாதாரத்துறையில் நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னையும் எல்லாருக்கும் தெரியும். இவரின் மகள் நந்தனா சென் நடிகை. அதுமட்டுமல்ல, சமூக ஆர்வலர். தொடர் சர்ச்சைகளின் நாயகி.

தற்போது அமர்த்தியா சென்னின் மருமகனாகிவிட்டார், பெங்குயின் பதிப்பகத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ஜான் மேகின்சன். அவருக்கு வயதோ 57.

அமெரிக்காவில் நியூயார்க்கில் குடும்பத்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சென்ற மாதம்  மிக மிக ரகசியமாக நடந்தது ஜான் - நந்தனா சென்னின் திருமணம்.

நந்தனா சென் என்றாலே பரபரப்புதான். அவர் நடித்த திரைப்படங்கள் வெளிவந்ததுமே பரபரப்பு தொற்றிக் கொள்வதைப் போலவே, இந்தத் திருமணச் செய்தியும் பரபரப்பைப் பற்ற வைத்துவிட்டது.

நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே நந்தனா சென் எதிர்ப்புகளைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டார். "டேங்கோ சார்லி' என்ற இந்திப் படத்தில் நடித்தபோது பலத்த சர்ச்சை, அந்தப் படத்தில் நந்தனா சென் ஆடையின்றிப் பின்புறத்தைக் காட்டிவிட்டார் என்று.

அதாவது பரவாயில்லை.

அதற்குப் பிறகு, நந்தனா சென் நடித்த "ரங்க் ரசியா' இந்திப் படம் 2008 இல் எடுக்கப்பட்டது. அப்போது எழுந்த பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி நான்காண்டுகள் கழித்துத்தான் அந்தப் படம் திரையிடப்பட்டது. பரவலான எதிர்ப்பையும், பரபரப்பையும் வெளி உலகிலும், ஒரு கமுக்கமான ஆர்வத்தை பலரின் மன உலகிலும் அந்தப் படம் ஏற்படுத்தியது.

17 வது கல்கத்தா திரைப்பட விழாவில் "ரங்க் ரசியா' சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்ட போதும் கடுமையான எதிர்ப்பு.

அப்படியென்ன அந்தப் படத்தில்?

இத்தனைக்கும், புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவிவர்மாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது அந்தப் படம்.

ராஜா ரவிவர்மா பெண்களின் நிர்வாண ஓவியங்களை வரைவது போல காட்சி. அந்தக் காட்சியில் ஆடையின்றிப் போஸ் கொடுத்தார் நந்தனா. எதிர்ப்புக்குக் காரணம் அதுதான்.

எப்படி நிர்வாணமாக நடிக்கலாம்? என்று எல்லாரும் குரலை உயர்த்திக் கத்திக் கொண்டிருந்தார்கள்.

அப்போது நந்தனா சென் சொன்னார்: ""நிர்வாணத்தை இரண்டு விதங்களில் காட்டலாம். ஒன்று, பெண்ணை வெறும் உடலாக, போகப் பொருளாகக் கவர்ச்சிக்காகக் காட்டுவது. மற்றொன்று நிர்வாணத்தைப் பெண்மையின் ஆற்றலைக் கொண்டாடும்விதமாகக் காட்டுவது. நிர்வாணத்தை மரியாதைக்குரியதாகக் காட்டுவது தவறல்ல''

நந்தனா சென் இப்படிப் பேசியது பலருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கதைக்குத் தேவையானதாக ஆபாசமில்லாமல் நிர்வாணத்தைக் காட்டுவது தவறல்ல என்ற கருத்து நந்தனாவுக்கு இருந்ததில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

ஏனென்றால் நந்தனா (1967 இல்) பிறந்தது  கொல்கத்தாவில் என்றாலும் வளர்ந்தது எல்லாம் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் உள்ள நகரங்களில்தான்.

புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் இலக்கியம் படித்திருக்கிறார். நாடகக் கலையைப் பற்றியும் படித்திருக்கிறார்.

ஏதோ பொழுதுபோக்குத் திரைப்படங்களில் நடிக்கும் நடிகை என்று நந்தனா  சென்னை நினைத்துவிடாதீர்கள்.  சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட "THE WAR WITHIN' மத அடிப்படைவாதத்துக்கு எதிரான "RANG RASIYA', போருக்கு எதிரான திரைப்படமான "TANGO CHARLIE' என்பது போன்ற சமூக அக்கறையுள்ள திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, குழந்தைகளின் உரிமைக்காகப் போராடுபவரும் கூட. குறிப்பாக பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர். உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு சர்வதேசப் பட விழாக்களில் நந்தனா சென் ஜூரியாக இருந்திருக்கிறார்.

இப்போது ஜான் மேகின்சன்னுடனான அவருடைய திருமணமும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்கும் காரணம் இருக்கிறது.

சென்ற ஆண்டு வரை - சுமார் 9 ஆண்டு காலம் - மும்பையைச் சேர்ந்த படத் தயாரிப்பாளர் மது மன்டேனாவுடன் மிக மிக நெருங்கி,  பழகி வந்தார் நந்தனா சென். அவரைத்தான் திருமணம் செய்து கொள்வார் என்று பலரும் நினைத்தார்கள்.

""நான் நியூயார்க்கில் போய் வாழப் போகிறேன். மது மும்பையில் இருக்கிறார். அவருடைய திரைப்பட வேலைகளை விட்டுவிட்டு அவர் என்னுடன் நியூயார்க்கில் குடிபெயர்வது சாத்தியமல்ல. நீண்ட தொலைவில் நல்ல நண்பர்களாக மட்டுமே நாங்கள் இருக்க முடியும்'' என்று சொல்லிவிட்டு மது மன்டேனாவுக்கு "டாடா' காட்டிச் சென்றவர்தான்.

பின்னர் அவர், ஜான் மெகின்சனைச் சந்தித்துப் பழக ஆரம்பித்தார்.

ஓர் ஆண்டுக்குள் ரகசியத் திருமணத்தில் வந்து முடிந்தது.

பலரது புருவச் சுழிப்புகளுக்கிடையில் ஒருவர் இந்தத் திருமணத்தை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார். வாழ்த்தும் தெரிவித்து இருக்கிறார்:

""நந்தனா சென் - ஜான் மெகின்சன் திருமணச் செய்தி என்னை மகிழ்ச்சிக் கடலில் தள்ளிவிட்டுவிட்டது. கல்யாணத்துக்குப் போக முடியாமல் போனதில் எனக்கு ரொம்ப ரொம்ப வருத்தம். மும்பையில் நடக்கும் படப்பிடிப்புகளை ஒத்தி வைத்துவிட்டுப் போக முடியவில்லை'' என்கிறார் மது மன்டேனா. நந்தனா சென்னின் "நண்பர்'.

நல்ல மனம் வாழ்க!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.