பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தமிழ் கற்றுக் கொள்ளாதது வருத்தமாக இருக்கிறது!

ஸ்ரீ கிருஷ்ண கான சபாவின் செயலர் பிரபுவின் அறையில் நிகழ்ச்சி நேரத்துக்கு முன்னதாகவே கிரீஷ் கர்னாட் வந்துவிட்டார்.  அறுபதுகளில் அவர் சென்னையில்

News image
Updated On :20 ஏப்ரல் 2014, 4:21 am

சாருகேசி

நாடக சூடாமணி கிரீஷ் கர்னாட்
தலைப்பைப் பார்த்ததும் புருவம் உயர்த்துபவர்கள் சென்னை சபா நாடக வட்டத்தில் நிறையப் பேர் இருக்கலாம்.  "தமிழ்நாட்டிலேயே இன்னும் எத்தனை பேருக்கு நாடக சூடாமணி விருது கொடுக்க வேண்டியது இருக்கிறது.  அப்படி இருக்கையில், கர்நாடகத்தைச் சேர்ந்த கிரீஷ் கர்னாடுக்கு அந்த விருதை அளிப்பது எந்த வகையில் நியாயம்?' என்று அவர்கள் கேள்வியும் எழுப்பக்கூடும்.  ஆனால் இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக உயர்தரமான நாடகப்பணியை எடுத்துக்கொண்டால், கிரீஷின் நாடகத்துறைத் தொண்டை அங்கீகரித்து, இப்போதாவது ஓர் அமைப்பு நாடக சூடாமணி விருதை அளிக்க முன்வந்ததே என்று பரந்த மனத்துடன் பாராட்ட வேண்டும்.

 ஸ்ரீ கிருஷ்ண கான சபாவின் செயலர் பிரபுவின் அறையில் நிகழ்ச்சி நேரத்துக்கு முன்னதாகவே கிரீஷ் கர்னாட் வந்துவிட்டார்.  அறுபதுகளில் அவர் சென்னையில் "மெட்ராஸ் பிளேயர்ஸ்' என்ற ஆங்கில நாடகக் குழுவில் சேர்ந்து நடித்தபோது உடனிருந்த விசாலம் ஏகாம்பரம் கூடவே அமர்ந்திருந்தார்.

 கிரீஷுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, ""நீங்கள் சென்ற ஆண்டு கலாúக்ஷத்ராவுக்கு வந்திருந்த போது உங்களைத் தூரத்திலிருந்து பார்த்தேன்.  அதற்குப் பிறகு இப்போதுதான் உங்களை அருகில் பார்க்க முடிகிறது'' என்றதும், மிருதுவாகச் சித்தார் கிரீஷ் கர்னாட்.

 ""அப்போது நான் சத்யஜித் ராயின் பதேர் பஞ்சலி திரைப்படத்தை அங்கே காண்பித்த போது, அதைப் பற்றியும், சத்யஜித் ராய் பற்றியும் பேச வந்திருந்தேன்''. 

""அது அற்புதமான சொற்பொழிவு.  சத்யஜித் ராயின் ரசிகர்களை எல்லாம் மகிழவைத்த பேச்சு'' என்றதும், ""நன்றி'' என்றார் கிரீஷ் கர்னாட்.

""உங்கள் ஹிந்தித் திரைப்படம் ஸ்வாமி (ஹேமா மாலினியின் தாயார் தயாரித்தது) பார்த்திருக்கிறேன்.   கடைசியாகச் சென்ற வருடம் வெளியான "ஏக் தா டைகர்' பார்த்தேன்.  வெகு இயற்கையாக நடித்திருந்தீர்கள்"" என்றதும், மறுபடி அவருடைய டிரேட் மார்க் புன்னகையைப் பார்க்க முடிந்தது.

""சினிமாவில் தீவிரமாக இறங்கிவிட்டீர்களா என்ன?  நாடகங்கள் ஒன்றையும் காணோமே?'' என்று கேள்வி எழுப்பியதுமே, பளிச்சென்று மறுக்கத் தொடங்கினார் கிரீஷ்.

""இல்லை, இல்லை.  இனி திரைப்படம் சுத்தமாக இல்லை.  தியேட்டரை நான் விட்டுவிடவில்லை.  (தியேட்டர் என்று அவர் குறிப்பிடுவது நம்முடைய மேடை நாடகம்.)  எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஸ்க்ரிப்ட்டுகள் எழுதுவதும் நாடகப் பணிதானே?  அதைத் தொடர்ந்து செய்யலாம் என்றிருக்கிறேன்'' என்றார்.

""உங்கள் "ஹயவதனா', "துக்ளக்', "யயாதி' எல்லாம் தியேட்டர் வட்டாரத்தில் மட்டுமல்லாது, இலக்கிய உலகிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது நினைவு வருகிறது''

""அவை எல்லாம் எனக்கும் என் குழுவுக்கும் பெயரை வாங்கித் தந்த நாடகங்கள்'' என்றார் கிரீஷ் கர்னாட்.

கிரீஷ் கர்னாட் சென்னையில் விழா ஒன்றில் பங்கு

கொள்வது இது முதல் முறை அல்ல.  ஏற்கெனவே, 1988இல், பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்திக்கு  "நிருத்ய சூடாமணி' விருதை வழங்க ஸ்ரீ கிருஷ்ண கான சபா ஏற்பாடு செய்திருந்த விழாவுக்கு வந்திருக்கிறார் கிரீஷ்.

""ஆமாம்.  அப்போது நான் சங்கீத நாடக அகடமியின் தலைவராக இருந்தேன்.  சபா செயலர் யக்ஞராமன் என்னை அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க அழைத்திருந்தார்.  அதனால் வந்தேன்''

ஆனால் அப்போது கிரீஷ் கர்னாட் பரதநாட்டியத்தின் தேவதாசி கால கட்டம் மர்மம் சூழ்ந்ததாக இருக்கிறது என்று குறிப்பிடப் போக, பின்னர் அது ஒரு சிறிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.  ""ஆனால் அதற்குப் பிறகு நாட்டியத்துறையில் தேர்ந்த ஆருத்ரா ஒரு கட்டுரையை விளக்கமாக சுருதி இதழில் எழுதியிருந்தார்.  இந்த சபாவுக்கு இத்தனை வருடம் கழித்து வரும்போது அந்த சர்ச்சை மீண்டும் நினைவுக்கு வருகிறது'' என்றார் கிரீஷ்.  

ஆங்கில மேடை நாடகங்களுக்கு ஒரு புதிய வடிவத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் கிரீஷ் கர்னாட் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஷேக்ஸ்பியர் போன்றவர்களின் சம்பிரதாயமான மேடை நாடகங்களே வலம் வந்துகொண்டிருந்த கால கட்டத்தில், நம் சரித்திரம், நம் கலாசாரம், நம் நாட்டின் ஒட்டுமொத்தமான, கட்டுக்கோப்பான பின்னணி இவற்றைத் தம் நாடகங்கள் மூலம் வெளிக் கொண்டு வந்தவர் கிரீஷ் கர்னாட்.  ஆங்கில வசன உச்சரிப்புகூட இந்தியர்கள் இயல்பாகப் பேசும் ஆங்கில உச்சரிப்பாகத்தான் இருக்கும்.  அதில் ஓர் இந்திய நாடக முத்திரை ஆழமாகப் பதிந்திருக்கும்.  அதைத்தான் மக்கள் வரவேற்றார்கள்.  அதுவே மெட்ராஸ் பிளேயர்ஸின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகவும் இருந்தது. 

""கிரீஷ் கர்னாடின் "ஹயவ்தனா' நாடகத்தை நான் கல்லூரியில் படிக்கிற போது பார்த்து மலைத்துப் போயிருக்கிறேன்.  அந்த பிரமிப்பு இன்னும் நீங்கவில்லை'' என்றார் பரத நாட்டியக் கலைஞர் அலர்மேல் வள்ளி.

தார்வார் பகுதியைச் சேர்ந்த கிரீஷ் கர்னாட் படிக்கிற காலத்திலேயே படு சுட்டி.  இல்லையென்றால் ரோட்ஸ் ஸ்காலர்ஷிப் பெற்று ஆக்ஸ்போர்ட் சென்று படிக்க முடியுமா என்ன?

ஆக்ஸ்போர்டிலிருந்து இங்கே சென்னை வந்தவர், ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி பிரஸ்ஸிலும் அதிகாரியாக வேலை பார்த்திருக்கிறார்.  இலக்கியம் அவர் மூச்சோடு கலந்திருப்பதால், அவர் படைப்புகள் எல்லாம் இலக்கியத் தரத்தோடு அமைந்திருந்தன.  சாகித்திய அகாதமி விருது முன்னால் கிடைத்தது என்றால், நாட்டின் மிக உயரிய விருதான பாரதிய ஞானபீட விருது அதைத் தொடர்ந்து வந்தது.   நாடகங்களுக்குப் படைப்பிலக்கிய அந்தஸ்து கிடைப்பது அரிதாக இருக்கிற சூழலில், கர்னாடுக்கு அவருடைய ஒட்டுமொத்த சாதனையில் நாடகத்தின் தாக்கம் முக்கியமாக இருந்தது  குறிப்பிடத்தக்கது.

""நாடகங்கள் என்றால் மேற்கத்திய மேடை நாடகங்களையே எதிர்பார்த்துக்கொண்டிருந்த எங்களைப் போன்றவர்களுக்கு, கிரீஷ் கர்னாட் தியேட்டருக்கு வந்த பிறகு நம் முழுமையான கலாசாரப் பின்னணியை நினைவூட்டி, கலைஞர்களுக்கு ஓர் ஊக்கம் அளித்தார்''என்கிறார் அலர்மேல் வள்ளி.

கிரீஷ் கர்னாட் ஏழு வருடங்கள் சென்னையில் இருந்தாராம்.  ""ஆனால் நான் தமிழ் கற்றுக்கொள்ளாதது எனக்கு இப்போது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது'' என்று ஒப்புக்கொண்டார்.

விருது வழங்கு முன், ரஜினி உட்பட பலர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் கிரீஷ் கர்னாட் நடித்திருந்த சிறப்பான பகுதிகளைத் தொகுத்து ஒரு குறும்படமாகக் காண்பித்தார் மோகன் ராமன்.  அதில் "குணா' திரைப்படத்தில் அவர் கமலுடன் நடத்தும் உரையாடல் இடம் பெற்றிருந்தது.  (கமலின் உணர்ச்சிமயமான நடிப்புடன் கர்னாடின் இயற்கையான நடிப்பையும், காமிரா அந்தக் காட்சியைச் சுற்றிச் சுற்றிப் படம் பிடித்த விதத்தையும் மோகன் ராமன் காட்சி முடிந்ததும் குறிப்பிட்டார்.)

அவருடைய வாழ்க்கை வரலாற்றைக் கன்னடத்தில் எழுதியிருக்கிறார்.  விருது வழங்கப்பட்ட விழா மேடையில் எல்லோரும் அவருக்கு விடுத்த வேண்டுகோள், உங்கள் சுயசரிதையைத் தயவு செய்து தமிழில் வெளியிடுங்கள்.  அது பலருக்கும் பயன்படும் என்பதுதான்.

நாவலாசிரியர் யு.ஆர். அனந்தமூர்த்தி எழுதிய "சம்ஸ்காரா' என்ற நாவலை பட்டாபி ராம ரெட்டி கன்னடத் திரைப்படமாக எடுத்தபோது அதில் முதன் முதலாக நடிக்க வந்தார் கிரீஷ் கர்னாட்.  மூட நம்பிக்கைகள் நிறையவே இருக்கும் திரைப்படத் துறையில், "சம்ஸ்காரா' என்ற ஈமச்சடங்கு பற்றிய படத்திலிருந்து தம் திரைப்பட வாழ்க்கையைத் துவங்கியவர் கிரீஷ் கர்னாட்.  ""இதுவே ஒரு துணிச்சலான காரியம்'' என்கிறார் மோகன் ராமன்.

கிரீஷ் கர்னாடின் கலைத்துறை சேவையை அங்கீகரிக்கிற மாதிரி  "பத்மபூஷண்' விருது, மத்திய பிரதேச அரசின் "காளிதாஸ் சம்மான்' விருதும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.  டாக்டர் பட்டம் எத்தனை என்பதுகூட  நினைவில்லை என்று கூறும் கிரீஷ், ""எல்லாவற்றையும்விட முக்கியமான விருது, யுனெஸ்கோ உலக தியேட்டரின் தூதர் என்ற பட்டமும் அங்கீகாரமும்தான்'' என்கிறார்.  

ஆனால் ஸ்ரீகிருஷ்ண கான சபா நாடக சூடாமணி விருதை வழங்க முன் வந்தபோது, தம்முடைய வழக்கமான எளிமையோடு அதை ஏற்க முன்வந்ததுதான் கிரீஷ் கர்னாடின் சிறப்பு.

இந்திய மேடை நாடகங்களில்  மாற்றத்தைக் கொண்டுவந்த ஒரு மிகச் சிறந்த நாடக மேதையை சென்னை சபா ஒன்று நினைவுகூர்ந்து, அவரை இங்கே வரவழைத்து விருது கொடுத்தது நம் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.  அதில் கலந்துகொண்டு அவரைப் பாராட்ட, தமிழ் மேடை நாடகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட வராமல் போனதுதான் ஒரு குறை.

படங்கள் :  யோகா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.