சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆண்டாள் என் சகோதரி மாதிரி...

யதார்த்தப் படைப்புகளின் மூலம் வாசகரிடையே ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் மூத்த எழுத்தாளர் பூமணி, சென்ற மாத இறுதியில்

News image
Updated On :13 ஜூலை 2014, 2:27 am

சாருகேசி

யதார்த்தப் படைப்புகளின் மூலம் வாசகரிடையே ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் மூத்த எழுத்தாளர் பூமணி, சென்ற மாத இறுதியில் தமிழ் புத்தக நண்பர்கள் என்ற ஓர் இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவருடைய "பிறகு' முதலான ஐந்து நாவல்கள் அடங்கிய தொகுதியை பேராசிரியர் கே.பாரதி விமர்சனம் செய்தார். வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்குத் தம் மனத்திலிருந்து நேரிடையாக வெளிப்பட்ட பதில்களைக் கூறினார் பூமணி.

நீங்கள் காசுக்காக எழுதுகிறீர்களா? ஆத்ம திருப்திக்காக எழுதுகிறீர்களா? அல்லது இலக்கிய வளர்ச்சிக்காக எழுதுகிறீர்களா?

நிச்சயம் காசுக்காக எழுதவில்லை.  காசுக்காக எழுத வேண்டும் என்றால் நான் எதற்காகச் சிற்றிதழ்களில் எழுதிக்கொண்டிருக்க வேண்டும். ஆத்ம திருப்திக்காக என்றால், நான் எழுதியதை நானே எழுதி வைத்துக்கொண்டு படித்துப் பார்த்துக்கொள்ளலாமே!  நான் எழுதுவது இலக்கிய வளர்ச்சிக்காக ஒரு செங்கல்லையாவது எடுத்து வைக்க வேண்டும் என்பதுதான். 

உங்கள் அடுத்த படைப்பு?

ஆண்டாள் பற்றி எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். ஆண்டாள் எனக்கு ஒரு சகோதரி மாதிரி தெரிகிறார். ஆண்டாளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அம்பை, திரெüபதி தொட்டு ஆண்டாள் வரை ஓர் ஓலம் நமக்குக் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

அந்த ஓலத்தைத்தான் எழுதப் போகிறேன்.

பூமணி, இதற்காக மகாபாரதம், பகவத் கீதை, ஆழ்வார்கள் சரித்திரம், திருப்பாவை, நாச்சியார்மொழி எல்லாம் படித்து முடித்து, ஏராளமான குறிப்புகள் சேகரித்து வைத்திருக்கிறார். இதற்கே சுமார் ஒரு வருடம் ஆகியிருக்கிறதாம். இன்னும் இரண்டு வருட உழைப்பு மீதி இருக்கிறது என்கிறார். தந்தை -மகளுக்கு இடையே இருந்த அந்தப் பாசத்தை அலாதியானதாக பூமணி கருதுகிறார். ஆண்டாள் நாவலாக உருவாவதன் பின்னணி இந்த நூலிழைதான்.

நேரே பார்க்கும்போது மெலிதாக நகைச்சுவையுடன் பேசுகிறீர்கள். ஆனால் உங்கள் படைப்புகளில் நகைச்சுவை பளிச்சென்று தெரியவில்லையே?

அடித்தளத்தில் நகைச்சுவை இழையோடிக்கொண்டிருக்கும்.  நகைச்சுவை இல்லாமல் எழுத்து இருக்க முடியாது. நீங்கள் புரிந்துகொண்டு படித்தால் உங்களுக்கே தெரியும்.

உங்களுக்கு அதிகமாகப் பிடித்தது சிறுகதைகளா, நாவல்களா?

சிறுகதைகளில் ஏனோ எனக்கு அதிக விருப்பம் இல்லை.  சின்னச் சின்ன வரிகளில் நாவல் எழுதத்தான் விரும்புகிறேன்.

உங்கள் நாவல்களில் மரணம் அடிக்கடி வருகிறது. ஏன் அதிகமாக மரணம் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள்?

மரணம் பற்றிச் சிந்திக்காமல் எழுதவே முடியாது. அது என்னை எப்போதும் பாதித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் அது என் எழுத்திலும் தெரிகிறது.

உங்கள் எழுத்தின் லட்சியம் என்ன?

ஆராய்ந்து எழுத வேண்டும். சிந்தித்து எழுத வேண்டும் என்று நினைக்கிறவன் நான். ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்டால், என்னைச் செம்மைப்

படுத்திக் கொள்ளவே எழுதுகிறேன் என்பேன். உடம்பு மட்டும் ஒத்துழைத்தால் இன்னும் நிறையவே எழுத முடியும்.  எழுதும்போது நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. "பிறகு' நாவலுக்காக நான் பட்ட பாட்டை, ஒரு கட்டுரையாகவே எழுதி வைத்திருக்கிறேன்.

பூமணியின் பேச்சு நிதானமாக இருக்கிறது. மிருதுவாக இருக்கிறது. அவர் அதிர்ந்து பேசுவதில்லை. ஆனால் அவர் சொற்களின் ஆழமும் அழுத்தமும் வாசகரை யோசிக்க வைக்கின்றன. அதுதான் அவர் எழுத்தின் வெற்றி எனத் தோன்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.