திரையிடக் கூட அரங்குகள் கிடைக்கவில்லை!
திரைப்படப் பாடலாசியர் ஒருவரின் வாழ்க்கையை இப்படி ஊனும் சதையுமாக வேறு யாரும் எடுத்துப் பார்த்ததில்லை. சாரோன் இதற்காக


திரைப்படப் பாடலாசியர் ஒருவரின் வாழ்க்கையை இப்படி ஊனும் சதையுமாக வேறு யாரும் எடுத்துப் பார்த்ததில்லை. சாரோன் இதற்காக அலைந்த அலைச்சல், உழைத்த உழைப்பு எல்லாம்தான் இந்த ஆவணப்படத்தின் உயிர் நாடி. அதனால்தான் "தேடலும், ஆக்கமும்' என்று தன் பெயருக்கு முன் தைரியமாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
சாரோன் சென்னை லயோலா கல்லூயில் விஸ்காம் பேராசிரியராக இருந்து அதை ஒதுக்கி வைத்துவிட்டு, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற மானுடனின் வாழ்க்கையை, நூற்றைம்பது நிமிடக் குறும்படமாக உருவாக்கியிருக்கிறார்.
படத்தைத் திரையிடக் கூட முதலில் அரங்குகள் ஏதும் கிடைக்கவில்லையாம். ஆனால் அது கிடைக்கும் வரை சாரோன் ஓயவில்லை என்பது தெரிந்தது.
குறும்படம் முழுவதையும் பார்க்க இரண்டரை மணி நேரம் தேவை என்பதால், இரண்டு மணி, ஒன்றரை மணிக்குள் அடங்குகிற மாதி எடிட் செய்து வைக்கவும் சாரோன் திட்டம் வைத்திருக்கிறார்.
கிராமத்துப் பாட்டு, பட்டணத்துப் பாட்டு என்று எதிலும் தன் தடத்தைப் பதித்த பட்டுக்கோட்டையாரின் குணம், பண்பாடு பற்றி ஆவணப்படத்தில் ஒழுங்கான பதிவுகளைத் தந்திருக்கிறார் சாரோன். ஆர். நல்லகண்ணுவின் நேரடி அனுபவமும், மாயாண்டி பாரதியின் யதார்த்தமான அனுபவமும் அவர்களிடமிருந்து கிடைக்கும்போது, சாரோனின் படைப்பு தனிக் கவனம் பெற்றுவிடுகிறது. தனி கனமும் பெறுகிறது.
பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் தான் அறிந்த பட்டுக்கோட்டையாரைப் பற்றிச் சொல்லும்போது அவருடைய தாக்கம் எத்தனை அழுத்தமாக இருந்திருக்கிறது என்பது புரிகிறது. நீண்ட காலம் வாழ்ந்து நீண்ட பெரும் படையல்களை அளித்த கவிஞர் வரிசையில் பட்டுக்கோட்டை நிற்கவில்லை. அவர் படைப்பு அளவைவிட, தரம் உயர்ந்தது. அகல உழுவதிலும் ஆழ உழுதார் என்று ப. ஜீவானந்தம் கூறியிருப்பது கவிஞருக்குக் கிடைத்த நெகிழ்வான பாராட்டு.
செங்கபடுத்தான்காடு கிராமத்தில் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பார்க்காத தொழில்கள் இல்லை. வயலில் உழுவது, மேய்ச்சலுக்கு மாடு கொண்டு போவது, சந்தைக்கு வண்டி ஓட்டிக்கொண்டு போவது என்று தொடங்கியவர், ஆரம்பத்தில் பாட்டு எழுதவே தயாராக இல்லையாம். நடிக்கத்தான் வந்திருக்கிறார்.
பிறகு அவர் ஒரு நாடகத்தில் எழுதிய பாடல் ஒரு சந்தர்ப்பத்தில் கைகொடுக்கவே, பாடல் எழுத முற்படுகிறார். வார்த்தைகளின் வீச்சும், வீரியமும் அவர் பாடல்களையும் அவரையும் உச்சாணி உயரத்துக்குக் கொண்டு சென்றன என்பது சரித்திரம்.
திரைப்படத் துறையினர் அவருக்கு கார் அனுப்பிக் காத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வீட்டு வாசலில் மூன்று நான்கு கார்கள் காத்திருக்கின்றன.
என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எதுவென்று எனக்குத் தெரியாது. நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்றாலும், அதைச் சொல்லும்போது பட்டுக்கோட்டையார் உயிரோடு இல்லை.
இந்த ஆவணப்படத்தின் முதுகெலும்பு ஓவியர் கே. என். ராமச்சந்திரன் என்றால் அது துளியும் மிகையல்ல. கல்யாணசுந்தரத்தின் துணைவியார் ஈரமான விழிகளைத் துடைத்தபடி கணவரை நினைவுகூரும் இடங்கள் நெகிழ்ச்சியானவை. இப்போது நம்மிடையே இல்லாத, இருபத்தொன்பது வருடங்களே வாழ்ந்த ஒரு கிராமத்துக் கவிஞன், சென்னைக்கு வந்து திரைப்பட உலகத்தை ஆக்கிரமித்ததை, நாம் நம்பும்படியாகத் திரையில் சொல்லப்பட்டிருப்பதற்கு சாரோனின் அர்ப்பணிப்பும் மற்றொரு காரணம்.
இந்த ஆவணப்படத் தயாரிப்பு அனுபவங்களைச் சாரோனிடம் கேட்டோம்:
எத்தனை வருடங்களாக உங்கள் தேடலும், ஆக்கமும், சாரோன்?
ஏழு வருடங்களாக. பாரதியைவிடப் பத்து வயது குறைவாகவே வாழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவர் பிறந்த செங்கபடுத்தான்காடு கிராமத்துக்கே சென்றேன். அங்கிருந்து அவர் வாழ்க்கையைப் படமாக்கினேன்.
அவர் உயிரோடு இல்லாத காலத்தில் அவர் குறித்த ஆவணப்படம் தயாரிப்பது என்பது பெரிய சவாலாக இருந்திருக்குமே?
அப்படித்தான் இருந்தது. ஆனால் அவருடன் அந்த கிராமத்திலேயே பிறந்து வளர்ந்து, அவருடன் நெருங்கிப் பழகிய பிரபல ஓவியர் கே.என். ராமச்சந்திரன் அந்தக் குறையைத் தீர்த்து வைத்தார்.
படத்தில் அவர் இல்லை என்றால் நீங்கள் கதையை நகர்த்தியே இருக்க முடியாது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அவரை எப்படித் தேடிப் பிடித்தீர்கள்?
அவர் பெங்களூருவில் தற்போது இருக்கிறார் என்று அறிந்து அங்கே சென்றேன். அவர் சம்மதிக்கவே, படம் முழுக்க அவர் சொல்லும் வழியிலும் செல்லும் வழியிலுமாகப் படத்தின் வடிவத்தை அமைத்தேன். அவர் கடைசியில் படத்தைப் பார்த்த பின் குலுங்கிக் குலுங்கி அழுதார். அவர் அந்த அளவுக்கு உணர்ச்சிபூர்வமாக அவரோடு பிணைந்திருந்தார்.
அவர் படங்களை எல்லாம் பின்னணியில் வண்ண மயமாக வெகு கெட்டிக்காரத்தனமாக உபயோகித்திருக்கிறீர்கள். அவை குறும்படத்துக்கு ஜீவன் போல இருக்கின்றன. கே.மாதவன், ஆர். நடராஜன் பாணியில் அற்புதமாக வரைந்திருக்கிறார்.
படத்தைத் தயாரிக்க என்னென்ன சிரமப்பட்டீர்கள்? என்னென்ன சவால்களைச் சந்தித்தீர்கள்?
சிரமங்கள் நிறையப் பட்டேன். சம்பந்தப்பட்டவர்களிடம் முன் கூட்டியே கேட்டுவிட்டு, நேரம் குறித்துக் கொண்டு போவேன். அவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள். ""இன்னிக்கு வேற வேல இருக்கு.நாளை வாங்க, நாளன்னிக்கு மதியம் வாங்க''ன்னு சொல்லுவாங்க. காமிராவோடு போனவன் வெறுங்கையாத் திரும்பி வருவேன். வேற வகையான அனுபவமும் உண்டு. ""டாகுமென்டரி பண்ணி சம்பாதிக்கப் போறீங்க. எங்களுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீங்க?'' ன்னு நேரடியாகக் கேட்டவங்களும் உண்டு.
எவ்வளவு செலவாச்சு, சாரோன்?
அது நிறையவே ஆச்சு. லட்சக்கணக்கா ஆச்சு. ஆனா கடன் பட்டாலும், ஒரு பாட்டாளிக் கவிஞனின் வாழ்க்கையைப் படமாக்கின மகிழ்ச்சி. மன நிறைவா இருக்குது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...