பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வாய்ப்பில்லாதவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!

நாகப்பட்டினம் மாவட்டத்தின் காரைமேடு கிராமத்தில், ஆடு மாடுகளின் ஓசையோடு, அவ்வப்போது ஆங்கில நர்சரிப் பாடல்களையும் நீங்கள்

News image
Updated On :9 மார்ச் 2014, 7:53 am

சாருகேசி

நாகப்பட்டினம் மாவட்டத்தின் காரைமேடு கிராமத்தில், ஆடு மாடுகளின் ஓசையோடு, அவ்வப்போது ஆங்கில நர்சரிப் பாடல்களையும் நீங்கள் கேட்டுத் திகைக்கலாம்.   இயற்கையைப் புகழ்ந்து பாடும் இருபது குழந்தைகளின் குரல்தான் அது.  எட்டுக்குப் பன்னிரண்டு அடி அறையில் சிமெண்ட் தரையில், கீற்றுக் கொட்டகையின் கீழ் அமைந்திருக்கும் அறையில் மகிழ்ச்சியாகப் பாட்டோடு சேர்த்துக் கதையும் சொல்லும் கனிமொழி, பூமி உருண்டையாக இருக்கிறது என்பதைக் காண்பிக்க, நின்ற இடத்திலிருந்தே ஒரு சுற்றுச் சுற்றிக் காண்பிக்கிறார்.  கனிமொழிதான் நான்காம் வகுப்புக்கும் ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஆங்கிலம், தமிழ் மற்றும் கணிதம் கற்றுக் கொடுக்கிறார்.  பக்கத்திலுள்ள பஞ்சாயத்து மெட்ரிகுலேஷன் பள்ளியில், தினசரி இரண்டு மணி நேரம் வகுப்புகள் எடுக்கிறார். இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பது "வித்யாரம்பம்' என்கிற அமைப்பு.

வித்யாரம்பம் தோன்றக் காரணமே, பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் பயில்வது கடினமாக இருந்ததை ஒருவர் நேரடியாக உணர்ந்ததால்தான். அவர்தான் வி. ரங்கநாதன்.  லார்சன் அன்ட் ட்யூப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, பின்னர் வளைகுடா நாடொன்றில் கொஞ்ச காலம் வேலை பார்த்துவிட்டு, சம்பாதித்தது போதும், இனி தாய் நாட்டுக்குத் திரும்புவோம் என்று இந்தியாவுக்கு வந்தவர் அவர்.

அது 2002 இன் கோடைக்காலம்.  அவர் கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டை கிராமத்தில் ஓய்வு கால வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்கலாம் என்ற தீர்மானத்தோடுதான் வந்தார்.  கிராமத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது நாலு நல்ல விஷயம் கற்றுக் கொடுப்போம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார். அப்புறம்தான் அவருக்குத் தெரிந்தது - குழந்தைகளுக்குக் கொஞ்சமாவது கணக்கோ, தமிழோ, ஆங்கிலமோ  தெரியவில்லை என்பது. அவருக்கு அதிர்ச்சி.

படிப்பைப் பாதியில் நிறுத்திவிடுவதற்கும் ஆங்கிலப் படிப்பில் குழந்தைகள் பலவீனமாக இருப்பதே காரணம் என்பதையும்,  அதை மட்டும் குழந்தைகள் சமாளிக்க முடிந்துவிட்டால், உயர்கல்விப் படிப்பை அவர்கள் எளிதாக முடித்துவிட முடியும் என்று எண்ணிய ரங்கநாதன், தமக்குத் தெரிந்த ஆசியர்களை அணுகினார்.

கற்பது கடினமாகத் தெரியாமல், விளையாட்டாக இருந்துவிட்டால் குழந்தைகள் படிப்பில் அக்கறை காட்டுவார்கள் என்று கருதினார். எட்டாவது தேறிய மாணவிகளை அழைத்துப் பயிற்சி கொடுத்தார்.  அவர்கள்தான் ஆசிரியைகள்.  குழந்தைகள் அவர்களை "அக்கா' என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.  அவர்கள் குழந்தைகளுடன் பழகும் முறை, கற்பிக்கும் முறை எல்லாம் அவர்களிடம் மாற்றத்தை உண்டாக்கின. இப்படித்தான் வித்யாரம்பம் வித்தியாசமான கல்விக்கு வித்திட்டது. 

தமிழ் நாட்டின் 5000 கிராமங்களில் சத்தமில்லாமல் ஒரு சாதனைக்கு வித்திட்டுள்ளது வித்யாரம்பம்.  கிட்டத்தட்ட ஏழு லட்சம் குழந்தைகளின் கல்வி கற்கும் முறையையே மாற்றிவிட்டது. அந்தக் குழந்தைகள் அத்தனை பேரும் முதல் தலைமுறை மாணவிகள். படித்து சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவர்களுக்குள் விதைத்துள்ளது இந்த அமைப்பு.

""வீட்டுக்கே வந்து கதவைத் தட்டிக் கூப்பிட்டுக் கொடுத்த வாய்ப்புங்க இது..  இது கிடைத்திருக்காக்காவிட்டால், நாங்கள் ஒரு வேலையும் செய்யாமல், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்திருப்போம்'' என்று சொல்கிறார்கள் பவித்ராவும், கனிமொழியும். கிராமப்புறங்களில் இன்னமும் ஆசிரியர்களை மதிக்கிறார்கள்.

""நான் கலெக்டர் ஆபீசில் ஒரு கூட்டத்துக்குப் போகிறேன் என்றதும், என் அப்பா என்னைப் பெருமையுடன் பார்க்கிறார்'' என்கிறார், கார்த்திகா. இருபது வயதில், 2005இல் வித்யாரம்பத்தில் ஆசிரியையாகச் சேர்ந்தவர் கார்த்திகா.  பி.எஸ்.சி. கணித மாணவியான அவர், படிப்படியாக வளர்ந்து ஆய்வாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகி, இப்போது வித்யாரம்பத்தில் மூத்த பயிற்சியாளர்.   அவர் பி.எட். முடித்ததும், அவருக்கு நிதி உதவியும், சுதந்திரமான பணி நேரமும் கொடுத்துப் பாராட்டியது வித்யாரம்பம்.  நான்கே வருடத்தில், அதாவது 2009இல் அவர் வித்யாரம்பத்தின் ரோடரி மாடல் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆகிவிட்டார்.   சுனாமி வந்து தாக்கிய நாகப்பட்டினம் கடற்கரையை ஒட்டிய மீனவர் குடும்பங்களின் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதே முக்கியப்பணி. 

""எனக்கு என் கிராமத்துக்கு வெளியே ஒரு பிடிப்பை உண்டாக்கியது இந்த அமைப்புதான்'' என்கிறார் கார்த்திகா. கார்த்திகா சீர்காழியில் ஒரு பால்காரரின் மகள் .  அவரைப் போன்ற பயிற்சி பெற்ற பதினாறு ஆசிரியைகளுடன் அவர் தங்கியிருக்கிறார்.  இருபத்து நான்கு வயது சத்யாவின் கதையும் இதே மாதிரிதான். மயிலாடுதுறையிலுள்ள ஒரு விவசாயியின் குடும்பத்தில் மூன்று பெண்களில் மூத்தவர் இவர்.  அவர்தான் இங்கே துணைத் தலைமை ஆசிரியை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.