ஜுவாலா கட்டாவின் வேதனை!

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, ஆந்திராவின்  கிராந்தி  கட்டா    என்பவருக்கும்,  சீனாவைச்  சேர்ந்த  எலான்  என்ற  பெண்மணிக்கும்  1983 செப்டம்பர் 7ல் பிறந்தவர்.
ஜுவாலா கட்டாவின் வேதனை!
Updated on
2 min read

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, ஆந்திராவின்  கிராந்தி  கட்டா    என்பவருக்கும்,  சீனாவைச்  சேர்ந்த  எலான்  என்ற  பெண்மணிக்கும்  1983 செப்டம்பர் 7ல் பிறந்தவர்.

ஜுவாலா 10 வயதில் ஆரிஃப் என்ற பிரபல  பேட்மிண்டன் பயிற்சியாளரிடம் பயிற்சி தொடங்கி அவரின் சிறப்பான பயிற்சியால் "மினி நேஷனல் சாம்பியன்' பட்டத்தை தனது 13வது வயதில் வென்றார்.

தனது 17வது வயதில் "நேஷனல் ஜூனியர் சாம்பியன்' பட்டத்தை வென்ற ஜுவாலா, அதே ஆண்டு  இரட்டையர் போட்டியில் சுருதி குர்ரைனுடன் இணைந்து விளையாடி "நேஷனல் சீனியர் சாம்பியன்' பட்டம் வென்றார்.

2010இல்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாருதீனும் ஜுவாலா கட்டாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகத் தகவல்கள் தீயாய்ப்  பரவின.

""அசாரும் நானும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்திதான்.  அசாரும் நானும் நல்ல நண்பர்கள். இதுபோன்ற வதந்திகள் என்னுடைய குடும்பத்தில் அமைதியைக் குலைக்கின்றன. பேட்மிண்டன் சம்மேளனத்துக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் அசாருதீன் போட்டியிட முயன்றார். அவருக்கு நான் ஆதரவு அளித்தேன். அசார் போட்டியிடுவது சம்மேளனத்தில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் எனக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கி உள்ளனர்'' என்ற  விளக்கம்  ஜுவாலாவிடமிருந்து  வந்தது. அது  போலவே, அசாருதீனும் மறுத்து  வதந்திக்கு  முற்றுப்  புள்ளி  வைத்தார்.

2013}ஆம்  ஆண்டு ஆகஸ்டில் நடந்த இந்திய பேட்மிண்டன் லீக் போட்டிகளில் பெங்களூர் அணியில் கடைசி நிமிடத்தில் மாற்றம் செய்து புதிய வீரரைக் களமிறக்கியதை எதிர்த்து டெல்லி அணியினர் போர்க்கொடி தூக்கினர்.

இந்த சர்ச்சையின் பின்னணியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஜுவாலா கட்டா இருப்பதாகக் குற்றம்  சாட்டப்பட்டது, அவருடைய விளையாட்டு வாழ்க்கையையே இடியாப்பச்  சிக்கலுக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஜுவாலா கட்டாவுக்கு ஆயுட்கால தடை விதிக்க சிபாரிசு செய்தது.

இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்தின் சங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து ஜுவாலா டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் விசாரணை முடியும் வரை ஜுவாலா கட்டா விளையாட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

 ""போட்டியில் வெற்றி பெற்றாலும், ரசிகர்கள் என்னையும், எனது உடல் அழகையும் படு கவர்ச்சியாக...  மோசமாக..  விமர்சிக்கின்றனர். இது எனக்கு வேதனையைத்  தருகிறது'' என்கிறார்  ஜுவாலா.

அண்மையில், ஜுவாலா கட்டாவுக்கும், சாய்னா நெஹ்வாலுக்கும் இடையே டிவிட்டரில் போர் வெடித்தது. சிறிது நாளில் போர் நிறுத்தமும் ஏற்பட்டது.

இந்திய பேட்மிண்டன் சங்கம் சார்பில் முதலாவது இந்திய பேட்மிண்டன் லீக்  தொடர் சமீபத்தில்  நடந்தது.  இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

போட்டிக்கு   முன்னோட்டமாக, வீரர், வீராங்கனைகள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்பட்டார்கள்.   இந்தியாவின் சாய்னா நெஹ்வால், காஷ்யப், ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா, சிந்து உள்ளிட்டோருக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டது.

சாய்னா அதிகபட்சமாக ரூ. 71 லட்சத்திற்கு ஐதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், காமன்வெல்த் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற ஜுவாலா, அஷ்வினியை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.

ஏனென்றால், இத்தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டம் இல்லை. இதையடுத்து இவர்களது அடிப்படை ஏலத் தொகையை ரூ. 30 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சமாக நிர்வாகிகள் குறைத்தனர்.

பின்னர் டெல்லி அணிக்காக ஜுவாலா கட்டா ரூ. 18 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். புனே அணிக்காக அஷ்வினி பொன்னப்பா ரூ. 15 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

""மற்றவர்களோடு ஒப்பிடுகையில் இத்தொகை மிகவும் குறைவு. இந்திய பேட்மிண்டன் லீக் ஏலத்தில் எங்களுக்கு குறைந்த தொகை நிர்ணயித்தது பெரும் துரோகம்..'' என்று   ஜுவாலா கட்டா, வருத்தப்பட, அஷ்வினி பொன்னப்பாவும்,  ஜுவாலா வருத்தப்படுவதில்  அர்த்தம்  உள்ளது  என்று  ஆமோதித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com