ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பாதம் மற்றும் கைகளில் மதமதப்பு..!

காலினுடைய அடிப்பகுதியிலிருந்து நீரை மேலிழுத்துக்கொண்டு போகும் செயலை வியானன் என்ற வாயு இதயத்திலிருந்து இரத்தத்தைக் கீழ்நோக்கிச் செலுத்தி அதை வெற்றிகரமாக செய்து முடிப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இதய துர்பலத்தாலும்,
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பாதம் மற்றும் கைகளில் மதமதப்பு..!
Updated on
2 min read

எனக்கு வயது 35. தைராய்டு உபாதை உள்ளது. தற்போது பாதத்தின் அடியிலும், உள்ளங்கையிலும் மதமதப்பு உள்ளது. காலை கீழே வைக்கும்பொழுது உள்ளே நீர் இருப்பதுபோல் இருக்கிறது. லேசான வீக்கம் காலின் அடிப்பகுதியில் உள்ளது.  இவை குணமாக வழி என்ன?

சாலை செம்மலர், மெய்வழிச்சாலை - அன்னவாசல்.

காலினுடைய அடிப்பகுதியிலிருந்து நீரை மேலிழுத்துக்கொண்டு போகும் செயலை வியானன் என்ற வாயு இதயத்திலிருந்து இரத்தத்தைக் கீழ்நோக்கிச் செலுத்தி அதை வெற்றிகரமாக செய்து முடிப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இதய துர்பலத்தாலும், இரத்தக்குழாய்களின் உள்ளே அமைந்துள்ள வால்வு பகுதிகள் தொய்வடைவதாலும், நீரானது காலிலிருந்து இழுத்துச் செல்லப்பட முடியாததாகையால் தங்களுக்கு இந்த உபாதை ஏற்பட்டிருக்கக் கூடும். உடலெங்கும் விரைவாக சஞ்சரிக்கக் கூடிய வியான வாயுவின் செயல்பாடு இரத்தத்திலுள்ள அணுக்களின் மேம்பாடு போன்றவை சீராகும்பட்சத்தில் தங்களுக்கு நல்லதொரு நிவாரணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மருதம் பட்டை, புஷ்கரமூலம், ஓரிலை வேர், நெருஞ்சில் விதை, குடம்புளி போன்ற மருந்துகள் இதய துர்பலத்தை நன்கு நீக்கக் கூடியவை. இவை வகைக்கு ஐந்து கிராம் வீதமெடுத்து சுமார் 500 மில்லி லிட்டர் தண்ணீரில் காய்ச்சி 125 மில்லி லிட்டராக காய்ச்சி வடிகட்டி காலையில் 60 மில்லி லிட்டரும் மாலையில் 65 மில்லி லிட்டராகவும் வெறும் வயிற்றில் சாப்பிட, இதயத்தைச் சார்ந்த நாளங்களின் செயல்பாடானது மேம்படுவதுடன் வியானன் வாயுவின் செயல்திறன் நன்கு கூடுவதால் காலிலுள்ள வீக்கமானது வடிவதற்கான ஒரு சிறந்த மருத்துவ சிகிச்சையாக உதவிடக்கூடும். இஞ்சிச் சாறும், வெல்லமும் கலந்து தயாரிக்கக் கூடிய ஒரு லேகியத் தயாரிப்பு முறையினாலும் வீக்கம் வடிவதுடன் மனதின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. சுமார் 15 மில்லி லிட்டர் இஞ்சிச்சாறுடன் 5 கிராம் வெல்லம் கலந்து லேசாகச் சூடாக்கி கரைத்து காலை மாலை இருவேளைச் சாப்பிடுவதால் வீக்கம் வடிய வாய்ப்பிருக்கிறது.

பாதம் மற்றும் கைகளிலுள்ள மதமதப்பானது முதுகுத் தண்டுவடத்தின் நரம்பு கூட்டத்தின் அழுத்தத்தின் மூலமாக ஏற்பட்டிருக்கலாம். அதற்குத் தேவையான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்தால் அது பற்றிய விபரம் நன்கு தெரிய வரலாம்.

உணவில் புளித்த தயிர், வெண்ணெய், நெய், எண்ணெய், தேங்காய், பால், இனிப்பு, புலால் உணவு போன்றவை அறவே நீக்கப்படவேண்டும். சாதாரண நீர் பருகுவதற்குப் பதில் சுக்கு தட்டிப் போட்ட வெந்நீர் அருந்துவது நல்லது. 15 கிராம் சுக்கு, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி அரை லிட்டராகக் குறுக்கி வடிகட்டி ஒருநாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருக, தங்களுக்கு ஏற்பட்டுள்ள பல உபாதைகளுக்கும் ஒரு நிவாரணமாக அமையலாம்.

ஆயுர்வேத மூலிகை மருந்தாகிய ப்ருஹத்யாதி கஷாயம், புனர்நவாதி கஷாயம், கோகிலாக்ஷம் கஷாயம், பலா புனர்நவாதி கஷாயம், அர்த்தபில்வம் கஷாயம் போன்றவற்றை மருந்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வந்தால் வீக்கம் மற்றும் மதமதப்பு போன்றவை குறைய உதவியாக இருக்கும். நல்ல பசி உள்ளவராக இருந்தால் தசமூலஹரீதகி எனும் லேகிய மருந்து காலை இரவு உணவிற்கு முன் பத்து கிராம் வீதம் சாப்பிட்டு வரலாம். உணவிற்குப் பிறகு புனர்நவாசவம், குமார்யசவம், லோஹாசவம் போன்ற மருந்துகளை அருந்தலாம். இரத்தத்தில் அணுக்கள் குறைவாக இருக்கும்பட்சத்தில் உடலில் நீரேற்றம் காணப்படும். அணுக்களின் வளர்ச்சியானது மேற்குறிப்பிட்ட மருந்துகளின் மூலமாகவும் நீங்கள் சம்பாதித்துக் கொள்ளலாம். லோஹபஸ்மம், அன்னபேதி சிந்தூரம், ஸ்வர்ணபஸ்மம் போன்ற தரமான மருந்துகளும் மருத்துவரின் மேற்பார்வையில் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டுச் சாப்பிடுவதாலும் இரத்த அணுக்கள் மேம்பட்டு குணம் பெற வாய்ப்பிருக்கிறது.

தைராய்டு உபாதையாலும் தங்களுக்கு இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டிருக்கலாம். தைராய்டு மாத்திரையைச் சாப்பிடுபவராக இருந்தால் அதை நிறுத்தாது சாப்பிட்டு வருவதே உசிதம். அதனுடைய கட்டுப்பாடானது தங்களுக்கு மிகவும் தேவை. உடல் பருத்துப்போகுதல், நீர் கட்டுதல், தோல் சுருங்குதல், கண் விழிபிதுங்குதல், உடலின் வளர்ச்சியானது மந்தப்படுதல் போன்ற உபாதைகளை அதனுடைய கட்டுப்பாடற்ற தன்மை ஏற்படுத்திவிடுமென்பதால் அதில் அதிகம் கவனம் செலுத்தப்படவேண்டும். மேற்குறிப்பிட்ட ஆயுர்வேத மருந்துகளே தங்களுக்கு இவ்விஷயத்திலும் உதவிடக்கூடும்.

(தொடரும்)

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com