

குளிர்காலத்தில் காற்றின் ஈரப்பதத்தின் மூலம் பரவும் பன்றிக்காய்ச்சல் ஏ1-ச1 என்ற வைரஸ் காரணமாக பரவுவதாக கூறப்படுகிறது. காற்றின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இந்த நோய் பரவுகிறது. சளி, காய்ச்சல் போன்ற சாதாரண பாதிப்புகள் ஏற்பட்டாலும் இறப்புகள் ஏற்படுகின்றன. காற்றின் ஈரப்பதத்தில் இந்த வைரஸ் நோய் வேகமாகப் பரவும். இதை ஆயுர்வேத மருத்துவம் மூலம் எப்படிச் சமாளிக்கலாம்?
பி.சுசித்ரா, சென்னை.
அபிசங்க ஜ்வரம் என்ற ஒரு காய்ச்சல் பற்றிய வர்ணனையில் ஆயுர்வேதம் இதுபோன்ற வைரஸ் காய்ச்சலை எடுத்துக் கூறுகிறது. சரக ஸம்ஹிதை எனும் ஆயுர்வேத நூலில் காமம், சோகம், பயம், கோபம் மற்றும் அணுக்கிருமிகளின் பாதிப்பினால் ஏற்படக்கூடிய காய்ச்சல்களுக்கான அறிகுறிகளும், அந்த அறிகுறிகளுக்கு தக்கவாறு மருந்துகளும் கூறப்பட்டுள்ளன. எத்தனையோ யுகங்களுக்கு முன்னால் கூறப்பட்ட இந்த அணுக்கிருமிகளுக்கான சிகிச்சைமுறைகள் சரியான முறையில் கையாளப்படுமேயானால் பல தொற்று உபாதைகளையும், காய்ச்சலையும் நம்மால் தடுக்க முடியும். நவீன ஆராய்ச்சியாளர்களின் அறிவுரைகளையும், ஆயுர்வேதத்தினுடைய உபதேசங்களையும் சேர்த்து செய்யக் கூடிய சிகிச்சைமுறைகளால் இந்த பன்றிக் காய்ச்சல் எனும் உபாதையிலிருந்து விரைவாக நிவாரணம் பெறலாம், வராமலும் தடுக்கலாம்.
பொது ஒழுக்கத்தில் கூறப்படும் கருத்தான சளி, இருமல், தும்மல் போன்ற பாதிப்புள்ளவர் அவை ஏற்படும் தருணத்தில் கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். சுயமாக மருந்து உட்கொள்வதைத் தவிர்த்து சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் போன்றவை காணப்பட்டால் உடனே மருத்துவரை அணுகி மருந்து சாப்பிடுவதே நல்லது. பிற மாநிலங்களுக்கு அல்லது வெளிநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று தான் எந்த வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிந்து உடனேயே மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.
வில்வாதி குலிகை எனப்படும் ஆயுர்வேத மாத்திரை இதுபோன்ற காய்ச்சலின்போது நன்றாகப் பயன்படும். கருந்துளசியினுடைய சாறெடுத்து அதில் ஒன்றிரண்டு வில்வாதி குலிகைகளை நன்றாக அரைத்து அரைமணிக்கு ஒருமுறை அல்லது ஒருமணிக்கு ஒருமுறை சிறிய அளவில் நக்கிச் சாப்பிட பன்றிக்காய்ச்சலால் ஏற்படும் உபாதைகள் பெருமளவில் குறையக் கூடும். கருந்துளசியையும், மிளகையும் சேர்த்துத் தயாரிக்கப்படும் சீதஜ்வராரி எனும் குலிகைகள் இந்தக் காய்ச்சலுக்குப் பயன்படத்தக்கவை. மூன்று மாத்திரைகள் காலை, மாலை இருவேளை சுமார் ஒருவாரகாலம் தொடர்ந்து சாப்பிடலாம். இதற்கு அனுபானமாக பயன்படுத்தப்படும் தண்ணீரானது, ஒரு சாதாரண வெந்நீராக அல்லாமல் கோரைக்கிழங்கு 10 கிராம், 5 கிராம் சுக்கு ஆகியவற்றை போட்டுக் காய்ச்சிய ஒரு லிட்டர் தண்ணீரை அரை லிட்டராகக் குறுக்கி வடிகட்டி சாப்பிடுவதும் உசிதமே.
முஸ்தா பர்பாடகே ஜ்வரே எனும் ஆயுர்வேத சித்தாந்தத்தை தமிழ் வடிவில் கூறுவதானால், கோரைக்கிழங்கும் பற்பாடகப்புல்லும் எல்லாவகையான காய்ச்சலுக்கும் அருமருந்தாகுமென்பதே. அதனால் இவ்விரண்டு மூலிகைகளையும் வகைக்கு சுமார் 8 கிராம் வீதமெடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி கால் லிட்டர் அதாவது 250 மில்லி லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை பருகி வருவதனால் காய்ச்சலினுடைய பாதிப்பைப் பெருமளவு குறைக்கலாம். சுதர்ஸனம் எனும் சூரண மருந்து மிகவும் கசப்பானது. உடல் உட்புற வைரஸ்களை அழிக்கக் கூடியது. அரை ஸ்பூன் சூரணத்தில் ஒரு ஸ்பூன் (5 மி.லி) தேன் குழைத்து காலை இரவு உணவிற்கு பிறகு சாப்பிடுவதும் உகந்ததே.
உட்புறப் பிசுபிசுப்பை ஏற்படுத்தும் மாவுப் பண்டங்கள், தயிர், நெய், வெண்ணெய், பன்-பட்டர்-ஜாம், உளுந்து சேரக்கூடிய உணவுகள், புலால் உணவு போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை. அதற்கு மாறாக பச்சைப்பயறு, கறுப்புக் கொண்டைக் கடலை, துவரம் பருப்பு, பச்சரிசி போன்றவை சேர்த்துத் தயாரித்த ஆற வைத்த கஞ்சி சிறிது தேனுடன் காலை உணவாக எடுத்துக் கொண்டால் உட்புற கபத்தை காய வைத்து வைரஸ்ஸýக்கும் ஓர் அனுகூலம் அல்லாத நிலையையும் அது ஏற்படுத்தும். உட்புறம் மற்றும் வெளிப்புற உடல் சுகாதாரத்தை மேம்படுத்தக்கூடிய பஞ்சகர்ம எனப்படும் வாந்தி சிகிச்சை, பேதி சிகிச்சை, எனிமா சிகிச்சை, மூக்கில் விடப்படும் சொட்டு மருந்து சிகிச்சை, கெட்ட இரத்தத்தை வெளியேற்றும் சிகிச்சை போன்றவை நம் முன்னோர்களால் சீராகச் செய்யப்பட்டு வந்ததால் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்ற உபாதைகளிலிருந்து தங்களை நன்றாகப் பாதுகாத்துக் கொண்டனர்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.