

கலை, இலக்கியம், ஆன்மீகம், சமூகம், அரசியல், இதழியல், கல்வி, மருத்துவம், பொதுநலப்பணி ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் மூன்றாம் ஞாயிறு அன்று புதுக்கோட்டையில் விழா ஏற்பாடு செய்து பாராட்டி வருபவர் முத்து சீனிவாசன்.
பாராட்டு என்றால் எளிய முறையிலான பாராட்டு இல்லை. இதுவரை 477 பேர்களை, மனம் மகிழ மகிழ மேடையில் பாராட்டி அவர்கள் குறித்த செய்திகளை 14 ஆண்டில் 14 நூல்களாக வெளியிட்டிருப்பதினால் கின்னஸ் சாதனையாளராகவும் இடம் பிடிக்க இருக்கிறார்.
ஆண்டு தோறும் விழா எடுத்து இதுவரை 477 பேரை பாராட்டியிருப்பதற்கு எதாவது அடிப்படை காரணம் இருக்குமே.. என்ற கேள்வியுடன் முத்துசீனிவாசனை சந்தித்தோம்:
பிறரது நல்ல குணங்களை, செயல்பாடுகளைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தை எனது பெற்றோர்கள் என்னுள் வளர்த்து வந்தார்கள். நான் மாநில அரசு பணியில் இருந்த போது, உடன் பணி புரிந்த நண்பர் நூல் ஒன்றினை எழுதி முடித்தார். அந்த நூலை சிறப்பான முறையில் வெளியிடவேண்டும் என்று விரும்பி, அவர் சார்ந்திருந்த தொழிலாளர் அமைப்பின் தலைவரை அணுக அவர் ஏதோ காரணம் சொல்லி மறுத்துவிட்டார். இதை அறிந்ததும் அரசு அலுவலர் கழகத்தின் மாவட்ட தலைவர் என்ற முறையில், கழகத்தின் சார்பில் அந்த நூல் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்தினேன். நூல் தரமாக இருந்ததால், விழாவில் நூலாசிரியரை அனைவரும் புகழ்ந்து பேச அவர் நெகிழ்ந்து போனார் தொடர்ந்து நூல்கள் எழுதவும் ஆரம்பித்தார்.
"உழைத்தவனுக்கு அவன் வியர்வை உலர்ந்து போகுமுன்பு கூலியைக் கொடுத்து விடவேண்டும்' என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார். அதுபோல்தான் பாராட்டும் . யாரையும் உரிய நேரத்தில் பாராட்டிவிடவேண்டும். கூலி கொடுக்கும் போது, கொடுத்த வேலையைச் சரியா செய்து முடித்திருக்கிறாய் எனக்கு திருப்தியப்பா.. என்று சொல்லிப் பாருங்கள் அந்த பாட்டாளியின் முகம் எப்படி மலர்ந்து விரிகிறது என்று.
பாராட்டுவதில் எதற்கு கஞ்சத்தனம் காட்டணும்? பசிக்கிறது என்றால் வாய் விட்டு கேட்கலாம் ... ஆனால் நான் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறேன் .. அதற்காக என்னைப் பாராட்டுங்கள் என்று எப்படி ஒருவர் தானே வலிந்து கேட்பாரா?
வாழுகிற போது பாராட்டப்படுவது என்பது, தான் சமுதாயத்தால் கவனிக்கப்படுகிறோம்; அங்கீகரிக்கப்படுகிறோம் என்கிற சந்தோஷ உணர்வினை ஊட்டுவது மாதிரி ...
பாரத ரத்னா, பத்மவிபூஷன், பத்மஸ்ரீ, கலைமாமணி என்ற பட்டங்களைப் பெறுவதற்கான சாதனைகளை, பங்களிப்பினை எல்லாராலும் செய்யமுடியாது ஆனால் பரந்த மனம், நல்ல உள்ளம் படைத்தவர்கள், திறமைசாலிகள் தங்கள் பங்களிப்பினை சமூகத்திற்கும் நாட்டிற்கும் தங்கள் வழியில் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் இவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்தான். இப்படி நல்ல காரியங்களைச் செய்பவர்களை, யார் தான் பாராட்டுவது .. அதனால்தான், இவர்களை இனம் கண்டு நாங்கள் எளிய முறையில் விழா எடுத்து பாராட்டி வருகிறோம் ...
பாராட்டுப் பெறுவோரின் சிறப்புகளை விழாவில் பொதுமக்கள் முன்னிலையில் புகழ்ந்து பேசுகிற பேச்சும், கருத்துகளும் வாழ்த்து கவிதைகளும் காற்றோடு போய்விடும். பாராட்டப்பட்டவர்களின் சிறப்புகள் கால ஓட்டத்தில் மறக்கப்படலாம் ... அதைத் தவிர்க்க, பாராட்டப்படும் சாதனையாளர்களின் வரலாறு, சாதனைகள் பதிவு செய்யப்பட்டு ஆவணமாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு சாதனையாளார்களின் வாழ்க்கைக் குறிப்புடன் அவர்களின் சாதனைகளைத் தொகுத்து நூலாக வெளியிட ஆரம்பித்தேன். இதுவரை 14 தொகுப்புகளில் 477 சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்பு, அவர்களது சாதனைகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொகுப்பு நூலகங்களில் வைக்கப்படும். சாதனையாளர்களின் வீட்டில் வைக்க ஒரு பிரதி தரப்படும். சாதனையாளர்களின் சந்ததி எதிர்காலத்தில் சாதனையாளரைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு ஆவணமாக வீட்டில் இருக்குமே?
சாதி, மதம், இனம், மாவட்டம் வேறுபாடின்றி பாராட்டி வருகிறோம்.
பரிந்துரைப்பவர்கள் மூலமும் ஊடகங்களின் மூலமும் சாதனையாளர்கள் குறித்து தெரிய வரும்போது நாங்களாகவே தொடர்பு கொள்ளுவோம்.
சென்னை பாரதி கலைக் கூடம் சார்பில் நடந்த விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார், ஆர்.ஏம். வீரப்பன் என்னை பாராட்டி பொன்னாடை அணிவித்தார்கள் எங்கள் அமைப்பின் சார்பில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், பாலம் கல்யாணசுந்தரம், கல்வியாளர் கிருத்திவாசன் மாணிக்கவாசகர் பதிப்பாளர் ராம.குருமூர்த்தி, எழுத்தாளர் மாயூரன், ஒபாமாவின் ஆலோசனைக் குழுவில் இருக்கும் பாலா போன்ற பலரையும் கவுரவிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.