68 வயது இளைஞர்!

உழைப்பிற்கு வயது தடையில்லை என நிரூபிக்கும் வகையில் 68 வயதிலும் இளைஞரை போல உழைத்து, பொன்னேரி பகுதியில் வீடுகளுக்கு நாளிதழ்கள் விநியோகம் செய்து வருகிறார் முதியவர் ஒருவர்.
68 வயது இளைஞர்!
Updated on
1 min read

உழைப்பிற்கு வயது தடையில்லை என நிரூபிக்கும் வகையில் 68 வயதிலும் இளைஞரை போல உழைத்து, பொன்னேரி பகுதியில் வீடுகளுக்கு நாளிதழ்கள் விநியோகம் செய்து வருகிறார் முதியவர் ஒருவர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புதிய தேரடி தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன். அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நாளிதழ் விநியோகம் செய்யும் முகவராகச் செயல்பட்டு வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த இவர் கடந்த 1969 இல் பிழைப்புக்காக பொன்னேரிக்கு வந்துள்ளார். அப்போது முதன் முதலில் பொன்னேரி பகுதி தினமணி நாளிதழ் முகவராகச் செயல்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் முன்னணி நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களின் முகவராகச் செயல்பட்டு வந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவரது மனைவி இறந்த காரணத்தால், பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னணி நாளிதழ்களின் முகவர் உரிமையை விட நேரிட்டது.

இதன் பின்பும் மனம் தளராத அவர் முன்னணி தமிழ், ஆங்கில நாளிதழ்கள் முகவராக இல்லாத நிலையிலும் தற்போது தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி பத்திரிகைகளின் முகவராகச் செயல்பட்டு வருகிறார்.

அதிகாலை 3 மணிக்கு பொன்னேரி புதிய பஸ் நிலையம் வரும் இவர் (வேலைக்கு யாரையும் வைக்காமல்) பத்திரிகைகளுடன் வரும் இணைப்பு பக்கங்களை தானே உள்ளே வைத்து, அதன் பின்னர் 4 மணியளவில் வீடுகளுக்கு நாளிதழ்கள் விநியோகம் செய்யும் பணியைத் தொடங்குகிறார். இதனையடுத்து நாள்தோறும் காலை 9 மணிவரை அனைத்து வீடுகளுக்கும் நாளிதழ்கள் (சைக்கிள் மூலம்) விநியோகம் பணியைச் செய்து வருகிறார். இதைத் தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை வீடுகளில் மாத சந்தா தொகையை வசூலிக்கும் பணியையும் மேற்கொள்கிறார். கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக இவர் வெயில், மழை என்றும் பார்க்காமல் இப்பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். தற்போது முதுமை காரணமாக சர்க்கரை நோய் உள்ள நிலையிலும் ஓர் இளைஞரை போல உழைத்து வருவது குறித்து சீனிவாசனிடம் கேட்ட போது, ""நாளிதழ்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் தொழிலில் பெரிய அளவு வருவாய் இல்லாத போதும், இத்தொழிலில் உள்ள ஈடுபாடு மற்றும் சேவை மனப்பான்மை காரணமாக இத்தொழிலை இன்னமும் செய்து வருகிறேன்'' என நம்மிடம் அடக்கத்துடன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com