

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை இறுதியில் இந்தியாவில் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட மசூதிக்கு வருகை தர உள்ளார் என்கிற செய்தி கேரளத்து மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
அந்த மசூதியின் சிறப்பு அம்சம் என்ன என்று தெரிந்துவிட்டால், மோடியின் வருகை குறித்தும் புரியவரும்.
கேரளத்தில் கொடுங்கல்லூர் நகரத்தில் இருப்பதுதான் சேரமான் மசூதி. கி.பி.621-இல் ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த மசூதி, உலகிலேயே இரண்டாவதாக ஏற்படுத்தப்பட்டது என்றும், இந்தியாவில் முதல் மசூதி என்றும் பெயர் பெறுகிறது.
இஸ்லாம் மதத்தின் தூதுவர் முகம்மது நபி அவர்கள், உலகின் முதல் மசூதியை மதீனா நகரில் கட்டினார்கள்.
உலகின் இரண்டாவது மசூதி, இஸ்லாம் பிறந்த சவூதி அரேபியாவின் மக்கா, மதீனாவிலிருந்து பல்லாயிரம் கி.மீ. தூரத்தில் இந்தியாவில் அதுவும் கேரளத்தில் இருக்கும் கொடுங்கல்லூரில் ஏன் ஸ்தாபிக்கப்பட வேண்டும்?
கொடுங்கல்லூர் மசூதியின் பெயரில் இருக்கும் சேரமான் என்கிற அடைச் சொல்லில் ஒரு சரித்திரமே அடங்கியுள்ளது.
கி. மு. 400 கால கட்டத்திலேயே கேரளத்தில் குறிப்பாக கொடுங்கல்லூரில், ரோமர், கிரேக்கர், அராபியர், வளைகுடா நாட்டவர்கள், சீனர், யூதர் ஆகியோர் வியாபாரம் செய்து வந்தார்கள். அதன் காரணமாக பன்னாட்டு கலாசாரத்தின் தொட்டிலாக, கொடுங்கல்லூர் மாறியிருந்தது.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் கொடுங்கல்லூரைத் தலைநகராக்கி சேரமான் பெருமாள் என்ற மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். ஒருநாள், மன்னனின் கனவில், வானத்து பூரணச் சந்திரன் இரண்டாகப் பிளந்து விழுவதாகக் காட்சி வந்தது. சேரமான் மனதுக்குள் பலவிதக் குழப்பங்கள் ஏற்பட்டன. சந்திரன் இரண்டாகப் பிளந்து விழுவதாகக் கனவு எனக்கு ஏன் வரவேண்டும்? கனவின் பொருள் என்ன? எதை உணர்த்த இந்தக் கனவு வந்தது? இதைப் பற்றி அமைச்சர்களிடம், பல ஜோதிடப் பண்டிதர்களிடம் அரசன் விளக்கம் கேட்க, அவர்கள் தந்த விளக்கம், மன்னனின் சந்தேகங்களைப் போக்குவதாக இல்லை.
உலகின் முதல் மனிதன் என்று சொல்லப்படும் ஆதமின் கால் பாதங்கள் பதிந்த இடம் இலங்கையில் இருக்கிறது. அதைத் தரிசிக்க வந்த அராபியர்கள், கொடுங்கல்லூரில் ஓய்விற்காக இறங்க .... அவர்களுக்கு மன்னனின் சந்தேகம் தெரிய வர ... விளக்கம் தருவதற்காக மன்னனைச் சந்தித்தார்கள்.
""அரபு நாட்டில் இறைத் தூதர் முகம்மது நபி அவர்கள் இஸ்லாம் என்னும் புதிய மதத்தைப் பரப்பி வருகிறார்கள். சந்திரனை வைத்துத்தான் அவர்கள் மாதங்களைக் கணக்கிடுகிறார்கள். புதிய மதம் தோன்றியிருப்பதை சூசகமாக உங்களுக்கு உணர்த்தவே சந்திரன் இரண்டாகப் பிளந்து விழுவதாகக் கனவு உங்களுக்கு வந்திருக்கிறது'' என்று விளக்கம் சொல்ல, மன்னனுக்கு அந்த விளக்கம் ஏற்புடையதாக இருந்தது.
""நீங்கள் தந்த விளக்கம் பொருத்தமாக எனக்குத் தெரிகிறது. நான் முகம்மது நபி அவர்களைச் சந்திக்க வேண்டும்... என்னை அரேபியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள்...'' என்று மன்னர் அந்த அராபிய வணிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
""மன்னா... நாங்கள் இலங்கை சென்று, ஆதம் கால் பாத தரிசனம் நடத்தி மீண்டும் கொடுங்கல்லூர் வருவோம். நீங்கள் அதற்குள் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்து தயாராக இருங்கள்... உங்களை அராபியாவிற்கு அழைத்துச் செல்கிறோம்'' என்றார்கள்.
""அதுவும் சரிதான்...'' என்று ஒப்புக்கொண்ட மன்னன், தனது ராஜ்ஜியத்தைப் பிரித்து, தனது சந்ததியர் மன்னர்களாக ஆட்சி செய்ய கொடுத்துவிட்டு, பயணத்திற்குத் தயாரானார்.
இலங்கையிலிருந்து திரும்ப வந்த அராபியர்களுடன், மன்னர் அராபிய பயணம் செய்தார். மதீனா சென்று முகம்மது நபி அவர்களைச் சந்தித்து, இஸ்லாமியராகி அங்கு கொஞ்ச நாள் தங்கி, மீண்டும் தாயகம் வரும்போது, பயணத்தில் பெருங்காய்ச்சல் தாக்க ஓமானில் ஓய்வு எடுக்க வேண்டி வருகிறது. தான் பிழைக்க மாட்டோம் என்று தெரிந்ததும், தன்னுடன் துணையாக வந்த மாலிக் பின் தினார் என்பவரிடம் தனது சந்ததிகளுக்கு கடிதங்களைக் கொடுத்து அனுப்பி வைக்கிறார். கடிதங்களில், "தான் இஸ்லாம் மதத்தைத் தழுவிவிட்டதாகவும், கேரளத்தில் இஸ்லாம் மதத்தவர்கள் இறை வழிபாடு நடத்த மசூதிகள் கட்டிக் கொள்ள அனுமதியும், உதவிகளையும் செய்ய வேண்டும்' என்று எழுதியிருந்தார். சேரமான் பெருமாள் ஓமானின் துபார் என்ற இடத்தில் இறக்க அங்கேயே மன்னனின் பூத உடலை இஸ்லாமிய முறையில் அடக்கம் செய்கின்றனர்.
மன்னனின் கடிதங்களுடன், மாலிக் பின் தினார் தனது குழுவினருடன் கடல் மார்க்கமாக கொடுங்கல்லூர் வந்திறங்கி, ஆட்சி செய்யும் சேரமான் பெருமாளின் வாரிசைச் சந்தித்து, மன்னனின் கடிதங்களைச் சேர்ப்பிக்க ....மன்னனின் விருப்பத்தை நிறைவேற்றச் சம்மதித்தார்கள்.
கொடுங்கல்லூரில், கவனிக்க, வழிபட யாருமில்லாமல் கிடந்த பழைய புத்த கோயிலை மசூதியாக மாற்றிக் கொள்ள அனுமதி கிடைக்கிறது. இந்த புத்த விகாரம், கேரள கலாசாரத்துடன் இணைந்து நிற்கும் நாலு கெட்டு வடிவமைப்புள்ள கட்டடமாக இருந்தது. அதைப் புதுப்பித்து, மசூதியாக மாற்றி ஐந்து வேலை தொழுகைகள் நடத்தப்பட்டு வந்தன. இது நடந்தது கி.பி. 621இல். இந்த மசூதி ஸ்தாபிக்கப்பட்ட பிறகே, ஈராக், எகிப்து, சிரியா, துனிசியா போன்ற மற்ற நாடுகளில் இதர மசூதிகள் உருவாக்கப்பட்டன. கொடுங்கல்லூரைத் தொடர்ந்து, கேரளத்தின் இதர பாகங்களிலும், கர்நாடகத்தின் மங்களூரிலும் மசூதிகள் தோன்றின.
இந்த சேரமான் மசூதி பலமுறை புனரமைப்பு செய்யப்பட்டு, அதேசமயம் மசூதியின் உள் பகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் பழமை அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது. வெளிப்பகுதி மட்டுமே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மசூதியின் உள்ளே சமயச் சொற்பொழிவு நடத்தும் மிம்பர் எனப்படும் மேடை கலை நுணுக்கத்துடன் மரத்தில் செய்யப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் இரவு நேர வழிபாட்டிற்கு (தொழுகைக்கு) வெளிச்சம் வேண்டும் என்பதற்காக பெரிய விளக்கு ஒன்றைத் தொங்கவிட்டு திரியில் எண்ணெய் ஊற்றி எரியச் செய்தார்கள். அந்த தீப விளக்கு, அன்று எந்த இடத்தில் இருந்ததோ, அதே இடத்தில் இன்றைக்கும் இருக்கிறது. அந்த விளக்கில், கொடுங்கல்லூர் ஜுமா பள்ளி என்று எழுதப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிவாசலின் கூரை தேக்கு மரத்தால் ஆனது. கலை நுணுக்கத்துடன் செய்யப்பட்டிருக்கும் கொத்து வேலை அபாரம். அதனையும் நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள்.
இந்த மசூதியிலிருந்து 2 கி.மீ. தூரத்தில்தான் புகழ்பெற்ற கொடுங்கல்லூர் பகவதி என்று அழைக்கப்படும் கண்ணகி கோயிலும் திருவஞ்சைக்களம் என்று அழைக்கப்படும் சிவத்தலமும் இருக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக்களம் சிவாலயத்தில்தான் ஈசனுடன் கலந்தார் என்பதும், திருக்கயிலாய ஞான உலா எழுதிய சேரமான் பெருமாள்தான் சுந்தரமூர்த்தி நாயனாரின் நண்பராகவும், வஞ்சி மாநகரை ஆண்ட சேரமன்னராகவும் இருந்தார் என்றும் சிலரால் கூறப்படுகிறது. சுந்தரர் நண்பரான சேரமான் பெருமாள் மிகச்சிறந்த சிவபக்தர். பன்னிரு திருமுறையில் பதினோராம் திருமுறையில் இவர் பாடல்கள் உள்ளன. 63 நாயன்மார்களுள் இவரும் ஒருவர் என்பதால் இவர் வேறு; அவர் வேறு என்றும் கூறுவர்.
கேரள அரசின் சுற்றுலாத் துறை, இந்த சேரமான் மசூதியை ஒரு சுற்றுலாத்தளமாக (ற்ர்ன்ழ்ண்ள்ற் ஹற்ற்ழ்ஹஸ்ரீற்ண்ர்ய்) பல ஆண்டுகளாக விளம்பரம் செய்து வருவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
2015 ஜூலை கடைசியில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி, பாதுகாப்பு கருதி காவலர் குழு ஒன்று மசூதிக்கு வந்து பார்வையிட்டு, வெளியே போக வர எத்தனை வாசல்கள், எத்தனை வழிகள் உள்ளன என்று கண்காணித்து சென்றுள்ளது.
சரித்திர, கலாசார, மத நல்லிணக்கத்தின் அடையாளமாக, பதிவாக நிற்கும் சேரமான் ஜுமா மசூதிக்கு மோடியின் வருகை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.