ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்!

எனக்கு கடந்த 2012 டிசம்பர் மாதம் ஆஞ்சியோ செய்து ஸ்டெண்டு பொருத்தி உள்ளனர்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்!
Updated on
2 min read

எனக்கு கடந்த 2012 டிசம்பர் மாதம் ஆஞ்சியோ செய்து ஸ்டெண்டு பொருத்தி உள்ளனர். மன அழுத்தத்தால் சுருக்கம் ஏற்பட்டு அடைப்பு ஏற்பட்டுள்ளது. எடை 94 கிலோகிராம். வயது 56. வருடத்திற்கு 6 அல்லது 7 முறை மது அருந்தும் பழக்கமுண்டு. ஏழு வகையான ஆங்கில மருந்துகள் தொடர்ந்து சாப்பிடுவதால் கை கால் வலி, மூட்டு வலி, வாய்ப்புண், தலைசுற்றல், வாயுத்தொல்லை, சோர்வு போன்ற பிரச்னைகள் உள்ளன. இதிலிருந்து விடுபட ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?

அர்ஜுனன், பெருந்துறை.

மன அழுத்தத்தால் தங்களுக்கு ஏற்பட்டுப்போன இந்த இதய உபாதைக்கு நிவாரணமாக, மன அழுத்தத்தை ஏற்படுத்திய பிரச்னைகளிலிருந்து விடுபட வேண்டும். ஓர் உபாதைக்கான காரணத்தைத் தொடர்ந்தால் அந்த உபாதையானது மேலும் விஸ்வரூபம் எடுக்கக்கூடும். உடல் எடையும் மிக அதிக அளவில் உள்ளது. இதயப் பகுதியைச் சார்ந்த "வியானன்' என்ற வாயு, உடலெங்கும் வேகமாகச் சென்று திரும்பக்கூடியது. அங்க அசைவுகள், கண் இமை மூடுதல், திறத்தல் போன்ற அபாரமான செயல்பாடுகளின் திறனைத் தன்னிடம் கொண்டுள்ள இந்த வியான வாயுவை நாம் திறம்பட பாதுகாக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.

வாய்ப்புண், தலைசுற்றல் போன்றவை பித்தத்தினுடைய சேர்க்கை இல்லாமல் ஏற்படாதென்பதால் தங்களுக்கு வாயு மற்றும் பித்த தோஷங்களின் சீற்றம் நன்கு ஏற்பட்டுள்ளதாகப் புலப்படுகிறது. அதனால் நீங்கள் உணவில் இவ்விரு தோஷங்களின் சீற்றத்தை ஏற்படுத்தும் காரமான சுவையை அறவே நிறுத்த வேண்டும். கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கொண்ட உணவுகள், பித்த சீற்றத்தை அடக்கக் கூடியவையாக இருந்தாலும், வாயுவைக் குடலில் அதிகப்படுத்தும் என்பதால் இந்தச் சுவைகளை மிதமான அளவிலும், வெதுவெதுப்பாகவும் பயன்படுத்த வேண்டும். இனிப்புச் சுவை வாயு பித்தத்தைக் கண்டித்து அடக்கக் கூடியதாக இருந்தாலும், உடல் பருமனை அதிகப்படுத்தும். புளிப்பும் உப்புச் சுவையும் பித்த சீற்றம் - வாயுவை மட்டுப்படுத்தும் என்பதால், மிதமாகப் பயன்படுத்தலாம்.

மனப்பதட்டம் ஏற்படுத்தும் சொற்களைப் பயன்படுத்தாதிருத்தலே நலம். அலுவலகத்தில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளுக்குத் தக்க போக்கிடம் காட்டி அவற்றிலிருந்து விலகி இருக்க முயற்சிக்கலாம். நீங்கள் நடைப்பயிற்சி செய்வதாகவும், சூர்ய நமஸ்காரம் கற்றுக் கொள்ளப் போவதாகவும், ஈஷா - ஷாம்பவி யோகப் பயிற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது மிகவும் சிறப்பான செயல்பாடுகளே. அவற்றைத் தொடர்ந்து செய்து வரலாம். படுக்கையில் மல்லாந்து படுப்பதும், இடது பக்கம் சரிந்து படுப்பதும் நலம். மதுப்பழக்கத்தைத் தவிர்க்கலாம்.

உடல் எடையைக் குறைத்து, வாயு பித்தங்களைச் சமநிலைப்படுத்தி, இதயத்தை வலுவூட்டி, மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆயுர்வேத மருந்துகள் தங்களுக்கு நல்ல பலனை அளிக்கலாம். அந்தவகையில் தசமூலம் கஷாயம், பிரபாகரவடி, ஹிங்குவசாதி சூரணம், தான்வந்திரம் மற்றும் வாயுகுளிகை, சிருங்கீபற்பம், அர்ஜுனாரிஷ்டம் போன்றவை பயன் தரலாம். ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி இவற்றில் எது தங்களுக்குப் பொருந்துமோ அதைப் பயன்படுத்தவும்.

மேற்குறிப்பிட்ட உணவு - செயல் - மருந்து ஆகியவை சீரான வகையில் ஒன்றுசேரும் பட்சத்தில், நீங்கள் குறிப்பிடும் உபாதைகளின் கடுமையானது நன்றாகக் குறையலாம். இதயத்தையும் வலுப்படுத்தலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com